
செருப்பு என்னும் சொல் எல்லோரும் பயன்படுத்துவதாக இருக்கிறது. தூய தமிழ் என்றெண்ணி 'பாதணி'அல்லது 'காலணி' என்று சொல்லிக் கொண்டாலும், 'செருப்பு' என்பதே நல்ல தமிழ்ச் சொல். இப்படி தைரியமாகச் சொல்ல, நமது சங்கத்தமிழ் இலக்கியமான புறநானூறு கைகொடுக்கிறது.
மிகவும் இளைய வீரன் ஒருவன் போர்க்களத்தில் வெளிப்படுத்திய பெரும் வீரத்தை சொல்ல, இதனை எழுதிய, பெயர் அறிய முடியாத புலவர் சொல்லியிருக்கும் உவமை அபாரம்.
வேகமாக நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, செருப்புக்கும் காலுக்கும் இடையில், மிகச் சிறிய கல் மாட்டிக்கொண்டால் தொடர்ந்து நடக்க முடியுமா என்ன? பெரிய தலைவலி அது! நின்று, அந்தக் கல்லை எடுத்து வெளியே எறிந்தால் தவிர நடக்கவே முடியாது. இது எல்லோருக்குமான அனுபவம்தான்.
போர்க்களத்தில் அந்த இளைஞன், செருப்பில் சிக்கிய சிறிய கல்லாக எதிரிகளுக்குத் தலைவலி தந்தானாம். ('செருப்பு இடைச் சிறு பரல்...' எனத் தொடங்கும் புறநானூறு பாடல் }257). செருப்பு என்னும் சொல், சங்க இலக்கிய காலத்திலேயே வழக்கில் இருந்த தமிழ்ச் சொல்!
காலில் அணியும் இந்த அணியைத் தனது காப்பியத்தில் இரண்டு வெவ்வேறு சொற்களாகப் பயன்படுத்துகிறான் கம்பன். ஒன்று மிக உயர்ந்த சூழலிலும், மற்றொன்று, அல்லாத சூழலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஓர் இடத்தை, கண்டிப்பாக ஊகித்திருப்பீர்கள். ஆம். கானகத்தில் இருந்த இராமனின் பாதுகையை, பரதன் வாங்கிச் சென்ற செய்திதான். நாட்டுக்குத் திரும்ப எவ்வளவு வற்புறுத்தியும், மறுத்துவிட்ட இராமனிடம் 'நீங்கள் அணிந்திருக்கும் காலணியைத் தர வேண்டும்' என்று கேட்டு வாங்கிக் கொண்டான் பரதன். அதனைக் கம்பன், 'செம்மையின் திருவடித்தலம் தந்தீக' என்று எழுதுகிறான். 'திருவடித்தலம்' என்று மிக உயரிய நிலையில் காலணிக்கு கம்பன் பெயரிடுகிறான்.
'செருப்பு' என்றே கம்பன் பயன்படுத்தும் இடம் நேர் மாறானது.
சூர்ப்பணகை, தவறான நோக்கத்துடன் இராமனை நெருங்கினாள். சிக்கல் பெரிதானது. கடைசியில், இலக்குவன் அவளது கூந்தலை முறுக்கிப் பிடித்து, மூக்கு, காது, மார்பு ஆகியனவற்றை அறுத்தெறிந்தான்.
வலியாலும் அவமானத்தாலும் துடித்தவள், பலவற்றைச் சொல்லி அரற்றினாள். தனது அண்ணனான இராவணனைக் கூவி அழைத்து அழுதாள். 'அண்ணா, நடந்தால் மண்ணில் நெருப்பு பறக்கும் மதங்கொண்ட எட்டுத்திக்கு யானைகளுடன் போரிட்டு, அவற்றின் முறிந்த தந்தங்களை மார்பில் தாங்கியவன் நீ! கயிலாய மலையையும் இடிந்து விழும்படிச் செய்த தோளாற்றல் உடையவன் நீ!' என்று அண்ணன் பெருமையைக் கூறி அரற்றினாள்.
இவ்வளவு வேதனையிலும் இராம, இலக்குவரின் அழகினை அவளால் மறக்க முடியவில்லை. 'சிவபெருமானால் அழிக்க முடியாத மன்மதனைப் போன்று அழகானவர்கள் இருவரும்' என்றும் சொல்லி அரற்றுகிறாள்.
உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே
ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா
மானுடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற,
நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய,
தோள் நிமிர்த்த வலியோனே!
பாடலின் இரண்டாம் அடியைப் பாருங்கள்.
அண்ணனின் பெருமையையும், இராம இலக்குவரின் அழகையும் சொன்னவள், 'அண்ணா, உன் காலில் இருக்கும் செருப்பில் தூசு ஒட்டியிருக்குமே... அந்த தூசுக்கு ஒப்பாவார்களா அவர்கள்?' என்று சொல்லி அழுதாள் என்றான் கம்பன். கோபத்தில், இன்றும் இப்படிச் சொல்லித்தானே திட்டிக்கொள்கிறார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.