இந்த வாரம் கலாரசிகன் - 01-09-2024
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சிவாலயங்களில் மூன்று கால பூஜை நடப்பதற்கு நகரத்தார் சமுதாயத்தின் பங்களிப்பு மிக மிக அதிகம். நகரத்தார் சமுதாயத்துக்கும் ராமாயணத்துக்கும், கம்பகாதைக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று உருவானது அல்ல. அது காரைக்குடியில் 'கம்பன் அடிப்பொடி' சா.கணேசனார் அறநிலை அமைத்து, கம்பன் விழா நடத்தத் தொடங்கியதற்கு மிக மிக முற்பட்டது.
'ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியார் தலைமையில் 1939-இல்தான் முதன் முதலில் காரைக்குடியில் 'கம்பன் அடிப்பொடி' இலக்கிய நிகழ்ச்சியாக கம்பன் விழா நடத்தினார். அதற்கு முன்னால் நகரத்தாரால் கம்ப ராமாயண உபன்யாசங்கள் ஆன்மிக நிகழ்வாக நடத்தப்பட்டு வந்தன.
ஸ்ரீராமஜெயம் எழுதுவது, வீட்டில் கம்ப ராமாயணம் படிப்பது உள்ளிட்டவை பெரும்பாலான நகரத்தார் குடும்பங்களில் வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. அது மட்டும் அல்ல , திருமணங்களின்போது கம்ப ராமாயணச் சுருக்க வசனம் வெளியிட்டு அனைவருக்கும் வழங்குவதைச் சிலர் பெருமையாகக் கருதினார்கள்.
1926-இல் புதுக்கோட்டை ராங்கியம் பெரி.லெ.இலட்சுமணன் செட்டியார் அவர்களால் ஸ்ரீமத் கம்பராமாயணச் சுருக்க வசனம் புத்தகமாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. அதுவரை அச்சில் வெளிவராத பழைய ஏட்டுப் பிரதியிலிருந்து, சுருக்க வசனமாக எழுதப்பட்டதை மதுரை புத்தகசாலை கூடலிங்கம் பிள்ளையும், வித்துவான் திருமலை முத்துப்பிள்ளையும் பார்வையிட்டு அதைப் பதிப்பித்திருக்கிறார்கள்.
அவரைத் தொடர்ந்து அவரது மகன் பெரிய தம்பி செட்டியாரால் 1985-இல் அது மீண்டும் பதிப்பிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இலட்சுமணன் செட்டியாரின் பேரனும், பெரிய தம்பி செட்டியாரின் மகனுமான பெரி.லெ.பெரி.பெரியகருப்பன் செட்டியாரால் 2004-இல் மூன்றாவது முறையாகப் பதிப்பிக்கப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.
இப்போது சேலத்தில் குடியேறிவிட்ட அவர்களின் நான்காவது தலைமுறையினரான பெராதம்பி செட்டியார், அதை மீண்டும் பதிப்பித்து அன்பளிப்பாக எல்லோருக்கும் வழங்கி இருக்கிறார். அதன் ஒரு பிரதியை எனக்கும் அனுப்பித் தந்திருக்கிறார்.
===================
புத்தக விமர்சனத்திற்கு வந்திருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் என்னால் ஒரு பார்வை பார்க்கப்பட்டிருக்கும். சிலவற்றை விமர்சனத்துக்கு அனுப்புவேன். மிக முக்கியமானவை என்றால் நான் படிப்பதற்கு எடுத்து வைத்துக் கொள்வேன். அன்றும் அப்படித்தான்; புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது 'தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது' என்கிற புத்தகம்.
நான் குதித்து, நீச்சல் போட்டு விளையாடிய தாமிரபரணி என்பதே என்னை ஈர்ப்பதற்குப் போதுமானது. அதுவும் அந்தப் புத்தகம் எனது பேராசிரியர் எஸ்.தோதாத்ரி குறித்தது எனும்போது கேட்கவா வேண்டும்? உடனேயே எடுத்து எனது மேஜையில் வைத்துக் கொண்டு விட்டேன். பேராசிரியரின் வாழ்க்கைத் தடங்கள் குறித்த பதிவைச் செய்திருக்கிறார் எஸ்.காசிவிஸ்வநாதன்.
ஆங்கில விரிவுரையாளராக தோதாத்ரி சார் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியில் சேர்ந்த அதே 1969-ஆம் ஆண்டுதான், நான் இளநிலை வேதியியல் பட்டப் படிப்புக்காக அந்தக் கல்லூரியில் சேர்கிறேன். எனது மூன்றாண்டு பட்டப் படிப்புக் காலத்தில், நான் வேதியியல் படித்ததைவிட, தோதாத்ரி சார் உள்ளிட்ட பேராசிரியர்களிடம் ஏனைய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்ததுதான் அதிகம். 'தாமரை' இலக்கிய இதழை எனக்கு அறிமுகப்படுத்தியது அவரின் அறைதான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.
