சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

திருமூலரால் திருமந்திரம் இயற்றப்பட்ட மண்ணான திருவாவடுதுறையில் மெய்கண்டார் மரபிலே வந்த நமசிவாய தேசிகர் சைவத் திருமடத்தை நிறுவினார்.

இத்திருமடத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், துறைசை ஆதீனம் என்னும் பெயர்களில் அழைப்பர். இவ்வாதீனத்தைச் சேர்ந்த தேசிகர்கள், தம்பிரான்கள், வித்துவான்கள் ஆகியோர் நூல்

கற்றல், மாணாக்கருக்குக் கற்பித்தல், நூல்களை இயற்றுதல், நூல்களுக்கு உரை எழுதுதல், நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தல் போன்ற பல்வேறு பணிகளைத் தமிழுக்காவும் சைவத்திற்காகவும் சிறப்பாகச் செய்து வந்துள்ளனர்.

குறிப்பாக இலக்கணம், இலக்கியம், சமயம் எனப் பல துறைகளில் புலமையுடன் விளங்கிய மாதவ சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்குத் திராவிட மாபாடியம் என்னும் விருத்தியுரை இயற்றியதால் அவரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் குலதெய்வமாகப் போற்றுகின்றனர். அவர் இளம்பூரணர், சேனாவரையர்,

நச்சினார்க்கினியர் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு எழுதிய உரைகளைக் கற்ற பின்னர் மாணாக்கர்களும் அவ்விலக்கணத்தின் நுட்பங்களை உணர வேண்டும் என்பதற்காக அந்நூலின் பாயிரத்திற்கும் முதல் சூத்திரத்திற்கும் விருத்தியுரை ஒன்றை இயற்றியுள்ளார்.

பழந்தமிழ் நூல்களை அச்சில் பதிப்பிக்கும் பணியில் திருவாவடுதுறை ஆதீனம் ஈடுபாடு கொண்டிருந்தது என்பதற்கு அவ்வாதீனத்து அம்பலவாண தம்பிரான் 1812-ஆம் ஆண்டு திருக்குறள், திருவள்ளுவ மாலை, நாலடியார் ஆகியனவற்றை இணைத்து மாசத் தினசரிதை அச்சுக்கூடத்தில் வெளியிடப்பட்ட நூலுக்குத் திருத்தங்களைச் செய்து கொடுத்ததையும் சுப்பிரமணிய தேசிகர் ஆணையிட்டு அவ்வாதீனத்தால் நாவலர் என்னும் பட்டத்தைப் பெற்ற ஆறுமுக நாவலர் 1866-ஆம் ஆண்டு சிவஞான முனிவர் இயற்றிய இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திர விருத்தி ஆகிய நூல்களை ஒன்றாக இணைத்துப் பதிப்பித்ததையும் சான்றாகச் சுட்டலாம்.

தமிழுக்குச் செம்மொழி என்னும் தகுதியை வழங்கியது பழந்தமிழ் நூல்களே. அந்நூல்களை அச்சில் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டோர்க்கு ஓலைச்சுவடிகளைச் கொடுத்து உதவியது திருவாவடுதுறை ஆதீனமாகும். அவ்வாதீனத்தின் ஓலைச்சுவடிகளான தொல்காப்பியம், கலித்தொகை

ஆகியவற்றை சுப்பிரமணிய தேசிகர் கொடுத்து உதவியதை சி.வை. தாமோதரம்பிள்ளை தாம் பதிப்பித்த நூல்களின் பதிப்புரையில் நன்றியோடு கூறியுள்ளார்.

சி.வை.தாமோதரம் பிள்ளையைப் போலவே பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் என்பதோடு ஆதீனத்தின் மடாதிபதியாக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரோடு நெருங்கிப் பழகியவர். அதன் காரணமாகச் சிலப்பதிகாரம் (1892), புறநானூறு (1894), மணிமேகலை (1898), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), பரிபாடல் (1918) ஆகிய பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தபொழுது அந்நூல்களுக்குரிய பாடவேறுபாடுகளை ஒப்பு நோக்கிப் பார்ப்பதற்குப் பெரிதும் திருவாவடுதுறை ஆதீனச் சுவடிகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

தமிழின்பால் கொண்ட பற்றால் சைவமல்லாத பிற சமயச் சுவடிகளையும் திருவாவடுதுறை ஆதீனம் பேணிவந்தது என்பதற்குப் பெளத்த சமயக் காப்பியமான மணிமேகலை சுவடி அங்கிருந்து உ.வே.சாமிநாதையருக்குக் கிடைத்தமையைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

