போனால் வராது...

போனால் வராது என்று சொல்பவற்றுள் மனிதனின் வாழ்நாள், நாள், வாரம், மாதம், ஆண்டு, உயிர் இவற்றைச் சொல்வது வழக்கம்.
போனால் வராது...
Published on
Updated on
1 min read

போனால் வராது என்று சொல்பவற்றுள் மனிதனின் வாழ்நாள், நாள், வாரம், மாதம், ஆண்டு, உயிர் இவற்றைச் சொல்வது வழக்கம். ஆனால் போனால் வராதது பற்றிச் சொல்கின்றபோது ஒரு புதிய உவமையை ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் கூறுகின்றார்:

பாண்டிய அரசர்களில் உக்கிரப் பெருவழுதி குறிப்பிடத்தக்கவன். இப்பெரு வீரன் கானப் பேரெயிலின் மீது படையெடுத்துச் சென்றான். கானப் பேரெயில் அகழியும் மதிலும் அமைந்தது. எவராலும் அதன் உள்ளே நுழைய முடியாது. வானைத் தீண்டுவதுபோல் அமைந்த அதன் கோட்டைச் சுவர்கள் எவரையும் அஞ்சச் செய்யும். இவற்றோடு இயற்கை அரண்களும் மிகுந்தது. காட்டையே இடைக்காவல் மதிலாக கொண்டதால் கானப் பேரெயில் எனப் பெற்றது. அவ்வூர் இப்போது காளையார் கோயில் என்று பெயர் பெற்றுள்ளது.

கானப் பேரெயிலின் மன்னன் வேங்கை மார்பன் என்று பெயர்பெற்ற பெருவீரன். இவ்வீரன் பகைவர்க்கு அச்சம் தரத்தக்க பேராற்றல் உடையவன். உக்கிரப் பெருவழுதி வேங்கை மார்பன் மீது படையெடுத்தான். போர் கடுமையாக நடைபெற்றது. வேங்கை மார்பன் தோற்றான். உக்கிரப் பெருவழுதியின் படைகள் கடக்க முடியாத அகழிகளைக் கடந்தன. ஏற முடியாத கோட்டைச் சுவர்களின் மீது படையினர் ஏறினர்.

வேங்கை மார்பன் தன் தோல்வியை ஏற்றான். எனினும், சில நாள், சில மாதம் சென்ற பின் இழந்த கோட்டையை தான் மீண்டும் மீட்டுக் கொள்ளலாம் எனக் கருதினான். ஆனால், ஐயூர் மூலங்கிழார் "அது உனக்கு முடியாத செயல்' என அறிவுறுத்தினார். முடியாத செயல் என்றால் எதுபோல முடியாத செயலாக இருக்கும் என்பதற்கு அவர் ஓர் அரிய உவமை கூறினார்.

ஊர்க்கொல்லன் படைவீரர்களுக்கு உரிய வேலை வடித்துக் கொடுக்கும் கடமை உடையவன். 'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே'' என்கிறது புறநானூறு.

அப்படி வேல் வடிக்கும் கொல்லன் வேலுக்கான இரும்பை நெருப்பிலிட்டுக் காய்ச்சுவான். அவ் வேல் நெருப்பெனச் சுடர்விடும். பின் அதன் மீது நீர் தெளிப்பான். தெளித்த அந்நொடியிலேயே அந்த நீர் ஆவியாகப் போய்விடும். அந்த ஆவியாகப்போன நீரை யாரால் மீட்டுக் கொண்டுவர இயலும். அது போன்றே உக்கிரப் பெருவழுதி கொண்டகானப் பேரெயிலையும் யாராலும் மீட்க முடியாது என்கிறார் ஐயூர் மூலங்கிழார்.

அருங் குறும்பு உடைத்த கானப்

பேர் எயில்

கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய

இரும்பு உண் நீரினும், மீட்டற்கு அரிது என

வேங்கை மார்பன் இரங்க, வைகலும்

ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர்

பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே!

(புறநானூறு 21 : 6-11)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.