இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

புத்தக அன்பளிப்பும் நட்பும்: சுந்தரபாண்டியனின் நினைவூட்டல்

எனக்கு பரமன் பச்சைமுத்து எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாகத் தந்தவர் யார் என்கிற புதிருக்கு விடை கிடைத்து விட்டது. "தினமணி' விழுப்புரம் பதிப்பின் மூத்த பக்க வடிவமைப்பாளராக இருக்கும் சுந்தரபாண்டியனின் நண்பர் ஸ்ரீதர், "லேப்டாப் ஜீனி' என்கிற பெயரில் மடிக் கணினி பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னால் எனது வீட்டுக்கு அருகே முகப்பேர் கிழக்கில் அதன் கிளையைத் திறந்தார். அந்தத் திறப்பு விழாவுக்குப் போனபோது, அந்தப் புத்தகங்கள் எனக்குத் தரப்பட்டன என்று சுந்தரபாண்டியன் நினைவூட்டினார். ஸ்ரீதருக்கும் நன்றி, நினைவுபடுத்திய சுந்தரபாண்டியனுக்கும் நன்றி!

---------------------------------------------------------------

தனக்கு ஏதாவது அரிய, பழைய புத்தகங்கள் கிடைத்தால் அதை எனக்கு அனுப்பித் தருவார் "முல்லை' பழனியப்பன் என்று முன்பே ஒருமுறை தெரிவித்திருக்கிறேன். 1949-இல், அதாவது இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னால், "கம்பன் அடிப்பொடி' சா.கணேசன் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த சிறிய புத்தகம், "கம்பனிலிருந்து நடன நாடகப் பாடல்கள்'. காரைக்குடி கம்பன் கழகத்தால் வெளியிடப்பட்ட சிறு நூல் அது.

கம்ப காவியம் என்பது இயல், இசை, நாடகம் என்கிற முத்தமிழின் சுவையையும் உள்ளடக்கியது. அதில் நடனக்கலையும் அடக்கம். கம்ப காதையில் உள்ள தேர்ந்தெடுத்த சில பாடல்களை ராகமும், தாளமும் அமைத்து, நாட்டிய நாடகமாக மேடையில் அரங்கேற்றும் விதத்தில் தொகுத்திருக்கிறார் சா.கணேசனார்.

அத்துடன் நின்றுவிடவில்லை அவர். காரைக்குடி கம்பன் விழாவில், அந்தப் பாடல்களுக்கு தேவகோட்டை தமிழிசைப்பள்ளி மாணாக்கர்களை நடனமாட வைத்து ரசித்திருக்கிறார். அந்தப் பழைய புத்தகத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கும் "முல்லை' பழனியப்பன், 1949-இல் வெளியான புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்.

"தோள் கண்டார், தோளே கண்டார்', "ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீபோய்', "ஊண் இலா யாக்கை பேணி, உயர் புகழ் சூடா (து) உன் முன்' போன்ற பாடல்களுக்கு யாராவது ஆடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். கம்பன் அடிப்பொடியின் ரசனையை வியக்கிறேன்.

---------------------------------------------------------------

கம்பன் குறித்தும், காரைக்குடி குறித்தும் எழுதும்போது, ஜனவரி மாதம் கிருங்கை சேதுபதி என்னிடம் தந்த அவரது "கம்பன் இழைத்த காவியம்' புத்தகம் நினைவுக்கு வந்தது. தினமணி "மாணவர் மலர்' தயாரிப்பு குறித்த கலந்துரையாடலுக்காகக் கோவைக்குப் பயணிக்கும்போது, படிப்பதற்காக அந்தப் புத்தகத்தைக் கையோடு எடுத்துக் கொண்டேன்.

ஆண்டுதோறும் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின்போது, கம்பன் தொடர்பான ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடுவது என்று விரதம் பூண்டிருக்கிறார் கிருங்கை சேதுபதி. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் புத்தகம்தான் "கம்பன் இழைத்த காவியம்'.

