சங்க காலம் வீரயுகம். 'அகத்தில் காதல், புறத்தில் மோதல்' என்பதுவே அக்கால வாழ்வாக அமைந்தது. இவை இரண்டும் அறத்தின்வழி இயங்கின என்பதே சிறப்பு. பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவர் தாய், தந்தை, கொல்லன், அரசன், மகன் ஆகியோரின் கடமைகளைத் தெரிவிக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். அது மிகப் பெரும்பாலோர்க்கு நன்கு அறிமுகமான பாடல் ஆகும். அப்பாடல் மறக்குடி மகளொருத்தியின் கூற்றாக அமைந்துள்ளது. அது,
ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (312)
என்பதாகும்.
இதற்கு, 'மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் எனது கடமையாகும்; அவனை நற்பண்புகளால் நிறைந்தவன் ஆக்குவது தந்தையினது கடமையாகும்; அவனுக்குத் தேவைப்படும் வேலை உருவாக்கித் தருவது கொல்லனது கடமையாகும்; நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனது கடமையாகும்; விளங்குகின்ற வாளைக் கையில் ஏந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வெற்றியொடு மீளுவது காளையாகிய மகனது கடமையாகும்'' என்றே பலரும் பொருள்கொண்டுள்ளனர்.
இப்பாடலின் நான்காம் அடியில் உள்ள 'நன்னடை' என்பதற்கு மாற்றாகத் 'தண்ணடை' என்னும் பாடம் உள்ளது. இப்பாட வேறுபாடு புறத்திரட்டில் இருப்பதாகப் புலியூர்க் கேசிகன் தமது உரையில் காட்டியுள்ளார். எனினும் அவர் 'நன்னடை' என்னும் பாடத்தையே போற்றிக் கொண்டுள்ளார். ஆனால் மர்ரே பதிப்பு 'தண்ணடை' என்பதனையே பாடமாக அமைத்துள்ளது. இப்பாட வேறுபாடு சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
அக்காலத்தில் ஆடவரைப் போலவே பெண்களும் வீரம் நிறைந்தவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அவர்களது வீரம் குறித்த பாடல்களைப் படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது.
'என் மகன் எங்கே என்று வினவுகிறாய். அவன் இருக்கும் இடம் அறியேன். ஆனால், இஃது என் மகனை ஈன்ற வயிறு; புலி தங்கிப் புறப்பட்ட குகை. அவன் இதுபோது போர்க்களத்தில் இருப்பான்'' (86) என்கிறார் காவற்பெண்டு என்னும் தாய்.
முதல்நாள் போரில் தந்தையும் மறுநாள் போரில் கணவனும் வீழ்ந்த நிலையில் அடுத்த நாள் போர்ப்பறை கேட்டுச் சிறுவனாக இருக்கும் தன் ஒரே மகனை அழைத்து, வேலைக் கையில் கொடுத்துப் போர்க்களம் நோக்கிச் செல்லுமாறு பணிக்கும் மறக்குடி மகளைக் காட்டியுள்ளார் (279) ஒக்கூர் மாசாத்தியார்.
தன் மகன் யானையை வீழ்த்தி மாண்டான் என்பதனைக் கேட்ட முதிய தாய் அவனை ஈன்ற ஞான்றினும் பெரிது மகிழ்ந்தாள் (277) என்கிறார் பூங்கண் உத்திரையார்.
'என் மகன் புறமுதுகுகாட்டி வீழ்ந்திருப்பானேயாயின் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பகத்தை அறுத்துக் கொள்வேன்'' என்று வஞ்சினம் கூறிச் சென்று பிணங்களைப் புரட்டிப் பார்த்த போது பகைவரை வீரத்தோடு எதிர்த்து உடல் சிதைந்து கிடந்த மகனைக் கண்டு பெற்றெடுத்த நொடியினும் மிக்க மகிழ்ந்தாள் (278) என்கிறார் காக்கைபாடினியார் நச்செள்ளையார். இத்தகைய மறப்பெண்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர் பொன்முடியார் என்பதை உளத்திற்கொண்டு இப்பாடலை நோக்கினால் புதிய வெளிச்சம் கிட்டும்.
உரையாசிரியர்கள் இப்பாட்டில் வரும் 'சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே' என்னும் தொடருக்கு,
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (67)
என்னும் திருக்குறளை ஒட்டி உரைகண்டுள்ளனர். அது பிழையன்று. ஆனால்,
'சான்றோர் மெய்ம்மறை' (பதிற்றுப்பத்து 14)
'எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்' (பதிற்று.67)
'கொலக் கொலக் குறையாத் தானைச் சான்றோர்' (பதிற்று 82)
ஆகிய பகுதிகளில் சான்றோர் என்னும் சொல் வீரர்களைக் குறித்தல் காணலாம். இவற்றிற்கு முறையே வீரர்கட்குக் கவசம் போன்றவனே என்றும், சந்தனத்தின் எழிலை விழுப்புண்கள் மறைத்த வீரர்களுக்குத் தலைவன் என்றும், பகைவர் பலகாலும் பொருதழித்த வழியும் குறையாத தானை வீரர் என்றும் பொருள் கூறியுள்ளார்கள் உரையாசிரியர்கள். ஆதலால் இவ்வழக்குகளையொட்டிச் சான்றோன் ஆக்குதல் என்பதற்கு வீரனாக்குதல் தந்தைக்குக் கடன் என்று பொருள் கொள்ளலாம்.