"பேராசிரியர் தோதாத்ரியின் வாழ்க்கையை 20-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து இன்று வரையிலான தமிழ்நாட்டின் அரசியல், இலக்கிய, பண்பாட்டு, தத்துவ வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. பேராசிரியர் நா.வானமாமலை மரபு விரிவடைவதற்குத் தொடர்ந்து பங்காற்றுபவர்'' என்கிற தோழர் எஸ்.பாலச்சந்திரனின் அணிந்துரை வரிகள் ஆழமான பதிவு.
பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள்; நூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள்; பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள்; சில சிறுவர் நூல்கள் என்று அவர் தமிழுக்குத் தந்திருக்கும் கொடைகள் ஏராளம். இன்றுவரை, மார்க்சிய சிந்தனை குறித்த ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தமிழகத்தின் முன்னோடி இடதுசாரித் தலைவர்கள் தேடி நாடும் நபர் பேராசிரியர் எஸ்.தோதாத்ரியாகத்தான் இருக்கும்.
பேராசிரியரின் பிறப்பிலிருந்து தொடங்குகிறது, ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியின் நடைப்பயணம். நான்குநேரியில் அவர் பிறந்ததும், திருநெல்வேலியில் தனது உறவினரான நா. வானமாமலையின் வழிகாட்டுதலில் வளர்ந்ததும், தனித்த சிந்தனாவாதியாக உயர்ந்ததும் ஒவ்வொன்றாக திகழ்கின்றன.
இது எஸ்.தோதாத்ரி குறித்த பதிவு மட்டுமல்ல. தி.க.சி., தொ.மு.சி.ரகுநாதன், பொன்னீலன் உள்ளிட்ட இலக்கியத் தளத்தில் அவருடன் பயணித்த சமகாலத் தோழர்கள் குறித்தும், தோழர் ஜீவானந்தம், தோழர் பாலதண்டாயுதம் போன்ற இடதுசாரித் தலைவர்கள் குறித்துமான தோதாத்ரியின் தொடர்பையும், பார்வையையும் உள்ளடக்கிய பதிவு.
பேராசிரியர்கள் எஸ்.தோதாத்ரியும் பி.டி.ராஜனும் இணைந்து இன்றைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை (மூட்டா) உருவாக்கியதற்கு நான் சாட்சி. மணிக்கணக்காக அவர்கள் இருவரும் பி.டி.ராஜன் வீட்டிலும் நடைப்பயிற்சி செய்து கொண்டும் கலந்தாலோசனை செய்வதை நான் எட்ட இருந்து பார்த்திருக்கிறேன்.
வரலாற்று ஆவணமாகவும் இல்லாமல், பேட்டியாகவும் இல்லாமல் இருப்பதால், சில பகுதிகளில் தெளிவின்மை தெரிகிறது. காசிவிஸ்வநாதன் தொழில்முறை எழுத்தாளராக இல்லாததுதான் அதற்குக் காரணம். பேராசிரியர் தோதாத்ரியிடம் பல மணி நேரங்கள் பேசி, ஏகப்பட்ட தகவல்களைத் திரட்டி இருக்கிறார். ஒவ்வொரு இடதுசாரித் தோழரும் படித்துத் தெரிந்து கொள்ள நிறையத் தகவல்கள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்றன.
இதுபோன்ற ஆவணப் பதிவுகளை வெளிக்கொணரும்போது புகைப்படங்கள் தெளிவானதாக இருத்தல் வேண்டும். அரை நூற்றாண்டுக்குப் பிறகும் பயன்தரும் நிலையிலான புகைப்படங்கள் இணைக்கப்படாததும் ஒரு குறை. அடுத்த பதிப்பில் இவை களையப்பட வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கிறேனே தவிர, ஆசிரியரைக் குற்றம் சொல்வதல்ல எனது நோக்கம்.
===================
'ஒரு கவளம் நிலாச்சோறு'- மோ.கணேசனின் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. அதில் இடம் பெற்றிருக்கிறது தூத்துக்குடியைச் சேர்ந்த இரா.ஆன்றோ பியோ எழில் எழுதிய இந்தக் கவிதை -
காலையில்
மாடுடன்
நடந்து சென்றால்
கிராமம்
நாயெனில் நகரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.