இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

மகாகவி பாரதியார் விருது வழங்க ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

சமீபத்தில் தில்லி சென்றிருந்தபோது குடியரசு முன்னாள் தலைவர் மேதகு ராம்நாத் கோவிந்தை சந்தித்தேன். அவரை நான் சந்தித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதுகுறித்துப் பின்னால் தெரிவிக்கிறேன். அதற்கு முன்னால் மேதகு ராம்நாத் கோவிந்த் பற்றி ஒரு முக்கியமான செய்தியை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இன்னொரு பின்னணி (பெருமை) உண்டு.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தில்லி கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராக நான் செல்லும்போது அவரைப் பார்த்திருக்கிறேன். அருகில் இருந்த வித்தல்பாய் படேல் ஹவுஸில் அவரது அலுவலகம் இருந்தது.

அவசரநிலை அகற்றப்பட்டு, தேர்தலில் ஜனதா கட்சி 1977-இல் ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். எல்லா விஷயங்களிலும் நேர்மை, நாணயம் மட்டுமல்லாமல் ஒழுங்கும், கண்டிப்பும் நிறைந்தவர் மொரார்ஜி தேசாய் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்றுவது என்பது ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட் (இதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை ஒன்று வேண்டுமே, உதவுங்களேன்) உடன் பணியாற்றுவது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது உதவியாளராகப் பணியாற்றத் தேர்ந்தெடுத்த மனிதர், அப்போது வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த ராம்நாத் கோவிந்த். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்காக எந்தவித ஊதியமும் பெறாமல் வழக்குகளைத் தானே முன்வந்து நடத்தி வந்த ராம்நாத் கோவிந்த், பிரதமர் மொரார்ஜி தேசாயின் தேர்வாக இருந்தார் என்பது பலரும் அறியாத உண்மை. மொரார்ஜி தேஹசாயின் உதவியாளராக இருந்தவர் என்பதாலேயே எனக்கு அவர் மீது மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டிருந்தது.

இனி விஷயத்துக்கு வருவோம். நான் குடியரசு மேனாள் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்தமுறை சந்தித்ததற்கு காரணம் உண்டு. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஆற்றிய பல உரைகளில் மகாகவி பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். பாரதியார் மீது அவருக்கு அளப்பரிய மரியாதை உண்டு என்பது மட்டுமல்ல, பாரதியார் குறித்த ஆங்கில, ஹிந்தி புத்தகங்கள் பல வாசித்தும் இருக்கிறார் அவர்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் தினமணி நாளிதழின் மகாகவி பாரதியார் விருது அவரால் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கத்தான் நான் அவரைச் சந்தித்தேன். எட்டயபுரம் குறித்தும், அங்கே நிறுவப்பட்ட பாரதியார் மணிமண்டபம் குறித்தும், ஆண்டுதோறும் பாரதியாரின் இல்லத்திலிருந்து மணிமண்டபத்திற்கு பாரதி அன்பர்கள் ஊர்வலமாகச் செல்வது குறித்தும் தெரிவித்தபோது அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டு கலந்துகொள்ள இசைவு தெரிவித்திருக்கிறார் மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அதைவிட மகிழ்ச்சியான செய்தி என்னவாக இருக்க முடியும்!

-------------------------------------------------------------------------------------------------------

நேற்று மாலையில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 97-ஆவது ஆண்டு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாருடன் கலந்துகொண்டேன். முனைவர் தெ.ஞானசுந்தரம், பேராசியர்கள்அரங்க. ராமலிங்கம், எம்.ராமசந்திரன், சி.இராஜேந்திரன் உள்ளிட்ட பல தமிழறிஞர்களை அங்கே சந்திக்க முடிந்தது.

