யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

சங்ககாலத்தில் மக்கள் வாழ்க்கையில் அறம் நிலை பெற்றிருந்தது. செல்வம் மிகுந்தவர் தாமே பொருளின் பயனைத் துய்க்க வேண்டும் என நினைக்கவில்லை.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Updated on
3 min read

சங்ககாலத்தில் மக்கள் வாழ்க்கையில் அறம் நிலை பெற்றிருந்தது. செல்வம் மிகுந்தவர் தாமே பொருளின் பயனைத் துய்க்க வேண்டும் என நினைக்கவில்லை.

பிறர்க்குக் கொடுப்பதில் ஓர் இன்பத்தை அவர்கள் அடைந்தார்கள். ஈயென்று ஒருவரிடம் கேட்டல் இழிந்தது; அதைவிட இழிந்தது, வந்து கேட்டவர்க்கு இல்லை என்பது. இதுவே அவர்களின் வாழ்க்கைத் தத்துவமாக அமைந்தது.

சங்ககாலத்தில் வள்ளல்கள் இருந்தனர். பாரி, காரி, ஓரி, ஆய், அதியன், நள்ளி, பேகன் என்று சொல்லப் பெற்றவர்கள் கடையெழு வள்ளல்கள். இவர்களுக்கு முன் பலர் இவ்வாறிருந்தனர். பின்னர் அத்தகையோர் பலராக இல்லையெனவே அவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்றனர்.

இந்த வள்ளல்களின் ஈதல் எப்படிப்பட்டது? இந்த ஈகையில் ஓர் அறியாமை இருந்தது. யாருக்குக் கொடுக்கலாம், எவ்வளவு கொடுக்கலாம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. பசித்தவர்க்கு அறுசுவை உணவு கொடுத்தார்கள். உடுத்தப் பட்டுடை தந்தார்கள். அருந்த மதுவைக் கொடுத்தார்கள். இவற்றோடு விட்டார்களா? யானைகளைக் கொடுத்தார்கள். இப்படிக் கொடுக்கும் அறியாமைக்குப் பெயர் 'கொடை மடம்' என்பது.

பாரி என்ற வள்ளல், முல்லைக்கு ஒலிக்கும் மணியுடைய நெடுந்தேரைக் கொடுத்தான். அவன் குறுநில மன்னன்தான். புலவர்கள் எல்லாம் அவனை மிகவும் புகழ்ந்தனர். இப்புகழ்ச்சி பெருவேந்தர்களிடையிலேயும் மனப்புழுக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஒரு குறுநில மன்னனுக்கு இவ்வளவு புகழா என்று அவர்கள் அழுக்காறு அடைந்தனர்.

கபிலர் என்ற ஒரு பெரும்புலவர் பாரியைப் புதுவிதமாகப் போற்றிப் புகழ்ந்தார். 'பாரி, பாரி என்று ஒருவனையே புகழ்கின்றார்கள்! அவன் ஒருவன்தானா ஈதலில் வல்லவன்? வேறு யாரும் இந்த உலகில் அப்படிக் கொடுப்பவர் இல்லையா? ஏன் மேகம் இல்லையா, இந்த உலகைக் காப்பாற்றுவதற்கு?' என்று கேட்டுப் பாரி, மேகம் போன்றவன் என்று உணர்த்துகின்றார்.

பேகன் என்றொரு வள்ளல் இருந்தான். அவனும் இப்படித்தான். மயில் குளிரிலே நடுங்கிக் கொண்டிருந்ததாம். எனவே விலை உயர்ந்த போர்வையை அதற்குப் போர்த்தினானாம். உயிர்களைக் கொலை செய்வதற்குத் தயங்காத சமூகத்தில் அவற்றின் துயரம் துடைக்க முற்படும் கருணையாளர்களின் ஈதலால்தான் இந்த உலகம் இன்றுவரை வாழ்கிறது.

நீண்ட வாழ்நாளைத் தருகின்ற ஒரு நெல்லிக்கனி, மலையில் ஏற முடியாத ஒருபக்கத்தில் காய்த்திருக்கிறது. அதியமான் அந்தப்பக்கம் வேட்டைக்குச் செல்கிறான். கனி கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் ஏற முடியாத கூம்பான பாறைகளுக்கிடையில் அந்த மரம் இருக்கிறது. அதைப் பறிக்கப்போய் உயிரை இழப்பதா என்று அவன் கருதவில்லை. அந்தக் கனியை அவன் அடைந்தே ஆக வேண்டும்.

அதனை அவன் உள்ளம் போற்றும் ஒருவருக்குக் கொடுத்தே ஆக வேண்டும். அவன் ஊக்க மிகுந்தவனாய்ப் பாறைகளில் தாவி ஏறினான். அரியமலைப் பிளவுகளைக் கடந்தான். இடர்ப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் மரத்தை அடைந்து கனியையும் பெற்றான். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கும் அந்தக் கனியைப் புலமை நிறைந்த மூதாட்டி ஒளவைக்குக் கொடுத்தான். அதன் பெருமையைச் சொல்லாமல் கொடுத்தான். உண்ணுங்கள் தாயே என்றான். கனியை உண்டு அதியனைப் போற்றினாள் ஒளவை. பின்னரே கனியின் பெருமையை ஒளவையார் அறிந்தார்.

'அதியமானே! சாவை வெல்லும் அரியநெல்லிக் கனியை நீ எனக்கு ஈந்தாய். நீ நஞ்சு உண்டும் சாவாத நீலகண்டனைப் போல் நீடு வாழ்க' என்று வாழ்த்தினார்.

எத்தனையோ அரசர்கள் பெயர் வரலாற்றிலிருந்து இன்று மறைந்துவிட்டது. அதியன் பெயர் அழியவில்லை. அதியமான் ஒரு நெல்லிக்கனியால் பெரும்புகழ் பெற்றுவிட்டான்.