"இழை', "இழைத்த' என்கிற வார்த்தைகளைக் கம்பன் பல இடங்களில் கையாள்கிறான். "இழைத்தல்' என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு, பல்வேறு விளக்கங்களைப் பதிவு செய்து, குறளை முன்னிறுத்தி விளக்கி இருப்பது ரசிக்கத்தக்கது. "இழைக்கின்ற விதி முன் செல்ல', "எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்', "உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ?' போன்ற பல மேற்கோள்களைக் காட்டி, தமது காவியத்தைக் கம்பன் எப்படி இழைத்து, இழைத்து மெருகேற்றி இருக்கிறான் என்பதைப் பதிவு செய்கிறார்.

"இழை' என்கிற வார்த்தையை மிக லாகவமாகக் கம்பன் கையாண்டிருக்கும் ஒரு பாடல் விடுபட்டிருக்கிறது. சடாயுவின் "வம்பிழை கொங்கை வஞ்சி...' பாடல்தான், விடுபட்ட அந்த "இழை'.

அணிந்துரை வழங்கி இருப்பவர், கம்ப காதையில் ஆழங்காற்பட்ட புலமைமிக்க முனைவர் தெ.ஞானசுந்தரம். ""முன்னோடி ஆய்வாளர்கள் தந்த பனுவல்களும், அவர்கள் ஆற்றிய உரைகளைச் செவிமடுத்த அனுபவமும் சேர்ந்து தந்த அனுபவத்தின் வெளிப்பாடு இந்நூல். கால் நூற்றாண்டு காலமாய்க் கம்பனை ஆய்ந்தும், கம்பனில் தோய்ந்தும், சான்றோர் உரைத்த நயங்களைச் செவிமடுத்தும், படித்தும் பெற்ற பயன்களைக் கொண்டு "இழைத்த' எழுத்துச் சிற்பம் இது'' என்கிற பேராசிரியர் தெ.ஞா.வின் சான்றிதழுக்கு மேல், யார்தான் என்ன சொல்லிவிட முடியும்? சந்தனக் கட்டையை இழைப்பதுபோல, கம்ப காவியத்தை இழைத்து வாசமிகு வாசிப்புக்கு வழங்கி இருக்கிறார் முனைவர் கிருங்கை சேதுபதி.

---------------------------------------------------------------

சில வாரங்களுக்கு முன்னால் கே.பி.சுந்தராம்பாள் பற்றிய புத்தகம் குறித்து எழுதியிருந்தேன். நெல்லையில் இருந்து நண்பர் செ.திவான் அவர் எழுதிய சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா குறித்த புத்தகத்தை அனுப்பித் தந்திருக்கிறார்.

கே.பி.எஸ். புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்படாத கிட்டப்பா-சுந்தராம்பாள் காதல் குறித்தும், உறவு குறித்தும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறார் செ.திவான்.

கிட்டப்பாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆசிபெற்றது, கிட்டப்பாவுக்கும் "நாகஸ்வர சக்கரவர்த்தி' டி.என். ராஜரத்தினம் பிள்ளைக்கும் இடையேயான நட்பு, ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய கிட்டப்பாவின் சரித்திரம் என்று சுவாரஸ்யமான தொகுப்பு இந்தப் புத்தகம்.

ஒரு சின்னக் குறையை அடுத்த பதிப்பில் திவான் திருத்தி வெளியிட வேண்டும் - "எவரனி' என்கிற தியாகராஜ கீர்த்தனை "எவரடி' என்று அச்சாகி இருப்பதுபோல, வேறு சில எழுத்துப் பிழைகளும் இருக்கின்றன...

கவிஞர் பரிமள முத்து எழுதியது என்கிற குறிப்புடன் எனக்கு குறுஞ்செய்தியாக வேடசந்தூரில் இருந்து நேதாஜி மூக்கையா என்கிற வாசகர் அனுப்பி தந்திருக்கும் ஹைக்கூ இது...

இருந்தால் மேடு

இல்லாவிட்டால் பள்ளம்

அதன் பெயர் வயிறு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com