சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

சிலப்பதிகாரத்தில் கோவலன்-கண்ணகியின் பயணக் காட்சிகள்
சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

தமிழாய்ந்த தமிழ்ப்பெருமகனார்கள் ஆய்ந்தறிந்த காப்பியங்களில் கருத்தைக் கவர்ந்தது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையில் வீட்டை விட்டும் பூம்புகாரை விட்டும் வெளியேறிய கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரையம்பதியை நோக்கி நடைப்பயணமாகச் செல்கின்றனர்.

திருவரங்கத்தை கடந்து சோழ நாட்டின் உறையூர் பகுதிக்குச் செல்லும்போது கோவலன்-கண்ணகிக்கு கவுந்தியடிகள் ஒருநாட்டின் வளத்திற்கும் வானிலுள்ள கோளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறுகிறார்.

சனி புகைந்தாலும், தூமகேது தோன்றினாலும், வெள்ளியாகிய சுக்கிரன் தென்திசையில் சென்றாலும் காற்று மோதும் குடகின் உச்சியிலே கடுங்குரலோடு இடி முழங்கினாலும் மழையால் மண் வளம்பெறும்.

குடகு மலையில் பெய்த மழை பல பண்டங்களுடன் கடல் அலையை எதிர்த்து மோதும் வண்ணம் பூம்புகாருக்கு விரைந்துவந்து மதகுவாய்த்தலைக்கண் கதவிலே காவிரிப் புதுநீர் வரும் ஒலி எங்கும் கேட்கும். ஒலி மிகுந்த நீர் ஏற்றமும் இறைகூடையும் எங்கும் கேட்கும். வயல்களில் செந்நெல்லும் செங்கரும்பும் சூழ்ந்த இடங்களில், நீர்நிலைகளில் உண்டாகியுள்ள இடங்களில் தாமரை மலர்கள் இலையுடன் பசுமையாயிருக்கும்.

சம்பங்கோழியும், கனைக்கும் குரலுடைய நாரையும், சிவந்த கால்களையுடைய அன்னப்பறவையும், பசிய கால்களையுடைய கொக்கும், கானாங்கோழியும், நீரிலே நீந்திக் களிக்கும் நீர்க்காக்கையும், உள்ளானும், குளுவையும், பெருநாரையும், வெற்றி காணப் புறப்பட்ட வேந்தர் இருவர் சேர்ந்த போர்க்களம் போல பலவாறாக ஒலிக்கும் ஓசையும் இடையறாது கேட்டுக்கொண்டேயிருக்கும் என கவுந்தியடிகள் பயணக் களைப்பு தீர சொல்லிக் கொண்டே வருவதில் நாட்டின் வளமும் அவ்வளத்திற்கு விண்ணிலுள்ள கோள்களின் நிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதும் தெரிகிறது.

கவுந்தியடிகள் கூற்றின்வழி முன்னோரும் ஞானியரும் பெற்றிருந்த விண்ணறிவும் மண்ணறிவும் புலப்படுகிறது.

கரியவன் புகையினும், புகைக்கொடி

தோன்றிடினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம்படரினும்

கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றோடும்

சூல்முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப

குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு

கடல்வளன் எதிர கயவாய் நெரிக்கும்

காவிரிப்புதுநீர் கடுவரல் வாய்த்தலை

ஓஇரந்து ஒலிக்கும் ஒலியே அல்லது

ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை ஏத்தமும்எ

ஓங்குநீர் பிழாவும் ஒலித்தல் செல்லாக்

கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கிற்

பழனத்தாமரைப் பைம்பூங் கானத்து

கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்

செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்

கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்

உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்

வெல்போர் வேந்தர் முனையிடம் போல

பல்வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும்...

(பு. 10, 102-119)

(கரியவன்-சனிக்கிரகம்)

கவுந்தியடிகளின் பேச்சிலுள்ள கருத்துச் செறிவைக் கேட்டுக் கொண்டே கோவலனும் கண்ணகியும் புலிக்கொடி பறக்கும் தேரினையுடைய கொற்றவன் ஊர்களைக் கண்டு மகிழ்ந்து நடந்தனர்.

ஒரு காப்பியப் படைப்பு அந்த மண்ணின் கலாசாரத்தையும் மனிதர்களின் அறிவியல் மற்றும் மண்-விண்சார்ந்த அறிவையும் பிரதிபலிக்க வேண்டுமென்பதை கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி நடைப்பயணத்தின் மூலம் இளங்கோவடிகள் ஆசிரியப்பா மூலம் அழகுற விவரித்திருப்பது வியப்புக்குரியது.

- உ. இராசமாணிக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com