வீராயி தன் குடிசைக்கு உள்ளே பிரப்பங் கூடைப் பின்னிக் கொண்டிருந்தாள். முதுகுதான் வளைந்து போயிற்றே தவிர, கை, கால், உடல் வலிமை எதுவும் குறையவில்லை. கண் பார்வை சிறிது மங்கியிருக்கிறது. வயது எண்பதைத் தாண்டியிருக்கலாம். ஆனால், ஐம்பதுதான் மதிக்கலாம்.
அவளுக்கு ஓய்ந்து சாய்ந்து பழக்கமில்லை. துறு துறு என்று இயங்கிக் கொண்டே இருக்கும் மூதாட்டி!
சிறிய குடில்தான் அது. ஆனால் முகப்பில் இரண்டு மரத்தூண்கள் கடைசல் பிடிக்கப்பட்டது போல் உருண்டு திரண்டு தாங்கிக் கொண்டிருக்கும்.
அந்தத் தெருவின் கடைசி வீட்டில் இருக்கும் முத்தன் மகள் நல்லினி வீராயியின் வீட்டிற்கு வந்து, வீட்டுமுன்னே இருக்கும் ஒரு தூணைப் பற்றிச் சாய்ந்து கொண்டே உள்ளே பிரப்பங்கூடைப் பின்னும் வீராயியிடம் கேட்டாள்.
''ஏன் ஆத்தா! ஒன் மவன் எங்கே போயிருக்கு?'' என்றாள். குரலில் ஒரு வெட்கம், கன்னத்தில் திடுமெனப் பரந்த சிவப்பு. அவள் அவன்மீது கொண்டிருந்த காதலைக் காட்டியது.
''தூணைப் பிடித்துக் கொண்டு, சாய்ந்து கொண்டு, என் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் எம் மவனைப் பத்திக் கேக்குறியே! ஒனக்குத் தெரியாதா! ஊரெல்லாம் பறை ஒலிக்க ஊர்ல இருக்கிற ஆண்பிள்ளைங்க எல்லாரும் போருக்குப் புறப்பட்டுப் போனதை நீ பார்க்கலியா! அதை என் வாயால் சொல்லணும்னு பாக்கிறயா?''
''ஆத்தா! என்னமோ ஒங்க மவனைக் காணாமே அப்படின்னு கேட்டேன். அதுக்குப்போய் என்னென்னவோ சொல்றியே!''
''அடி போடி என் தம்பி மவளே! அவன் போர்க்களத்திற்குப் போயிருக்கறதும், அவனுக்கும் உனக்கும் உள்மனசுல காதல் இருக்கறதும் எனக்குத் தெரியாதா? புலி தங்கியிருந்த குகை போல, என் மகன் குடியிருந்த வயிறு இதோ! புலி குகையிலேயே தங்கியிருக்குமா? இந்த வீட்டிலேயே அந்த வீரப்புலி முடங்கிக் கிடக்குமா? போர்க்களத்திலே எல்லாரையும் மேம்பட்டு நிற்கும் அந்தப் புலிக்குட்டி!''
''அப்படியா ஆத்தா!''
''ஏய்! உனக்கும் தெரியும். அதனை என் வாயாலே சொல்லக் கேட்டு நீ மகிழ்ச்சி அடையணும்னு நினைக்கிறே. எனக்கும் அப்படித்தான். யாராவது கேட்டு அவனைப் பத்தி சொல்லணும்னு ஆசை. நல்ல வேளை நீயே கேட்டுட்டே. நம்ம ரெண்டு பேர் ஆசையும் தீர்ந்து விட்டதடி என் ராசாத்தி!''
சிற்றில் நற்றூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
- புறநானூறு 86
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.