மரங்களும் மனிதர்களும்

மனிதர்களுடைய வாழ்வியல் இயற்கையுடன் பின்னிப் பிணைந்தது. தமிழ் இலக்கியங்கள் இயற்கை சார்ந்த பொருள்களையே மானுட வாழ்க்கைக்குச் சான்றுகளாக்குகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

முனைவர் த. காந்திமதி

மனிதர்களுடைய வாழ்வியல் இயற்கையுடன் பின்னிப் பிணைந்தது. தமிழ் இலக்கியங்கள் இயற்கை சார்ந்த பொருள்களையே மானுட வாழ்க்கைக்குச் சான்றுகளாக்குகின்றன. இயற்கையே உயிர்களைப் பிறப்பிக்கின்றது; வாழ்விக்கின்றது; வழியனுப்பியும் வைக்கின்றது.

முளைத்து, வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிந்து, முதிர்ந்து முடிவெய்தும் ஒரு மரத்தைப் போலவே மனித வாழ்வியல் நிறைவெய்துகிறது. ஒளவையாரின் தனிப்பாடல் ஒன்று மரங்களுக்கும் மனிதர்களுக்குமான குண ஒற்றுமைகளைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

மனிதர் மூவகையினர். ஒரு வகையினர், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவர்கள். வறுமையுற்றோர் அவர்களிடம் சென்று உதவுமாறு கேட்க வேண்டியதில்லை. அடுத்தவர் நிலையுணர்ந்து தாமாகக் கொடுத்து உதவும் இத்தகையோர், காணாமல் பூப்பூத்து, கண்டு காய்காய்த்து, இன்கனி நல்கும் பலாவைப் போன்ற இயல்பினர்.

இரண்டாம் வகையினர், யாரேனும் தம் துயரைச் சொல்லி உதவி கேட்டால் உதவும் இயல்பினர். இவர்கள் மாமரத்தைப் போல, பூத்துக் காய்த்துக் கனியினை நல்குவர். மாமரம் பூத்து, 'இதோ நான் பூத்துவிட்டேன், இனிக் கனி தரப் போகிறேன்' என்று அறிவிப்பதைப்போல, வெளிப்படையாகக் கேட்பவர்களுக்கு மட்டும் உதவுவர்.

எவர் துயர் கண்டும் இளகாத வன்நெஞ்சமுடையோர் மூன்றாம் வகையினர். அழுது, தொழுது கேட்டாலும் கேட்டாலும் கொடுக்கவே மாட்டார்கள். தம் செல்வத்தை மறைத்துவைப்பர். இவர்கள் பாதிரி மரத்தை ஒத்தவர்கள். ஒரு மரத்தின் பயன் கனிகள் தருவது. பாதிரி நறுமணமிக்க மலர்களுடன் பூத்துக் குலுங்கும். காய்கள் தரும். ஆயினும், சுவையுடைய கனிகள் தராது. அதைப்போல,

இவ்வகையினர் யாருக்கும் பயன்பட மாட்டார்கள்.

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்

சொல்லியுஞ் செய்யார் கயவரே! நல்ல

குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்

பலாமாவைப் பாதிரியைப் பார் (த.பா.31)

'அசைகின்ற (குலாம்}அசைவு) மாலையினைச் சூடிய வேலினை ஒத்த கண்களையுடைய பெண்ணே! சொல்லாமலே (உதவி செய்பவர்) பெரியர். சொல்லியபின் செய்பவர் சிறியர். சொல்லிய பின்னும் உதவார் கயவர். இத்தன்மையோர்க்கு நாட்டில் இருக்கின்ற பலா, மா, பாதிரி ஆகிய மரங்களை உவமை கூறலாம், எண்ணிப் பார்!' எனப் பொருள். பாதிரியை ஒத்தவர்கள் கேட்டும் தர மறுப்பர் என்கிறார் ஒளவையார்.

பலா மரம் பூக்காதா என்ற வினா நமக்கு எழுகிறது. பூக்கும். ஆனால் தெரியாது. அத்தி, ஆல், பலா, அரசு ஆகிய நம் நாட்டு மரங்கள் பூவா மரங்கள் எனப்படுகின்றன. இவை மட்டுமல்லாது, எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மர இனங்கள் காணாமல் பூப்பூக்கும் தன்மையன என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பலா திரள்கனி வகையைச் சேர்ந்தது. முன்னர் இருந்த பூக்களே கனியின் மேற்பகுதியில் முட்பகுதிகளாக மாற்றமடைகின்றன என்கின்றனர். மீச்சிறு பூக்களில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்ட பின் காய் மட்டுமே நமக்குத் தெரிவதால், பூ இருந்தது தெரிவதில்லை.

அடுத்து, 'பாதிரி மரம் கனி தராதா?' என்ற கேள்வி எழுகிறது. பாதிரியும் கனி தரும். அது எருக்கு, இலவம் முதலானவற்றைப் போல உலர் கனி வகையைச் சேர்ந்ததாகும். சாறுள்ளதும் மக்களின் பசியாற்றவல்லதுமானதையே கனியென நம் முன்னோர் கருதினர். ஆகவே, பாதிரியின் கனியை ஒளவை கனியெனக் கருதவில்லை. அறிவியல் ஓங்கி வளரும்முன் தமிழரிடையே அறவியல் ஓங்கி வளர்ந்திருந்தது. அதன்விளைவே ஒளவையின் அருமருந்தாகிய மேற்சுட்டிய பாடலாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com