கந்தசாமியார் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் பயின்றவர். அவர் ஆதீனத்தில் பயின்ற காலத்தில் தொல்காப்பியம் - சேனாவரையர்

உரையின் பாடத்தைக் கேட்டார். இச்சேனாவரையர் பாடத்தை முன்பே அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் கேட்டு அறிந்திருந்தார். அத்தமிழ்ச் சங்கத்தில் பயின்றதிலும் ஆதீனத்தில் பயின்றதிலும் பாடங்கள் சில வேறுபட்டு இருந்ததைக் கண்டறிந்தார். அவற்றையெல்லாம் குறித்துக் கொண்டு பின்னர் 1923-ஆம் ஆண்டு தொல்காப்பியத்தைச்

சேனாவரையர் உரையுடன் கழகத்தின் வழியாகப் பதிப்பித்தார்.

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் 2003-ஆம் ஆண்டு திருமுருகாற்றுப்படை உரையுடன் பதிப்பொன்றைக் கொண்டு வந்தது. அப்பதிப்பில் 37 சுவடிகளை ஒப்பிட்டுப் பாடவேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளனர். அப்பட்டியலில் திருவாவடுதுறை ஆதீனத்தின் நான்கு சுவடிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐங்குறுநூறு உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் பல பதிப்புகள் கண்டுள்ளன. அப்பதிப்புகள் சிலவற்றில் பாடங்கள் வேறுபட்டும் இருந்தன.

அவற்றில் எது மூல ஆசிரியரால் இயற்றப்பட்ட பாடம் என்பதை உறுதி செய்ய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பழந்தமிழ் நூல்கள் தொடர்பான சுவடிகள், பதிப்புகளைச் சேகரித்தது.

அச்சுவடிகள், பதிப்புகளில் பாட வேறுபாடுகள் இருப்பதை ஒப்பு நோக்கி மூலபாடம் உறுதி செய்து செம்பதிப்பாகக் கொண்டு வரும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை இறையனார் களவியல், ஐங்குறுநூறு ஆகிய நூல்களைச் செம்பதிப்பாகச் செம்மொழி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளுக்குத் திருவாவடுதுறை ஆதீனச் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

பதிப்புப் பணியில் ஈடுபட்ட உ.வே.சாமிநாதையருக்கு நூல்கள் வெளியிட பொருள் உதவியும் செய்துள்ளது திருவாவடுதுறை ஆதீனமாகும். அவர் பத்துப்பாட்டை 1889-ஆம் ஆண்டு முதல் பதிப்பாகக் கொண்டு வந்தபொழுது அப்பதிப்பிற்கு அம்பலவாண தேசிகரும் 1931-ஆம் ஆண்டு அதன் மூன்றாம் பதிப்பு வெளிவந்ததற்கு வைத்திலிங்க தேசிகரும் பொருளுதவி செய்ததை நன்றியோடு தமது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சி.வை.தாமோதரம் பிள்ளை கலித்தொகையை அச்சிட்ட பின் இருபது நூல்களைத் தாம் வாங்கிக் கொள்வதாகத் திருவாவடுதுறை ஆதீனத்துத் தேசிகர் கூறியதும் குறிப்பிடத் தக்கதாகும்.

திருவாவடுதுறை ஆதீனம் பிறருடைய அச்சகத்தின் வழியாகச் சைவ சமயம் சார்ந்த நூல்களை வெளியிட்டு வந்தது. பின்னர் ஆதீனத்துக்கென்று ஸ்ரீ நமசிவாயமூர்த்தி அச்சகம் என்னும் பெயரில் அச்சுக்கூடத்தை நிறுவினார் சுப்பிரமணிய தேசிகர். இதன் வழியாகச் சைவ நூல்களை அச்சிட்டதோடு ஆதீன வித்துவான் ச.தண்டபாணி தேசி

கரால் தொகுக்கப்பட்ட சங்க இலக்கியச் சொற்களஞ்சியத்தை 1963-ஆம் ஆண்டும் பொன். சுப்பிரமணிய பிள்ளையின் பொழிப்புரையுடன் திருமுருகாற்றுப்படையை 1966- ஆம் ஆண்டும் வெளியிட்டுப் பழந்தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளது போற்றுதலுக்குரியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com