உரை விளக்கத்திற்கு உதவிய சங்க நூல்கள்

நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்ற வைணவ உரையாசிரியர்கள் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையிலேயே ஆழ்வார் பாசுரங்களுக்குப் பொருள் கூறி வந்தனர்.
Published on
Updated on
2 min read

நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்ற வைணவ உரையாசிரியர்கள் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையிலேயே ஆழ்வார் பாசுரங்களுக்குப் பொருள் கூறி வந்தனர். எனினும் சிற்சிலவிடங்களில் சங்கப் பாடல்களின் உதவி கொண்டு அவர்கள் உரை விளக்கம் தருவது பெரிதும் உவகை தருகின்றது.

தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் வருந்தும் தலைவி ஒருத்தி மகன்றில் பறவைகளைத் தூது அனுப்பக்கருதி அவற்றை முன்னிலைப்படுத்திப் பேசுகின்றாள்.

'என் பிரிவுத் துன்பம் கண்டு இரங்காதவரோ, கேட்டு இரங்கப் போகிறார்? அவருக்கு என்ன சொற்களைச் சொல்லி, நான் உங்களிடம் கூறி அனுப்புவேன்? "இனி நல்ல உயிரானது அவரிடத்தில் (அதாவது தலைவியிடத்தில்) தங்கியிராது' என்று ஒரு வார்த்தை சொல்லுவீர்களோ? மாட்டீர்களோ?'' என்கிறாள்.

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத

என்நீல முகில் வண்ணற்கு என்

சொல்லியான் சொல்லுகேனோ?

நன்னீர்மை இனியவர்கண் தங்காது

என்றொரு வாய்ச்சொல்

நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ

நல்கீரோ? (திருவாய்மொழி 1-4-4)

என்பது பாசுரம்.

திருவரங்கத்தில் பட்டர் இதற்கு விளக்கம் அருளிச் செய்தபோது இப்பாசுரத்தின் முதலடி குறித்து ஒருவர் ஐயம் எழுப்பினார்: "தலைவி பிரிந்திருக்கும் நிலையில் கூறியது இது. அவன் அருகில் இருந்திருந்தால் நாயகியின் பிரிவுத்துயர் பற்றிய பேச்சுக்கு இடமில்லையே! பிரிவின் போது தலைவியின் பிரிவாற்றாமை முதலிய தன்மைகளைப் பிறர் சொல்லக் கேட்க முடியுமே தவிரக் கண்ணாற் காண முடியுமா? ஆதலின், "என் நீர்மை கேட்டிரங்கி' என்று இருக்க வேண்டுமே தவிர, "என் நீர்மை கண்டிரங்கி' என்று இருப்பது பொருந்தாது' என்றார்.

இதற்குப் பட்டர் பின்வருமாறு விடையளித்தார்:

'முன்பு தலைவியோடு அவன் கூடியிருந்த காலத்தில், அணைத்த கை நெகிழ்த்த அளவில் அச்சிறு பிரிவுக்கும் ஆற்றாது அவள் உடல் வெளுத்ததை (அதாவது பசப்பூர்வதை)க் கண்டவன் தானே தலைவன்! "இந்நீர்மை கண்டும் இவளைப் பிரிவது தகாது என்று இரங்கி, உடனுறையாமல் பிரிந்து சென்றானே!' என்பதுதான் தலைவியின் மனக்குறை. எனவேதான், "என் நீர்மை கண்டிரங்கி' எனக் கூறினாள்'' என்றார்.

இதனாலும் ஐயம் நீங்கப் பெறாத அவர், "இப்படியும் நடக்குமா?' என்று கேட்கப் பட்டர், 'புல்லி'', "ஊருண்கேணி' முதலியவற்றை அறியாயோ?'' என்றாராம். இங்கு அவர் எடுத்துக்காட்டிய அகப்பொருட் பாடல்கள் முறையே திருக்குறளும் குறுந்தொகைச் செய்யுளுமாகும்.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்

அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு (1187)

என்பது குறள். 'தழுவிக் கிடந்தேன், சற்றே தள்ளிப் படுத்தேன். அவ்வளவில் என்னை அள்ளிக் கொண்டதே பசப்பு'' என்பது இதன் பொருள். இதனையே ஓர் உவமையுடன் விளக்கிக் கூறுகிறது குறுந்தொகை.

ஊருண் கேணி உண்துறைத் தொக்க

பாசி யற்றே பசலை; காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி,

விடுவுழி விடுவுழிப் பரத்தலானே (399)

என்பது பாடல்.

ஈட்டுரையில் இவற்றின் முதற்குறிப்பு மட்டுமே காணப்படினும் பட்டர் இவற்றை முழுமையாகச் சொல்லி விளக்கியிருக்கக்கூடும். ஏட்டில் எழுதுகையில் சுருக்கம் கருதி முதற்குறிப்போடு நிறுத்தியிருக்கலாம். எனினும் அரும்பதங்கள் குறளை முழுமையாகவும் குறுந்தொகையின் பிற்பகுதியைச் சிறு பாட பேதத்துடனும் காட்டுகின்றன.

