
மன்னரை மற்றும் வள்ளல்களை வாழ்த்துதலை நம்முடைய தமிழ் இலக்கியங்களிலே பரக்கக் காணலாம். பொதுவாகக் கடவுள் வாழ்த்துடன் இலக்கியங்களைத் தொடங்குவது மரபு. ஆயினும் கடவுளை முன்னிலைப்படுத்திப் பாடுவது அரிதாகவே அமையும்.
நற்றிணையில் முருகப் பெருமானை குறிஞ்சி நிலக் குறமகளிர் முன்னிலைப்படுத்தி வாழ்த்துகின்றனர். சங்க காலத்திற்குப் பிற்பட்ட சமய மறுமலர்ச்சிக் காலத்திய இலக்கியங்கள் கடவுளை முன்னிலைப்படுத்தி வாழ்த்துவதைப் பதிவு செய்துள்ளன.
பெரியாழ்வார், திருமாலுக்குக் கண் எச்சில் வந்துவிடுமோ என்று 'பல்லாண்டு பல்லாண்டு' என்று திருமாலை முன்னிலைப்படுத்தி வாழ்த்திப் பாடுகிறார். களவுக் காலத்தே தலைவனின் பிரிவினாலே துயருற்ற குறிஞ்சி நிலத் தலைவியைக் கண்டு 'இவள் முருகால் அணங்கினாள்' என்று அன்னை வெறியெடுப்பக் கண்ட தோழி, முருகனை முன்னிலைப்படுத்தினளாக இவ்வாறு கூறுகின்றாள்.
'எம் கடவுளான முருகே (முருகப் பெருமானே!) நின் இத்தகைய மடமையோடும் கூடினாயாக! நீ நெடுநாள் வாழ்வாயாக! கடவுள் தன்மை நிறைந்த இம்மலைப் பகுதியில் உள்ள சுனைகளில் பூத்துக் குலுங்கும் குவளை மலர்களையும் செங்காந்தள் மலர்களையும் தொடுத்துக் கட்டிய மலர் மாலைகளைத் தம்
மார்பில் அணிந்து கொண்டு வேலன் வெறியாடுகின்றான். இத்தகைய பெருமை பொருந்திய குறிஞ்சி நிலப் பகுதியைச் சார்ந்த எம்தலைவன் களவுக் காலத்தில் எம் தலைவியை இன்புறச் செய்து பிரிந்துவிட்டான். அவன் பிரிவைத் தாங்க இயலாத எம் தலைவி உடலெங்கும் பசலை நோய் படர்ந்து துன்புற்று வாடுகிறாள்.
இந்த உண்மையை அறியாத எம் தோழியின் நற்றாய் குறிஞ்சி நிலக் கடவுள் முருகப் பெருமானால் இந்நோய் வந்து விட்டது என்று தவறாகக் கருதி 'வேலன் வெறியாடலுக்கு' ஏற்பாடு செய்துவிட்டாள். உண்மையில் இந்நோய் நின்னாலே வருந்திக் கொடுக்கப்பட்ட நோயன்று என்பதை (நீயும்) நன்கு அறிவாய்.
இதோ! நின்னைக் குறித்து கடம்ப மலர்களை மாலையாகச் சூட்டிக் கொண்ட வேலவன் 'வெறியாடுகின்றான்'. நீயும் எம்மலையிடத்து வந்து தோன்றினை! உன்னை என்னவென்று சொல்ல? திண்ணமாக நீயும் அறியாமை உடையை காண்'' என்று முருகப் பெருமானைக் குறமகள் கடிந்து கொள்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.
கடவுட் கற்சுனை அடைஇறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவிஇன் இயத்து ஆடும் நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்னணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! (நற். 34)
முருகனே! எம் தலைவியைத் தலைவனோடு விரைவிலே மணம்பெற்று இன்புறுவதற்கு உதவினையானால், இவள் பசலைநோய் தானே தீரும் என்று குறிப்புப் பொருந்தப் பாடுகிறாள்.
இப்பாடல் வரிகளை 'இது முருகற்குக் கூறியது' என்பது நச்சினார்க்கினியர் (தொல். பொருள்.
சூ. 114 உரை) கூற்று. 'இது முருகனை முன்னிலையாகக் கூறியது' என்று இளம்பூரணரும் (தொல். பொருள். சூ. 112 உரை) காட்டுவர்.