இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழகத்தில் கல்வி வளர்ச்சி காணத் தொடங்கிய காலம் எனலாம். அதன் விளைவாகத் தமிழ் ஆராய்ச்சி தளிர்விடத் தொடங்கிய காலமும் அதுவே. உ.வே.சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, மறைமலை அடிகள் போன்றோர் தமிழ் நூல்களை ஆராய்ச்சி நோக்குடன் பதிப்பித்த காலம் அது. ஆகவே, கல்வி வளர்ச்சியோடு ஆராய்ச்சியும் முளைவிடத் தொடங்கியது.
இலக்கியமும் இலக்கணமுமே தமிழ் ஆராய்ச்சிக்குத் தகுந்த துறைகள் என அறிஞர்கள் எண்ணியிருந்த நிலையை மாற்றி, தமிழ் இலக்கிய இலக்கணங்களோடு தமிழரின் கலைகள், வாணிகத் தொடர்புகள், வாழ்க்கை நிலை, உளவியல், அயல்நாட்டுத் தொடர்புகள் போன்றவையும் ஆராயப்பட வேண்டும் எனத் தமிழ் ஆராய்ச்சியில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை சேவியர் தனிநாயக அடிகளாருக்கு உரியது.
மலேசிய பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் 1961-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த அடிகளார் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 26.07.1963-இல் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் தமிழ்ப்பேராசிரியர்களை ஒன்றுகூட்டி, ஆண்டு தோறும் உலக அளவில் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்தத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்னும் கருத்தை அடிகளார் முன் வைத்தார். தமிழ் வளர்ச்சிக் கழகமும் தமிழக அரசும் அதை ஏற்றுக் கொண்டன.
1964-ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாட்டிற்குப் பின்பு அதனை நடத்தலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டது. ஆயினும், அக்கருத்தரங்கம் நடைபெறவில்லை. 1964-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் ஆறாம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை டெல்லியில் உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களை ஒன்று கூட்டி உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினை நிறுவ அடிகளார் திட்டமிட்டார்.
அவ்வாறே பல நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழ் அறிஞர்களும் இந்தியவியல் அறிஞர்களும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தை அடிகளாரும் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களும் ஏற்பாடு செய்தனர். அக்கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைத்துப் பணிபுரிய வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அடிகளாரும் செக்கோஸ்லாவாக்கிய நாட்டுத் திராவிடவியல் அறிஞர் கமில் சுவலபிலும் வலியுறுத்திப் பேசிய பின், மன்றம் அமைக்கப்பட்டது.
பேராசிரியர் ழான் ஃபீலியோசா உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் பேராசிரியர்கள் தாமஸ் பர்ரோ, எம்.பி. எமனோ, எஃப்.பி.ஜே. கியூப்பர், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், மு.வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் பேராசிரியர்கள் கமில் சுவலபில், சேவியர் தனிநாயகஅடிகள் ஆகிய இருவரும் பொதுச்செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மன்றமே கோலாலம்பூரில் நடந்த முதல் உலகக் தமிழ் மாநாடு தொடங்கி, எல்லா மாநாடுகளையும் நடத்தி வருகிறது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கன்குளத்தில் 1941 முதல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் அவர் தமிழரிடையே தமது பணியைச் செவ்வனே ஆற்றுவதற்காகத் தமிழ் கற்க முற்பட்டார். அவ்வமயம் சங்க இலக்கியத்தின் சிறப்பு அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. ஆகவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயில முடிவு செய்தார்.
1945-ஆம் ஆண்டு தம் 32-ஆம் வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, அங்கு தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரும் சிதம்பரநாதன் செட்டியாரும் தமிழ் ஆய்வில் ஈடுபட அடிகளாரை ஊக்குவித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் நான்கு ஆண்டுக்காலம் பயின்று தமிழ் முதுகலை, இலக்கிய முதுகலை ஆகிய இரு பட்டங்களையும் பெற்றார்.
இந்திய நாகரிகத்தின் முழுமையையும் இலக்கியச் செழுமையையும் உரிய முறையில் ஆராய்ந்து அறிய, வடமொழி அறிவோடு தமிழறிவும் இன்றியமையாதது என்பதை அறிஞர் உலகத்துக்கு அடிகளார் தெளிவாக உணர்த்தினார்.
தமிழாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மட்டும் படைத்தால் போதாது, அவை ஆங்கிலத்திலும் வடிக்கப்பட்டால்தான் உலக அரங்கினைச் சென்றடைய முடியும் என்பதால் தமிழாய்வுக்காக ஆங்கில இதழ் ஒன்று வெளியிடப்படுவது அவசியம் என்பதைத் தம் உலகத் தமிழ்த் தூதுப் பயணத்தின்போது அடிகளார் உணர்ந்தார். இத்தேவையை நிறைவு செய்ய 1952-ஆம் ஆண்டில் 'தமிழ் கல்ச்சர்' என்னும் ஆங்கில முத்திங்கள் இதழை அடிகளார் வெளியிடத் தொடங்கினார்.
பல்வேறு காரணங்களால் அந்த ஆங்கில இதழினைத் தொடர்ந்து நடத்த அடிகளாரால் இயலாமல் போயிற்று. ஆகவே 1966- ஆம் ஆண்டில் அவ்விதழ் நிறுத்தப்பட்டது. எனினும் அத்தைகைய ஓர் ஆய்விதழின் இன்றியமையாத் தேவை தமிழறிஞர்களால் உணரப்பட்டதால், புதிய ஆய்விதழ் ஒன்றினை வெளிக்கொணரும் முயற்சியில் அடிகளாரே ஈடுபட வேண்டியதாயிற்று. எனவே அடிகளாரையே தலைமை இதழாசிரியராகக் கொண்டு 'தமிழ் ஸ்டடீஸ்' வெளியிடப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இவ்விதழ் அந்நிறுவனத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.
தமிழில் முதன் முதலாக வெளியிடப் பெற்ற கார்தில்யா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற பல நூல்களை ஐரோப்பிய நூலகங்களில் ஆய்வு செய்து அவர் கண்டுபிடித்துத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தினார். அவ்வாறே 1679- ஆம் ஆண்டு அச்சிடப் பெற்ற தமிழ் - போர்த்துக்கேய அகராதியைக் கண்டுபிடித்து அதனை மறுப்பதிப்பாக 1966- ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிட்டார்.
அடிகளாரின் முயற்சி இல்லையெனில், முதலில் அச்சேறிய இவ்வரிய தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். இதனால் 16-ஆம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்கக் குருக்களால் தமிழ் அச்சகம் நிறுவப்பட்டது என்னும் உண்மையும் இந்திய மொழிகளுள் தமிழிலேயே முதன் முதலாக நூல்கள் அச்சிடப் பெற்றன என்னும் உண்மையும் அடிகளாரால் நிறுவப்பட்டது.
உரோமை, கிரேக்கப் பேரரசுகளுடன் பழந்தமிழகம் கொண்டிருந்த வாணிப உறவுகளை நாம் அறிவோம். ஆனால், கிழக்காசிய நாடுகளுடன் அன்றைய தமிழகம் கொண்டிருந்த அரசியல் உறவு காரணமாகப் பண்பாட்டு உறவும் ஏற்பட்டது என்பதை அடிகளார்தாம் முதன் முதலில் ஆராய்ந்து வெளிப்படுத்தினார்.
தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின்போது திருவாசகம் ஓதப்படுவதையும் கம்போடியக் கோயில்களில் திராவிடக் கலைத் தாக்கம் காணப்படுவதையும் அடிகளார் கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே கம்போடியா, தாய்லாந்து நாடுகளின் மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார். இத்துறையில் முதன்முதலாக ஆய்வு செய்தது அடிகளாரே என்பது பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்ற பேரறிஞர்கள் ஏற்றுப் போற்றும் உண்மையாகும்.
பேராசிரியப் பணி, ஆய்வுப் பணி, உலக அரங்கில் தமிழ்த் தூதுப்பணி, கள ஆய்வுப் பணி, ஆய்விதழ் ஆசிரியப் பணி, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவி உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற வழிகோலிய பணி, மறைந்த தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்த பணி, கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு பரவியிருத்தலைக் கண்டு உணர்த்திய பணி போன்ற பல பணிகள் மூலம் தனிநாயக அடிகளார் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
செப். 1 தனிநாயக அடிகளார் நினைவு நாள்.