இந்த வாரம் கலாரசிகன் - 03-11-2024

சென்னை வந்திருந்தார் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்.
இந்த வாரம் கலாரசிகன் - 03-11-2024
Published on
Updated on
2 min read

சென்னை வந்திருந்தார் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன். சென்னை நங்கநல்லூர் நேரு அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான அவர், முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கெüரவிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார் என்பதைக் கேள்விப் பட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

நாம் படித்த பள்ளிக்குச் செல்வது என்பதே சுகானுபவம். படித்துப் பட்டம் பெற்று, படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிக்கும்போது, ஓடியாடி விளையாடிய பள்ளி வளாகத்துக்கு மீண்டும் போகும்போது ஏற்படும் பேருவகைக்கு நிகர்தான் ஏது?

தனது பள்ளிக்கூட வாழ்க்கையை, தனது ஆசிரியர்களை, தனது தந்தையின் வழிகாட்டுதலில் அறிமுகமான இலக்கிய ஆளுமைகளை, விரும்பிப் படித்த கதைகளை, சங்க இலக்கியங்களை, சமய இலக்கியங்களை நினைவில் அசைபோட்டுக் கொண்டே இருக்கும் வெகு சில ஆளுமைகளில் நீதிபதி அரங்க. மகாதேவனும் ஒருவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால், கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல, புதிதாக செய்திகளை அள்ளி எடுத்துக் கொண்டு வரலாம்.

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு, ஏறத்தாழ நடுநிசி நேரத்தில்தான் நான் அவரை சந்திக்கச் சென்றேன். அதுவரையில் அவரை சந்திக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள், நண்பர்கள், இலக்கிய அன்பர்கள் என்று பலரும் வரிசை கட்டிக் காத்திருந்தனர் என்பதால், கடைசி நபராக நான் சந்திக்கச் சென்றேன். நான் முன்பே குறிப்பிட்டதுபோல, நாங்கள் சந்தித்தால் அவரிடமிருந்து புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ளாமல், வெறுங்கையோடு நான் திரும்பியதே இல்லை.

எங்கள் பேச்சு எழுதுவது குறித்துத் திரும்பியது. பேனா பிடித்து எழுதும் எனக்கு அவர் 'சாட் ஜிபிடி' தொழில்நுட்பம் குறித்து விளக்கியது மட்டுமல்லாமல் செயல்முறை விளக்கமும் தந்து புரிதலை ஏற்படுத்தினார். புதிய தொழில்நுட்பம் வந்தால் அதைக் கையாள நாம் தயாராக வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்த முயற்சியில் உடனடியாக இறங்கிவிட்டேன்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு, கோவையில் கி.ரா. விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது குறித்துப் பலரும் என்னிடம் வியந்து பாராட்டினார்கள். அந்த உரை குறித்தும், நாஞ்சில் நாடனின் எழுத்து குறித்தும் எங்கள் உரையாடல் திரும்பியது. நானும்கூட நாஞ்சில் நாடனின் ரசிகன் என்பதால், பகிர்ந்துகொள்ள நிறையவே இருந்தது.

எனது இனிய நண்பரும், ஆவணப்பட இயக்குநரும், அற்புதமான சிறுகதை எழுத்தாளரும், பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார் பற்றித் திரும்பியது எங்களது பேச்சு. நீதிபதி அரங்க. மகாதேவன் என்னிடம், நீங்கள் கிருஷ்ணகுமாரின் "கோடி' சிறுகதை படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். எப்போதோ படித்திருக்கலாம்; எனக்கு நினைவில்லை.

இரவு வந்ததும் முதல் வேலையாக, "கோடி' சிறுகதையை இணையத்தில் படித்தேன். 2011-இல் ஆனந்தவிகடனில் வெளியாகி, 42-ஆவது இலக்கிய சிந்தனை தொகுதியில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை என்று இணையத்தில் தகவல் தரப்பட்டிருந்தது. படித்து முடித்தபோது, பாரதி கிருஷ்ணகுமாரை நேரில் பார்த்து, ஆரத்தழுவிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.

