'வாளின் மேல் நின்று செய்யும் தவம்' என்பது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தடம் மாறிவிடாமல் நடப்பது மிகச் சிரமம் என்பதை விளக்கக் கம்பன் தரும் உவமையாகும். இராமனுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, தவ வாழ்க்கை வாழ முடிவு செய்தான் தயரதன். அரசகுரு வசிட்டனையும், அமைச்சர்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான்.
"இராமனுக்கு வாய்த்திருக்கும் மனைவி, மிக உயர்ந்தவள்; இராமனை மக்கள் உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்' என்ற அமைச்சர்கள், தயரதனின் முடிவுக்கு உடனே ஒப்புக்கொண்டார்கள். மகிழ்ந்த தயரதன், இராமனை அழைத்துவரச் செய்தான்.
வந்த இராமனிடம் "நீ ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, எனது துயரைத் தவிர்க்க வேண்டும்' என்றான். வசிட்டரிடம், "குருவே! அரசனாகப் பொறுப்பேற்க இருக்கும் இராமனுக்கு, ஆட்சியாளனின் பொறுப்புகள்குறித்து நீங்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டான். அரசகுருவான வசிட்டன், ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தேவையான அரசியல் அறங்களை ஒவ்வொன்றாக இராமனுக்கு எடுத்துச் சொன்னான்.
ஆட்சிப் பொறுப்பில் அமர்பவர்கள், எக்காரணம் கொண்டும் அறவழியில் இருந்து மாறிவிடாமல் இருக்க வேண்டும். முக்கடவுளரான பிரமன், திருமால், சிவன் போன்றோரும், தெளிந்த அறம், செம்மையான மனம், எல்லா உயிர்களுக்கும் அருளும் தன்மை ஆகியவற்றில் இருந்து பிறழ்ந்து நடந்தால், அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூது போன்ற எந்தத் தீயப் பழக்கமும் இருக்கக் கூடாது.
எவர் மீதும் வன்மம் இல்லாத மனம் வேண்டும். வன்மமே பிறர் மீது பகை கொள்வதற்குக் காரணமாக அமைகிறது. யாரிடமும் பகை உணர்ச்சி இல்லாமல் இருப்பவருக்கே, புகழ் வளரும்.
அறிவார்ந்த அமைச்சர்களை அருகில் வைத்திருக்க வேண்டும். அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும்.
தேவர்களானாலும், முனிவர்களானாலும், மனிதர்களானாலும், அவர்கள் தங்கள் ஐம்புலன்களை அடக்குவதால் மட்டுமே பெருமை அடைவதில்லை. மனதில் அன்பு இல்லையென்றால், எவற்றாலும் பெருமை இல்லை. அதிகாரம் குவிந்திருக்கும் நிலையில், எல்லாரிடமும் சமமான அன்பு கொள்ள வேண்டும்.
ஆட்சியில் இருக்கும் மன்னன், உடல் போன்றவன்தான்; நாட்டு மக்களே உயிர் போன்றவர்கள்.எனவே அனைவரிடமும் அருள் நிறைந்த மனத்துடன், அறத்தில் இருந்து பிறழாமல் செயல்களை அவர்கள் செய்துவந்தால் போதும்.
மிகக் குறிப்பாகப் பெண்கள் தொடர்பால் வரும் கெட்ட பெயரை அதிகாரத்தில் இருப்பவன் பெற்றுவிடவே கூடாது. சிற்றின்பத் தொடர்புகளால் கெட்ட பெயர் வாங்காமல் இருப்பவன், இவ்வுலக வாழ்க்கையில் கெட்டுப் போக மாட்டான்; இறந்த பின்னரும் நரக வாழ்க்கை கிடையாது.”
இப்படிப் பெரிய பட்டியல் இட்ட கம்பனுக்கே, நடைமுறையில் இவற்றைப் பின்பற்றுவது எளிதல்ல என்று தோன்றியிருக்க வேண்டும். அந்த வரிசையில் இந்தப் பாடலையும் வைத்தான்.
கோளும் ஐம்பொறியும்
குறைய, பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு
நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது,
வாளின் மேல் வரு மா தவம்,
மைந்தனே!
"இப்படி ஆட்சி நடத்துவது என்பது, தவம் செய்வதுபோல! அதுவும், மான் அல்லது புலித்தோலில் அமர்ந்து, எல்லாவித வசதிகளோடும் செய்யும் தவம் அல்ல. "ஐம்பொறிகளால் வரும் ஆசைகளைத் தடுத்து, மக்களுக்குத் தேவையான பொருள்வளத்தை ஒவ்வொரு நாளும் பெருக்கி, பகைவர்களை அடக்கி செய்யப்படும் ஆட்சிதான் உயர்ந்தது. அது, வாளின் கூர்மையான பகுதியில் நின்று செய்யும் தவம் போன்றது' என்கிறான் கம்பன்.