இரட்டுற மொழிதலில் ஈடில்லாப் புலவர்!

வெண்பா பாடுவதிலே எப்படி புகழேந்திப் புலவர் வல்லவரோ அதுபோல, சிலேடைப் பாடல்கள், இரட்டுற மொழிதல் பாடல்கள் பாடுவதில் காளமேகப்புலவர் தனிச்சிறப்புள்ளவர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

வெண்பா பாடுவதிலே எப்படி புகழேந்திப் புலவர் வல்லவரோ அதுபோல, சிலேடைப் பாடல்கள், இரட்டுற மொழிதல் பாடல்கள் பாடுவதில் காளமேகப்புலவர் தனிச்சிறப்புள்ளவர். ஆலய மடப்பள்ளிகளில் பணிபுரிந்துகொண்டே மடை திறந்த வெள்ளம்போல் கவிதை மழை பெருக்கெடுத்து ஓடச் செய்தவர்.

வரதன் எனும் இயற்பெயர் கொண்ட இவர் குடந்தை அருகிலுள்ள நாதன்கோயில் என்ற ஊரில் பிறந்தவர். ஒரு பொருளை சிலேடையாக இரட்டுற மொழிதலில் இவருக்கு நிகர் இவரே. அதில் ஒரு சில பாடல்கள் நகைச்சுவையாகவும் கவிநயம் மிக்கவையாகவும் உள்ளன.

வைக்கோலையும் யானையையும் இணைத்துப் பாடிய பாடல் ஒன்று.

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டை புகும்

போரில் சிறந்து பொலிவாகும்- சீருற்ற

செக்கோல மேனித் திருமலைராயன் வரையில்

வைக்கோலும்மால் யானை ஆம்.

வைக்கோலானது விவசாயிகளினால் வயலிலிருந்து வாரி எடுக்கப்பட்டு, நெற்களத்தில் போட்டு அடிக்கப்பட்டு, பின் புரியாகத் திரிக்கப்பட்டு, நெற்கோட்டையை சூழ்ந்து பெருங்குவியலாக மலை போன்று உயர்ந்து காணப்படும்.

அதுபோல, பெரிய யானையானது போர்க்களத்தில் பகைவர்களைத் தன் துதிக்கையால் வாரி நிலத்தில் எறியும்.போர்முடிந்த பின் மன்னனின் கோட்டைக்குள் புகும்.

அதனால் யானைப் படை மற்ற படைகளைவிட சிறப்பாகக் கருதப்படும். இங்கு களம் என்பது நெற்களம், போர்க்களம் ஆகியவற்றையும், கோட்டை என்பது நெற்கோட்டை, அரசனின் கோட்டை ஆகியவற்றையும், போர் என்பது வைக்கோல் போரையும், சண்டை நடக்கும் போர்க்களத்தையும், சீர் என்பது புகழையும் கோலம் என்ற அழகையும் குறிப்பதாகும்.

மற்றொரு பாடலில் காளமேகப் புலவர் மீனையும் தலையில் உள்ள பேனையும் இணைத்து பாடியுள்ளது ரசிக்கும்படி உள்ளது.

மன்னீரிலே பிறக்கும் மற்றலையிலே மேயும்

பின்னீச்சில் குத்தும் பெருமையால்-சொன்னேன் கேள்

தேனுந்து சோலைத் திருமலைராயன் வரையில்

மீனும் பேனும் சரியாமே.

மீனானது நீர்நிலைகளில் இருந்து அங்கும் இங்கும் நீந்தி இருக்கும். நீந்தும் சமயத்தில் ஏதேனும் அரவம் கண்டால் பின்னால் வந்து கொத்தி மறையும். பேன் என்பது தலைமுடியில் இருக்கும். அதன்முட்டை ஈரினிடத்தில் உண்டாகும். தலை

முடிகளுக்கிடையே ஊர்ந்து சென்றிடும். பின் ஈருளிசீப்பால் எடுக்கப்பட்டு குத்தி நாசப்படுத்தப்படும். எனவே மீனும் பேனும் ஒன்றுக்கொன்று சமமான பண்பைக்கொண்டுள்ளன.

இங்கு மன்னீர் என்பது நிலைத்த நீர்நிலையையும் , மன் ஈர் என்ற பதத்தில் பேனின் முட்டையான ஈரினையும், மற்றலை என்பது மற்றும் நீர்நிலை என்பதையும் மன்தலை என்பது நிலைத்த தலைமுடி என்பதையும், பின்னீச்சல் என்பது பின்னால் நீந்துதலையும், பின் ஈச்சு என்ற வாயொலியையும், உந்துதல் என்பது பாய்தலையும் குறிக்கும் என்கிறார் காளமேகப்புலவர்.

இதுபோல வானவில்லை திருமாலுடனும் வெற்றிலையுடனும் இணைத்துப் பாடிய பாடல் ஒன்று.

நீரில்உளவா நிறம் பச்சையால் திருவால்

பாரில் பகைதீர்க்கும் பான்மையால்- சாருமனுப்

பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான

வில் விண்டு நேர் வெற்றிலை.

நீர் கொண்ட கருமேகத்தில் உண்டாவது வானவில். பச்சை உள்ளிட்ட ஏழு வண்ணங்களாகும். மழை பெய்வதற்கு மங்களமான அடையாளம். பூமிக்குப் பகையாய் விளங்கும் கோடையை நீக்கி மழையைப் பெய்ய வைக்கும். உலகோர் துயரங்களைநீக்கும்.

பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் பச்சைநிற மேனிகொண்டவர். தம் தேவியாகத் திருமகளைக் கொண்டவர். அரக்கர் குலத்தை அழித்திடும் வன்மை கொண்டவர். தன்னைச் சரணாகதி அடைந்தோரின் பாவங்களைப் போக்கி அருள்பவர். நீரில் நனைத்துப் பயன்படுத்தப்படுவது வெற்றிலையாகும்.

பச்சைநிறமுடைய மங்கலப் பொருளாகும். உலகில் பகையைப்போக்கி சமாதானத்தின் அடையாளமாக விளங்குவதாகும்.நோய்களைப்போக்கும் வல்லமையையும் உடையது. எனவே வானவில்லும், திருமாலும், வெற்றிலையும் சமமாகுமென்கிறார் புலவர். இங்கு நீர் என்பது மேகத்தையும் பாற்கடலையும் பல்வினை என்பது பலவிதமான வினைகளையும் விண்டு என்பது திருமாலையும் குறிக்கும்.

கங்கையும் காவிரியும் நீர்ப்பெருக்கால் பெருமை பெறும். காளமேகமோ சொற் கவிப்பெருக்கால் பெருமை பெற்றவர். நகை, அவலம், வீரம் என பல்சுவைப் பாடல்களைப் பாடியுள்ளார். சிவனைக் குறித்து, மிகுதியாகப் பாடியிருப்பினும் திருமாலையும் நாவினிக்கப் பாடி சைவ வைணவ பேதங்களை தவிர்த்த கவி இவர். தமிழ் ஆர்வலர்களுக்கு இவரது பாடல்கள் தன்னிகரற்ற விருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com