
சிலருடைய மறைவு நமக்குப் பழைய நினைவுகளைக் கிளறி அசைபோட வைக்கிறது. கடந்த புதன்கிழமை மறைந்த தமிழகத்தின் முன்னாள் உள்துறை செயலரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.மலைச்சாமிக்கு, தனிப்பட்ட சில காரணங்களால் இறுதி மரியாதை செலுத்த என்னால் போக முடியவில்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக இருந்த செல்லபாண்டியனின் மருமகன் என்பது அவரது அடையாளமாக எப்போதுமே இருந்ததில்லை. நேர்மையான ஆட்சிப்பணி அதிகாரி என்றுதான் மலைச்சாமி அனைவராலும் பார்க்கப்பட்டார். கடைசிவரை கறாரான அதிகாரியாகவே அவர் வாழ்ந்து மறைந்தார் என்பதுதான் அவர் குறித்த எனது மதிப்பீடு.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரம். கே.மலைச்சாமி சென்னை மாநகராட்சியின் சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். விதிமுறைமீறல் கட்டடங்களை, நீதிமன்ற உத்தரவு பெற்று சென்னை மாநகராட்சி தயவுதாட்சண்யம் பார்க்காமல் இடித்துத் தள்ளியபோது, அனைவரும் அதை வியப்புடன் பார்த்தனர்.
அவர் உள்துறை செயலராக இருக்கும்போது அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன். அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் எழுத்தாளர்கள் ஸ்ரீதர் - சாமா. அப்போது தொடங்கிய எங்களது நட்பு, மிக நெருக்கமான நட்பாக மாறியது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தலைநகர் தில்லி சென்றபோதுதான்.
1999-இல் மக்களவை உறுப்பினராகவும் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக ஆறு ஆண்டுகள் இருந்தபோதும் செüத் அவென்யூவில் குடியிருந்த கே.மலைச்சாமியை பெரும்பாலும் ஒன்று, வீட்டில் பார்க்கலாம்; அல்லது அவையிலோ, நாடாளுமன்ற நூலகத்திலோ பார்க்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகச் சிலர்தான் தாங்கள் வகிக்கும் பதவியின் கெüரவத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து செயல்படுவார்கள். அவர்களில் கே.மலைச்சாமியும் ஒருவராக இருந்தார். எனக்குத் தெரிந்து அவர் அவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்ததே இல்லை. அது மட்டுமல்ல, ஒவ்வொரு அவைக் கூட்டத்திலும் அன்று நடைபெறும் விவாதங்கள் குறித்துத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டுதான் கலந்துகொள்வார்.
உணவு, உடற்பயிற்சி இரண்டிலும் மிகவும் கவனமாக இருப்பவர். தில்லியில் உள்ள பெரும்பாலான பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருப்பார் அவர் என்று நினைக்கிறேன். என்னிடம் உரிமையுடன் அவர் உடல்நலம் பேணச்சொல்லி அறிவுரை கூறுவதை இப்போதும் நினைத்து நெகிழ்கிறேன். அரசியல், இலக்கியம், திரைப்படங்கள், ஆன்மிகம், சமூகப் பிரச்னைகள் என்று மணிக்கணக்காக நாங்கள் விவாதித்ததை எல்லாம் இப்போது அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவருக்குப் புத்தாண்டு உள்ளிட்ட வாழ்த்துச் செய்திகளோ, தீபாவளி மலர் போன்ற தினமணி இணைப்புகளோ அனுப்பிக் கொடுத்தால், தவறாமல் அதற்கு நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பி விடுவார். கபடு, சூதுவாது நிறைந்த அரசியல்வாதி ஆகாமல் தனது கடைசிக் காலம்வரை இருந்துவிட்டார் கே.மலைச்சாமி என்பதுதான் அவர் குறித்து நான் எனது டைரிக் குறிப்பில் செய்திருக்கும் பதிவு!