சான்றோன் என்பதற்கு நற்பண்புகளால் நிறைந்தவன் என்று கொண்டால் அவனுக்கு வேலின் தேவையினும் நூலின் தேவையே மிகுதியாக அமையும். வீரன் என்று கொண்டால் அவனுக்குப் போரிடுவதற்கு ஏற்ற வேலினை வடித்துக்கொடுத்தல் கொல்லனின் கடமை என்பது பெரிதும் பொருத்தமாக அமையும்.
அடுத்து 'நன்னடை நல்கல்', அஃதாவது நல்லொழுக்கத்தைக் கற்பித்தல் அரசனுடைய கடமை என்பதாகும். இதனை அரசன் கடமை என்பதனினும் பெற்றோர் கடமை என்றலே பொருத்தமாக அமையும். அரசன் தவறு செய்பவர்களைத் தண்டித்துத் திருத்துவான். அவன் நன்னடையைக் கற்பிப்பவன் என்பது அவ்வளவாகச் சிறப்பாக அமையாது. மேலும் தந்தையால் சான்றோனாக்கப் பட்டவனுக்கு நன்னடையை நல்குவது தேவையற்றதாகும். அவனே அதனை அறிந்து கடைப்பிடிப்பவனாக இருப்பான். ஆதலின் 'நன்னடை நல்கல்' என்பதனினும் 'தண்ணடை நல்கல்' என்னும் பாடமே தக்கதாகத் தோன்றுகிறது.
நல்கல் என்பது வழங்குவது என்று பொருள்படும். வழங்குவதற்குரியது பொருளே. நன்னடை வழங்குவதன்று; கற்பிக்கப்படுவது. தண்ணடையே நல்குவதற்குரியது. எனவே 'நன்னடை நல்கல்' என்பதனினும் 'தண்ணடை நல்கல்' என்பதே பொருத்தமாக அமைகிறது.
தண்ணடை என்பதற்கு மருதநிலம் என்பது பொருள். போரில் வீரச்செயல் புரிந்தவர்களுக்கும் இறப்பவர்களுக்கும் அரசன் நிலங்களை வழங்கும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்துள்ளது. எனவே, போரில் வெற்றி பெற்று மீள்பவருக்கு நிலத்தைப் பரிசாக வழங்குவது அரசன் கடமையாகும்.
ஆசிரியர் பெயர் தெரியாத புறநானூற்றுப் பாடல் ஒன்று, போரில் வென்ற வீரர்கள் தண்ணடை பெறுவர் என்பதனைக் குறிக்கிறது. ஒரு தலைவன், ''போரில் பகைவர் எறிந்த கூரிய நெடிய வேல் பாய்ந்த மார்புடனே மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்குப் பயறு விளையும் சிற்றூர்கள் பரிசாக வழங்கப்படின் அவற்றை ஏற்க மாட்டோம்; நாரால் வடிக்கப்பட்டுச் சாடியில் உள்ள கள்ளை வாழ்த்தி, நீர்த்துறைகளில் பொருந்திக் கம்புட்கோழி முட்டைகளை ஈனும் மருத நிலத்து ஊர்களையே யாம் விரும்புவோம்'' என்கிறான்.
சீறூர்க்,
கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி
நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே. (297)
போரில் இறந்தவனின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் நிலத்தை 'உதிரப்பட்டி' என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றும் ஊர்ப்புறங்களில் சில வயல்களுக்கு உதிரப்பட்டி என்னும் பெயர் வழங்கி வருகிறது. எனவே, 'தண்ணடை நல்கல் வேந்தனுக்குக் கடனே' என்பதே தக்க பாடமாகும்.
இப்பாடத்தைக் கொள்ளும்போது பிள்ளையை ஈன்றெடுத்து உடல்வலிமையுடையவனாகத் தருவது தாயின் கடமையாகவும், அவனை வீரனாக்குதல் தந்தையின் கடமையாகவும், வீரனுக்குப் படைக்கலனை வடித்துத் தருதல் கொல்லனின் கடமையாகவும், வென்ற வீரனுக்குப் பரிசாக நிலம் வழங்குவது அரசனின் கடமையாகவும் களிற்றியானையை வீழ்த்தி வெற்றி வீரனாகத் திரும்புதல் காளை போன்ற வீரனுக்குக் கடமையாகவும் அமைந்து வீரயுகத்தில் எழுந்த பாடலாகத் திகழ்கிறது இப்பாடல்.
எனவே 'தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே' என்பதே தக்க பாடமாகத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.