கம்பனின் தமிழமுதம் - 17: நதியும், கவிதையும்

கொஞ்சம் தமிழார்வம் உடையவர்களும் அறிந்த சொல் சிலேடை. தமிழ் இலக்கணத்தில் சிலேடை அணி என்றே உண்டு. சொல்வது ஒன்றுதான். ஆனால், அதில் இரு பொருள்கள் காணமுடியும்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

கொஞ்சம் தமிழார்வம் உடையவர்களும் அறிந்த சொல் சிலேடை. தமிழ் இலக்கணத்தில் சிலேடை அணி என்றே உண்டு. சொல்வது ஒன்றுதான். ஆனால், அதில் இரு பொருள்கள் காணமுடியும்.

காளமேகம் போன்ற பல புலவர்கள், "இரு பொருள் தரும் ஒரு கவிதை' என்ற அடிப்படையில் சிலேடை கவிதைகள் தந்திருக்கிறார்கள்.

பேசும்போதே சிலேடையாகப் பேசும் வல்லமை பெற்றவர், "வாகீச கலாநிதி' என்று போற்றப்பட்ட கி.வா.ஜ. என்று தமிழுலகம் அறிந்த கி.வா.ஜகந்நாதன்.

திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாகக் கொடிகட்டிப் பறந்தவர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் தம்பதி. அவர்கள் வீட்டுக்கு ஒரு முறை கி.வா.ஜ. போயிருந்தார். வரவேற்ற டி.ஏ.மதுரம் அம்மையார், "ஐயா என்ன குடிக்கிறீர்கள்... காபியா அல்லது டீயா...?' என்று கேட்டார். உடனே "டீயே மதுரம்' என்றார் அவர்.

"டீயே சிறப்பு - டி.ஏ.மதுரம்' என்று இரு பொருள்கள் வருகின்றனவா...? இது மிக எளிமையான, உரையாடலில் நடந்த சிலேடை.

தனது காப்பியத்தில் எத்தனையோ கைவண்ணங்கள் காட்டிய கம்பன், சிலேடையையும் விட்டு வைக்கவில்லை. சிலேடைக்குக் கம்பன் எடுத்துகொண்ட இரு பொருள்களை முதலில் பார்த்துவிடலாம்.

நதியின் சிறப்புகளைக் கம்பன் பட்டியலிடுகிறான். அது பூமித்தாய்க்குச் சிறந்த அணிகலனாகத் திகழ்கிறது; தான் போகின்ற பாதையில் கிடைக்கும் பொருள்களையெல்லாம் வாரி எடுத்துக்கொண்டுபோய், வழியில் வாழும் மக்களுக்கு வழங்குகிறது; கரையோர நிலங்களையெல்லாம் விளை நிலங்களாக்குவதுடன், வயல்களுக்கும் பாய்ச்சப் பயன்படுகிறது; அருமையான நீர்த்துறைகள் நிறைந்தது; ஐவகை நிலங்கள் என்று தமிழர் போற்றும், குறிஞ்சி; முல்லை; மருதம்; நெய்தல்; பாலை ஆகிய பகுதிகளுக்குப் பரவிச் செல்வது; அழகான, தெளிவான நீரைக் கொண்டது; குளிர்ச்சி உடையது; வற்றாத நீரோட்டதைக் கொண்டது. இவை ஒரு நதிக்கான சிறப்புகள்.

அடுத்ததாக, ஒரு சிறந்த தமிழ்க் கவிதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்குக் கம்பன் தரும் பட்டியலைப் பார்க்கலாம்.

சிறந்த கவிதைகள், உலக மக்களுக்கு அணிகலன்களாய் விளங்கும்; அவை சிறந்த பொருள் நிறைந்தனவாக இருக்கும்; அறம், பொருள் இன்பம், வீடு ஆகியனபற்றி விளக்கி, அறிவுக்கு விருந்தாக அமையும்; அகப்பொருள்களாகிய களவு, கற்பு என்னும் பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்; அகத்துறை சொல்லும், இருத்தல், இரங்கல், புணர்தல், பிரிதல், ஊடல், என்னும் ஐந்திணை நெறிகளைக் கொண்டிருக்கும்; பொருள் தெளிவுடையதாக அமைந்திருக்கும். உயரிய ஒழுக்கங்களையே வலியுறுத்தும்.

இப்போது, காப்பியத்தின் காட்சிக்கு வாருங்கள். அகத்தியருடன் தங்கியிருந்த மூவரும் கிளம்பினார்கள், "கோதாவரி நதிக்கரையில் ஓர் அழகிய நீர்த்துறை உள்ளது; பஞ்சவடி என்பது பெயர். நீங்கள் அங்கே தங்கலாம்...' என்று அவர் சொல்லி அனுப்பினார். அந்த இடத்தை நோக்கி மூவரும் நடந்தார்கள்.

ஜடாயு பறவையை வழியில் கண்டார்கள். "அந்த இடத்துக்குச் செல்ல நான் வழிகாட்டுகிறேன்; வாருங்கள்..' என்று சொல்லி, தனது பரந்து நீண்ட சிறகுகள் அவர்களுக்கு வெயிலை மறைத்து நிழல் தருமாறு மேலே பறந்து சென்றான் ஜடாயு.

பஞ்சவடியை அடைந்தார்கள். வழியில் கோதாவரி ஆறு குறுக்கிட்டது. அதன் அழகில் ஈடுபட்டு நின்றார்கள். அதைச் சொல்லும் கம்பன் பாடல் இது.

"புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்

தந்து புலத்திற் றாகி

அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை

நெறி அளாவிச்

சவிஉறத் தெளிந்து, தண்என்று ஒழுக்கமும்

தழுவிச் சான்றோர்

கவி எனக் கிடந்த, கோதாவரியினை

வீரர் கண்டார்'

"அழகிய அந்த கோதாவரி ஆறு, சான்றோர் ஒருவர் எழுதிய உயர்ந்த கவிதைபோல் ஓடிக்கொண்டிருந்தது' என்றான் கம்பன்.

"கவிதைபோல அந்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது' என்பதை உறுதி செய்ய, சிறந்த ஆற்றினையும் விளக்க வேண்டும்; ஓர் உயர்ந்த கவிதையையும் விளக்க வேண்டும் அல்லவா...?

இரண்டையும் சொல்ல வந்த கம்பனுக்கு, இரண்டு கவிதைகள் தேவைப்படவில்லை. மேலே உள்ள ஒரே கவிதையில் சொல்லிவிட்டான்.

இதனை, ஆற்றின் அழகாகப் பார்த்தால், ஓடுகின்ற ஆறு தெரியும்; கவிதையின் அழகாகப் பார்த்தால், உயர்ந்த கவிதையின் அமைப்பு தெரியும்.

கம்பனின் கவிதையையும், மேலே சொல்லப்பட்ட ஆறு - கவிதை விளக்கங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கம்பனின் சிலேடை அழகு தெரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.