'தாத்தா, அப்பா, அம்மா மூவருமாகச் சேர்ந்து கட்டிக்காத்த பொய் மூட்டை ஒன்று அவிழ்ந்து அத்தையாக வெளிப்பட்டு நின்றது'' என்கிற வரிகளில், கவிஞன், கதாசிரியன், இலக்கியவாதி, இயக்குநர் அனைவரையும் ஒருசேரப் பார்க்க முடிந்தது. என்னவொரு நடை, கதை சொல்லும் லாவகம்...

நல்ல கதை சொல்லிகள் சிறுகதை எழுத்தாளர்கள்தான், புதினம் படைப்பவர்கள் அல்ல!

நான் முதன்முதலாக சென்னைக்கு வந்து 62 ஆண்டுகளாகிவிட்டன. அப்போது அடையாறில் இருந்த பெசன்ட் தியசாஃபிகல் உயர்நிலைப் பள்ளியில் உறைவிட மாணவனாகச் சேர்ப்பதற்கு எனது தந்தையார் அழைத்து வந்தார். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால், சுற்றுலா வளர்ச்சிக் கழகப் பேருந்தில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் (அப்போது கழுகுகள் வந்து கொண்டிருந்தன), திருத்தணி, பழவேற்காடு, மெரீனா கடற்கரை உள்பட சென்னை முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

நான் வியந்து பார்த்த இடங்கள், சம்பவங்கள் குறித்து எழுத வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். எழுதவில்லை. விமர்சனத்துக்கு வந்திருந்த ஆர். வெங்கடேஷ் எழுதிய 'கட்டடம் சொல்லும் கதை'' புத்தகத்தைப் படித்தபோது, நான் எழுதாதது நல்லதுதான் என்று தோன்றியது. அவரளவுக்கு என்னால் நுணுக்கமாகவும், சுவாரஸ்யமாகவும், சிறப்பாகவும் எழுதியிருக்க முடியாது.

"சென்னையின் புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களின் தனித்துவம் சொல்லும் கதைகள்' என்கிற அறிமுகத்துடன் சென்னையின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார் ஆர்.வெங்கடேஷ். ஏதோ கட்டடங்களின் நீள, அகலம் குறித்தும், கட்டப்பட்ட ஆண்டு குறித்தும் எழுதிச் செல்லும் பதிவு அல்ல இது. ஒவ்வொரு கட்டடத்துக்கும், நினைவுச் சின்னத்துக்கும் பின்னால் இருக்கும் வரலாறு மட்டுமல்லாமல், அது சார்ந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பதுதான் இதன் சிறப்பு.

இப்ராஹிம் சாஹிப் தெரு மாடிப் பூங்கா, பட்டணம் பெருமாள் கோயில், சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள் மூன்றும் நான் கேள்விப்படாதவை; அறிந்திடாதவை. புத்தகத்தைப் படித்து முடித்த வேகத்தில் அந்த இடங்களுக்குச் சென்று பார்த்து விட்டேன். சென்னையின் முதல் கோயிலான சென்னகேஸ்வரர் ஆலயம் இருந்த இடத்தில்தான் இன்றைய சென்னை உயர்நீதிமன்றம் இருக்கிறது என்பதும், அந்தக் கோயில்தான் சென்னை என்கிற பெயர்வரக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பதும்... வியப்பில் ஆழ்த்துகின்றன.

அண்ணாநகர் டவர், மியூசிக் அகாதெமி, அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்பட்டிருப்பது, இன்றைய தலைமுறையினருக்கான தகவல்கள். இந்தப் புத்தகம் வண்ணப் படங்களுடன், ஆங்கிலத்திலும் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

ரேவதி ராம் எழுதிய கவிதைகளின் தொகுப்பு "சிற்றலை மீதமர் தும்பி.' அதில் இடம்பெறுகிறது இந்தக் கவிதை -

கடல் கடக்கும் பறவை

வீசும் காற்று

அசையும் மரம்

சுழலும் பூமி

ஓடும் நதி

துடிக்கும் இதயம்

சுற்றும் கடிகார முட்கள்

இயக்கம் தான் யாவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.