பெரியவர் சிவராமகிருஷ்ணன் இந்த ஆண்டு நம்மிடையே இல்லை என்கிற குறையே தெரியாத வண்ணம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருக்கும் செயலாளர் வழக்குரைஞர் கனகசபாபதிக்கு நன்றி. தென்காசி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றதால் எனது பள்ளி, கல்லூரி தோழர்களை சந்திக்க முடிந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆசைதீர அரைமணி நேரம் குளிக்கவும் முடிந்தது!

-------------------------------------------------------------------------------------------------------

மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் டி.கே.ரங்கராஜன் எழுதி இருக்கும் சுயசரிதை "தொடர் ஓட்டம்'. தொழிற்சங்கவாதியாக, இடதுசாரி சிந்தனையாளராக, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக, நாடாளுமன்றவாதியாக அவர் நடத்திய தொடர் ஓட்டத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

தனது இளமைப் பருவத்தில் தொடங்கி எப்படி கம்யூனிஸ சிந்தனைக்கு ஈர்க்கப்பட்டார் என்கிற சுவாரசியமான பதிவுடன் தொடங்குகிறது அவரது வாழ்க்கை நிகழ்வுகளின் நினைவுகள். "பழனியப்பன், கருப்பையா, உமாநாத், கல்யாணசுந்தரம் இவர்களையெல்லாம் பார்த்ததும், கேட்டதும் எனக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. இவர்கள் நல்லவர்கள். இவர்கள் இருக்கும் இடம் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் கட்சிக்குள் வந்தேன்' என்கிறார் அவர்.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய காங்கிரஸ் கட்சியின் மீது போடப்படாத சதி வழக்குகள் ஏன் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பிரிட்டிஷாரால் போடப்பட்டது என்கிற கேள்வி எனக்கு நீண்ட நாளாக உண்டு. அதற்கு விடை அளிக்கிறார் தோழர் டி.கே.ஆர். - "கம்யூனிஸ்ட் சிந்தாந்தம் வெற்றிபெற்று 1917-இல் சோவியத் யூனியனில் அமைந்த சோஷலிஸ அரசின் ஆதரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்தது என்பதுதான் காரணம்.'

தோழர் டி.கே.ஆர். இரண்டுமுறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு பெற்றவர். "தேர்தல் என்று வருகிறபோது நம்மை மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் மட்டும் எதிர்த்து நிற்பதில்லை. ஜாதி, மதம், முதலாளித்துவம், நிலபிரபுத்துவம், முதலாளித்துவ ஊடகம் ஆகியவையும் எதிர்த்து நிற்கின்றன' என்பது அந்த அரசியல் அனுபவசாலியின் வாக்குமூலம்.

கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சி, பிளவு, சோதனைகள், சாதனைகள், அதன் தலைவர்கள் குறித்த பதிவுகள், தனது தொழிற்சங்க அனுபவங்கள் என்று தோழர் டி.கே. ரங்கராஜனின் வாழ்க்கை நிகழ்வுகளும் நினைவுகளும் "தொடர் ஓட்டம்' என்கிற சுயசரிதையில் பதிவாகி இருக்கின்றன.

-------------------------------------------------------------------------------------------------------

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 97-ஆவது ஆண்டுவிழா நிகழ்வுக்கு, கன்னியாகுமரி விரைவு ரயிலில் சென்னையிலிருந்து நெல்லை சென்றுகொண்டிருந்தேன். எதிர் இருக்கைப் பயணி அடிக்கடி கண்விழித்து என்னையும் எனது இருக்கைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது பெட்டியையும் பார்த்த வண்ணம் இருந்தார். அதைப் பார்த்தபோது, எப்போதோ நான் படித்த கவிதையொன்று நினைவுக்கு வந்தது. யார் எழுதியது என்று நினைவில்லை.

அடிக்கடி கண்விழித்து

பத்திரமாக இருக்கிறதா

என்று பார்த்துக் கொண்டேன்

எனது சூட்கேஸையும்

எதிர் இருக்கைப் பயணியையும்...

அவரது கண்களும்

அடிக்கடி பதிந்தன

என்மீதும் தனது

சூட்கேஸ் மீதும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com