"இத்தமிழை நீ அறியாயோ?' என்னும் பட்டர் கூற்றில், "தமிழறிந்தார் அனைவர்க்கும் இது தெரியுமே' என்னும் குறிப்பும், அகப்பொருளைத் "தமிழ்' எனக் கூறும் மரபும் தொக்கி நிற்பதை உணரலாம்.

இனி, "சுடர்த் தொடீ இ கேளாய்' என்னும் கபிலரின் குறிஞ்சிக்கலி நாடகக் காட்சியாய் விரிவதை நாமறிவோம். தன் காதலியின் வீடு நோக்கிச் சென்று "உண்ணுநீர் வேட்டுநின்ற' தலைவனைக் காதலி பார்வையில் நமக்குக் கள்வனாகக் காட்டுகிறது கவிதை.

திருவாய்மொழியில், "திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய்வந்து, என் நெஞ்சம் உயிரும் உள்கலந்து நின்றார்' (10-7-1) என்று பாடுகிறார் நம்மாழ்வார். தம்மிடம் வந்து "கவி பாடுவித்துக் கொள்ளுதல்' என்கிற காரணத்தைக் காட்டித் தம் நெஞ்சம் புகுந்து நிறைந்தான் என்கிறார்.

ஆழ்வாரின் இக்கூற்றினை விளக்கவந்த ஈட்டுரைகாரர், "காதலி இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்று புகுமாப் போலே அவன் வந்து புகுந்தான்' என்கிறார்.

ஆழ்வார் பாசுரத்தில் உள்ள "வஞ்சக் கள்வன் மாமாயன்' என்பதனையும் கபிலர் பாட்டில் உள்ள "நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்' என்பதனையும் நோக்கி நம்பிள்ளை இங்ஙனம் உரைவிரித்தார் எனலாம். அவரது நெஞ்சில் நிறைந்து நின்ற சங்கநூற் பயிற்சியே இதற்குக் காரணம் ஆகும்.

"அலம்புரிந்த நெடுந்தடக்கை' (6) என்னும் திருநெடுங்தாண்டகப் பாசுரத்துக்குப் பொருள் கூறும் பெரிய வாச்சான் பிள்ளை, "பின்னைப் புறம்பொருவர் வாசலிலே செல்லாதபடி நிறைவாகத்தருகை' என்கிறார். இவ்வுரையானது, "பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே' என்னும் புறநானூற்று (68) அடியை நினைவூட்டுகின்றது.

"வருகுருதி பொழிதர' என்னும் பெருமாள் திருமொழிப் (10:2) பாசுரத்தின் விளக்கமாக, "செம்பாட்டுத் தரையிலே மலையருவி விழுந்தாற் போலே குருதி வந்து கொழிக்க' என்றெழுதினார் பெரிய வாச்சான் பிள்ளை. இவ்வுரை, "செம்புலப் பெயல் நீர் போல' என்னும் குறுந்தொகையடியை (40) நினைப்பிக்கின்றது.

இது போலச் சங்க நூற்பாக்களின் துணைக்கொண்டு உரைவிளக்கம் தரும் இடங்கள் மேலும் பலவுண்டு.

எனினும் காலப் போக்கில் சங்க நூல்களை, "இறைச்சி' பற்றிக் கூறும் நூல்கள் என்றும் "கள்' பற்றிக் கூறும் நூல்கள் என்றும் பிற்காலச் சமயப்புலவர்கள் இகழ்ந்து கூறினர் என்பது வரலாற்றுச் செய்தி. மேலும், "சங்க நூல்களெல்லாம் புத்த சமணச் சார்புடையன; அவைகளைப் பயிலுதல் கூடாது' என்று தமது இளமைப் பருவத்தில் சிவனடியார் சிலர் கூறக் கேட்டதுண்டு (காண்க: சங்க இலக்கியம் முதல் தொகுதி முகவுரை- ப.25) - என்கிறார் ம.பாலசுப்பிரமணிய முதலியார்.

இந்தப் பிறழ்வு எப்படி ஏற்பட்டது?

கி.பி.15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சிற்றிலக்கியங்களின் பெருவரவினால் தமிழ் நாட்டில் சங்க நூற் பயிற்சி அருகியதே இதற்குக் காரணம் ஆகும். அதற்கு முந்திய வைணவ உரையாசிரியர்களின் காலத்தில் சங்க நூல்கல்வி நிலைபெற்றிருந்தது எனலாம்.

இராமாநுசர் காலம் தொடங்கி (கி.பி.1017 -1137) கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரையிலான காலப்பகுதியை வைணவ உரையாசிரியர்களின் காலமாக வரையறுக்கலாம்.

வைணவ உரைகளில் காணப்படும் செவ்வியல் இலக்கிய மேற்கோள்கள் இதனை உறுதி செய்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com