கொடுக்கின்ற உள்ளம் எல்லோருக்கும் வந்துவிடாது. கொடுத்தவர்கள் உலகத்தில் பலராலும் போற்றப்படும் நிலையை எய்திவிடுகின்றனர். பொருள் படைத்தவர் எல்லாரும் ஈகைச் செல்வராவதில்லை. ஈதல் என்பது பிறவிக் குணம். அந்தக் குணம் குமணனிடம் அளவுக்கு மீறி இருந்தது. வளம் மிக்க முதிரமலைக்குத் தலைவனாகிய குமணன் தன்னை அடைந்தவர்களுக்கெல்லாம் இல்லையென்று கூறாது வாரி வழங்கினான். அவனுடைய செல்வம் தேய்ந்து கொண்டே வந்தது. ஆனால் புகழ் வளர்ந்து கொண்டே இருந்தது.

இதனைக் கண்டு பொறாமையுற்ற குமணனின் தம்பி இளங்குமணன், அண்ணனிடமிருந்து நாட்டைப் பறித்துக் கொண்டு அவனைக் காட்டுக்குத் துரத்திவிட்டான். அவன் காடு சென்றபோதும் பொறாமைத் தீ இளங்குமணனைச் சுட்டெரித்தது. 'எல்லோரும் அண்ணனையே தேடி வருகின்றனரே! நான் அரசனென்று கூடப் பார்க்கவில்லையே' என எண்ணினான். தன்னைக் காண வந்தவரிடம் 'குமணனின் தலையைக் கொண்டுவந்தால் பரிசு தருவேன்!' என்று கூறுமளவு அவன் பொறாமை சென்றது.

புலவர்தம் வறுமை தீர்க்கும் குமணன் காட்டில் உள்ளான் என்று அறிந்து பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் குமணனைச் சென்று கண்டார். 'குமண வள்ளலே! என் வீட்டில் வறுமை. அடுப்பில் காளான் முளைத்துக் கிடக்கிறது' என்று தன் வறுமை கூறிப் புலம்பினார்.

குமணன் அவர் நிலையறிந்து அவரிடம் தன் உடைவாளை நீட்டினான். 'புலவரே! என் தலையை வெட்டிக் கொண்டு போய் என் தம்பியிடம் கொடுங்கள். உங்களுக்குப் பரிசு கிடைக்கும்' என்றான்.

அவனிடம் வந்து தலையைப் பெற்றுக் கொள்வதாகப் புலவர் உறுதி சொல்லிவிட்டு குமணனின் தம்பியிடம் சென்று, 'உன் அண்ணன் எனக்குத் தலை கொடுத்தான். பரிசு ஒன்றும் தருதற்கு இயலாத சூழலில் தலையை வெட்டிக் கொள்ள வாள் கொடுத்தான்' என்றான். இவ்வாறாகக் குமணன் ஈதல் திறம் புறநானூற்றில் பாடப்பெறுகின்றது.

ஈதல் என்பது மக்கள் பண்பாகத் துலங்கிய காலம் சங்ககாலம். இதனை ஆற்றுப்படைகளில் காணலாம். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நான்நிலத்திலும் வாழ்ந்த மக்கள், வழிச்செல்வோருக்கு உணவும் நீரும் தந்து அவர்தம் பசியும் களைப்பும் போக்கினர். 'விருந்து' என்பது ஒரு பெரிய அறமாக அக்காலத்தில் போற்றப்பட்டது.

அக்காலத்தில் அறமனைகள் பற்பல வழியிடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சோறு சமைத்த கஞ்சி வெள்ளம் போல் ஓடியதாகப் பட்டினப்பாலை கூறுகின்றது. வீடுகளில் இரவு நேரத்திலும் கூட விருந்தினர்களை வரவேற்க மகளிர் தயங்கவில்லை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவன் சிறந்த வீரன். மிகுந்த கொடைக்குணம் கொண்டவன். தன் கொடைச் செயல்களை எண்ணி அவன் பெருமிதம் அடைவான். ஒரு நாள் தன் ஆளுகைப் பகுதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். ஓரிடத்தில் மக்கள் எல்லோரும் ஒரு மனிதனின் புகழைப் பலவாறாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் 'நீங்கள் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்?' என்று கேட்டான். அவனை மன்னனென்று அறியாத மக்கள் அதிசயமாகப் பார்த்தனர். 'உங்களுக்குப் பண்ணனைத் தெரியாது போலிருக்கிறதே!' என்றார்கள்.

சிறுகுடி என்னும் ஊரைச் சார்ந்தவன் பண்ணன். அவனுடைய புகழைக் கேட்கக் கேட்கக் கிள்ளிவளவன் திகைத்தான். அவனுடைய வீட்டுக்கு எப்படிப் போவது என்று கேட்டான். அதற்கு ஒருவர் சொன்னார், 'வழி எதுவும் கேட்க வேண்டாம். தலையில் சோற்று மூட்டையோடு எறும்புச்சாரைகளைப் போல மனிதர்கள் வந்துகொண்டிருப்பார்கள். அந்த வரிசை தொடங்குமிடமே அவன் வீடு!' என்றார்.

கிள்ளி வளவன் சென்றான். பண்ணன் தன் வீட்டில் வந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்தபின், வழியிலும் பசியாதிருக்கச் சோற்று மூட்டைகளைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட கிள்ளி வளவன், 'நான் வாழ்ந்து என்ன பயன்? என்னுடைய வாழ்நாளையும் இந்தப் பண்ணனே பெற்று நீடு வாழட்டும். இந்தச் சமுதாயம் நல்ல பயன் பெறட்டும்!' என்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com