உணர்வின் வண்ணங்கள்

காதல் கவிதைகள், கதைகள் போன்ற படைப்புகளில் பெண்ணின் உணர்வுகளை எழுதி வைத்திருப்பதும் ஆண் படைப்பாளர்கள்தான்.
உணர்வின் வண்ணங்கள்
Published on
Updated on
2 min read

காதல் கவிதைகள், கதைகள் போன்ற படைப்புகளில் பெண்ணின் உணர்வுகளை எழுதி வைத்திருப்பதும் ஆண் படைப்பாளர்கள்தான். பெண்ணின் உணர்வுகளைப் பெண்களே எழுதும் நிலை இல்லை என்றெல்லாம் விமர்சனம் உண்டு. அதனால் பெண் படைப்பாளர்கள் உருவாக வேண்டும் என்று சில பத்தாண்டுகளுக்கு முன் வரை பேச்சு இருந்தது.

உலகத்தின் எந்த நாட்டிலும் அத்தகைய நிலை இருந்திருக்கலாம், இருக்கலாம். ஆனால், கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய தமிழ் நிலத்தில் ஆண், பெண் பாகுபாடு இல்லை.

அதிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எவ்விதத் தயக்கமும் கட்டுப்பாடும் இருக்கவில்லை. ஆண்கள் பெண்ணின் உணர்வுகளை எழுதியதைப் போலவே பெண் கவிஞர் அழகுபட ஆணின் மன உணர்வுகளை அதிலும் அக உணர்வை வெளிப்படுத்தும் அளவுக்கு இந்த மண்ணில் சமத்துவம் நிலவியது.

குறுந்தொகை, அப்படி ஓர் அற்புத பாடலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சில வரிகள் மட்டுமே கொண்ட குறும் பாடல்கள் ஆழ்ந்து அகன்ற பான்மையில் உணர்வுகளைப் பதிவு செய்து நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றன. குறிஞ்சித் திணையில் ஒüவையார் பாடிய பாடல், மகவுடை மந்தி. தலைவியைச் சந்திக்க விரும்பும் தலைவன் அது முடியாத நிலையில் துன்பம் அடைகிறான். அந்த மனநிலையை ஒüவையார் வியத்தகு உவமையால் வெளிப்படுத்துகிறார்.

"நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்

பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி

அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே' (குறுந்தொகை 8).

பச்சைக் களிமண்ணால் செய்த சுடப்படாத மண் பானையை மழை நீரைப் பிடிப்பதற்காக வைத்தால் அந்தப் பானை நீரை உள்ளே வைத்துக் கொள்ள முடியாது. மொத்தமாக நீரை சிந்தவும் முடியாது. ஈரம் தாங்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நீரைச் சிந்தும், அது போல் நல்ல சொற்களைக் கேட்க முடியாமல் தலைவியைக் காண முடியாது என்று மனதுக்குத் துன்பம் தரும் சொற்களைக் கேட்டு வருத்தப்படும் என் நெஞ்சே, காதலியை வேண்டாம் என்று தூக்கிப் போடவும் முடியவில்லை; அவளை நெருங்கவும் முடியவில்லை. அவளுடைய பிரிவு மனதுக்கு வருத்தத்தைத் தருகிறது.

மரத்துக்கு மரம் தாவும்போது தாயின் மார்பை இறுகக் கட்டிக் கொள்ளும் குரங்குக் குட்டியைப் போல், என் குறையைக் கேட்டு என்னைத் தேற்றி மார்போடு அணைத்துக் கொள்ள எப்போது தலைவி வருவாள் என்று அவளுக்காக வருந்தும் என் நெஞ்சே உன் போராட்டம் மிகப் பெரியதும், பெருமை உடையதும் ஆகும்.

ஆணின் உணர்வு பெண்ணின் வழியாக வெளிப்படும்போது மென்மையானதாக புதிய பரிமாணமும் நிறங்களும் கொண்டு படிப்பவரை எண்ணி எண்ணி இன்பமுறச் செய்கிறது. காதல் உணர்வானது ஆண்-பெண் பேதமற்றது. பேதம் இருப்பின் அது காதலாகாது. தமிழர்கள்போல இதனை உணர்ந்த மனிதர் எவருமில்லை. இதே குறுந்தொகையில் ஒüவையார், தலைவனைக் காணத் தவிக்கும் பெண்ணின் உணர்வை,

"முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?

ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,

"ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?-

அலமரல் அசைவளி அலைப்ப, என்

உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.'

(குறுந்தொகை 28)

என்று உணர்ச்சிப் பெருக்காக எழுதுகிறார். தலைவனை நினைந்துக் காதலில் தவிக்கும் தலைவி, நான் என்ன செய்வேன்? முட்டிக்கொள்வதா? என்னை நானே அடித்துக் கொள்ளட்டுமா? பெரிதாய் குரலெடுத்து ஆஅ ஓ வென்று கத்திக் கூவட்டுமா? வீசும் தென்றல் என்னை வருத்துகிறதே. இந்த ஊர் என் நிலை அறியாது இப்படி அமைதியாய் உறங்குகிறதே! என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லையே என்று மடை திறந்த வெள்ளமாய், மலை வீழும் அருவியாய் ஆர்ப்பரிக்கிறாள்.

பெண்ணின் உணர்வு, பாடியவரும் பெண் கவிஞர். தமிழ் நிலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது இப்பாடல். சங்க இலக்கியம், உணர்வின் பொதுமையைச் சொன்னாலும் அதன் வர்ணங்களை ஆயிரம் விதங்களில் வெளிப்படுத்தி நிற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.