----------------------------------------------------------------------------------------
புதிதாக விமர்சனத்துக்கு வந்திருந்தது பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் எழுதிய 'ஒரு பாட்டம் மழை' என்கிற கட்டுரைகளின் தொகுப்பு. நமது 'தமிழ்மணி' வாசகர்களுக்குப் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் குறித்த அறிமுகம் தேவையில்லை. அவர் எழுதும் கட்டுரைகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாசகர்கள்தான் பெரும்பாலோர்.
அவரது 'வண்டாடப் பூமலர' (2013), 'பேச்சில்லாக் கிராமம்' (2021) ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக அணிவகுக்கும் இலக்கியப் பெட்டகம் இது. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 51 கட்டுரைகளில் பல நமது 'தமிழ்மணி' பகுதியில் இடம் பெற்றவை. அவை மட்டுமல்லாமல், வேறு பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையும் இணைத்து 'ஒரு பாட்டம் மழை' தொகுக்கப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் அளவில் சுருங்கியவையாகவும், தரவுகளில் விரிந்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட கட்டுரைகளைப் பொறுமையாகப் படித்து அசைபோட நேரமில்லாத இன்றைய வாசகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு, பலவற்றைக் குறுங்கட்டுரைகளாகப் படைத்திருக்கிறார். சங்க இலக்கியம், சமய இலக்கியம், காப்பியங்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் தமிழ் இலக்கியக் கடலில் வலைவிரித்து நன்முத்துக்களைத் தேடித் தந்திருக்கிறார்.
தற்கால இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை அவரது இலக்கியத் தேடல். பாரதியாரின் கடவுள் வாழ்த்துப் புதுமை, வெ.ப.சுப்பிரமணிய முதலியாரின் 'அகவிசை வெண்பா' கடவுள் வாழ்த்து இரண்டையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். 'தலைமுறைகள் தாண்டிய தமிழ்ச் சொற்கள்', 'கி.ரா.வின் கலைக் களஞ்சியம்' இரண்டும் படித்து, ரசிக்கத் தக்கவை.
'பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அறிஞர் போற்றும் பேரறிவாளர். கருத்துக்களைத் தேடித் தொகுப்பதில் 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'யையும் வெல்லும் சிறப்புடையவர். தமிழ் இலக்கியம் எனும் நெடுங்கடலில் பரவலாகவும், ஆழமாகவும் பயணம் செய்து கருத்துகளைத் தொகுத்து 'ஒரு பாட்டம் மழை' என்ற இந்நூலில் புதிதுண்ணத் தந்திருக்கிறார்'' என்கிற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.திருமலையின் பதிவுக்கு மேல் நான் என்ன சொல்லிவிட முடியும்?
தமிழ் இலக்கியத் தேடல் உள்ளவர்களுக்கு, 'ஒரு பாட்டம் மழை' இனிய குற்றாலச் சாரல்!
----------------------------------------------------------------------------------------
என் மனதில் அவ்வப்போது எழும் கேள்வியைத் தனது 'எருக்கம் பூக்களைப் பாடுபவன்' என்கிற கவிதைத் தொகுப்பில் எழுப்பி இருந்தார் அகவி. அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு இது. கவிதையைப் படித்துப் பாருங்கள், எனது (எங்கள்) சந்தேகம் என்ன என்பது புரியும்...
எங்கள் ஊரில்
ஒரு காலத்தில்
காடெல்லாம் சூரியகாந்தி
சிரியாய்ச் சிரிக்கும்
வருமானம் வார்க்கும்
இந்தப் பூக்களின் வெள்ளாமையை
ஏன்தான் இப்போதெல்லாம்
காண முடியவில்லையோ?
இந்தியா முழுக்க இதன் பெயரில்
சமையல் எண்ணெய் பாட்டில்கள்
கடைகடையாய் உட்கார்ந்திருக்கிறது
இது எப்படியென
அந்தச் சூரியனுக்கும்
இந்தச்
சூரியகாந்திக்கும்தான்
வெளிச்சம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.