வள்ளலைப் போற்றுவோம்!
இந்த உலகத்தில் வாழ்வோர் இருவகையினர். தனக்காகவே மட்டும் வாழ்ந்து மறைபவர்கள் ஒருவகையினர். இவர்களை அகங்காரத்தார் என்பர். மற்றொரு வகையினர் பிற உயிர்களுக்காகவே வாழ்ந்து நிறைபவர்கள். இவர்களை மமகாரத்தார் என்பர். அறிவுடையவர்கள் என்போர் மமகாரத்தார் வகையைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் திருவள்ளுவர்,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை
என்றார்.
அறிவினாலும் அருளினாலும் இந்த உலகத்தைக் காண்பவர்கள் இந்த இரண்டு வகையினையும் கடந்த ஆழ்ந்த அருளாளர்களான வள்ளல்களாக விளங்குவர். இவ்வகையினர் அரிதினும் அரிதாகவே தோன்றுவர்.
தாங்கள் ஆறறிவு பெற்றிருந்தபோதும் ஓரறிவு உயிர்க்கும் பரிந்து இரங்கும் பேரருள் பண்புடையவர்கள். பாரி முதலான கடையேழு வள்ளல்கள் அவ்வகையில் சேர்வர். பெரு வள்ளன்மைக்குப் பாரி முல்லைக்குத் தேரீந்ததைச் சுட்டிக்காட்டுவார்கள். தன் முன்னே இருப்பது முல்லைக் கொடியாகிய ஒரு தாவரம்.
அது கொழுகொம்பில்லாமல் தவிக்கிறது. தான் ஆறறிவு பெற்ற மனிதன். அதிலும் அரசன். இந்த எண்ணங்களெல்லாம் அவன் மனத்திலே தோன்றவேயில்லை. அவன் ஆணையிட்டால் பந்தலிடுவதற்குப் பலர் ஓடி வருவார்கள். அல்லது அவனே கூட ஏதேனும் கழிகளை நட்டுப் பந்தலை இட்டிருக்க முடியும். ஆனால், அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு அவன் மனம் அந்தக் கொடி முல்லையின் துன்பத்தில் பங்கெடுத்து விட்டது.
அதனால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட ஆராயாமல், உடனே ஒரு முடிவெடுத்தான். தன் தேரையே அதற்குப் பந்தலாக நிறுத்தி விட்டான். பொதுவான உலகப் பார்வையில் இஃதோர் மடமை போலத்தான் தெரியும்.
ஆனால் அதையெல்லாம் விடப் பிறவுயிர் படும் துன்பம் வள்ளல்களுக்கு முதன்மையாகத் தெரியும். எனவே இந்த மடமையையும் அத்தகைய வள்ளல்களுக்கு அழகு என்றே போற்றிப் புகழ்கின்றனர் புலவர்கள். ஆனால் அது எத்துணை பெரிய பேரருட் கருணை. இதனைப் பழமொழி நானூறு,
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டுஅறிதும் -
சொல்லின்
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க்கு அணி
என்கிறது.
முல்லைக் கொடிக்கு ஒரு கொழுகொம்பை நடுவதற்கு முடிந்தபோதும், அதற்கும் காலம் ஆகும் எனக் கருதி, தான் வந்த தேரையே கொடுத்த பாரியின் செயலும், மயிலுக்காகத் தான் அணிந்திருந்த போர்வையையே தந்த பேகனின் செயலும் அறிமடத்துக்குச் சான்றுகள் என்று போற்றுகிறது.
இந்த அருட்தன்மை காலந்தோறும் தொடர்ந்திருக்கிறது. இந்த உயிரிரக்கப் பண்பினை, அடுத்தவர் துயர் கண்டு துடிக்கும் பேரருள் கருணையினைப் பெற்றவர்கள் பக்திமான்களாகவும் விளங்கியிருக்கின்றனர்.
இந்த அன்பில் நிறைந்தவர்களை ஆழ்வார்கள் என்று போற்றியழைக்கிறோம். அவர்களுள் ஒருவரான குலசேகராழ்வார் இராமகாதையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, அரக்கர்கள் படையெடுத்து வரும்போது அவர்களை எதிர்க்க இராமன் படையேதுமின்றித் தனியாகக் கிளம்பினான் என்று கூறியதைக் கேட்டிருக்கிறார்.
கதை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்கின்ற சூழலை மறந்த அவர், தனியனாக இருக்கும் இராமனுக்கு உதவ வேண்டுமே என்று கதையை நிறுத்திவிட்டுத் தன்னுடைய மந்திரியை அழைத்துப் படைகளைத் திரட்டி உடனடியாக இராமனுக்கு உதவும்படி ஆணையிட்டார். இவ்வாறு மற்றவர் துன்பங்கண்டு துடிக்கின்ற பெருங்கருணைக்குக் குலசேகராழ்வாரும் சான்றானார்.
நம் காலத்திலும் அப்படி வள்ளல்கள் வாழ்ந்தார்கள். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார் பெருமான் தன்னை நாடி வந்த உயிர்களுக்கெல்லாம் வயிறார உணவளித்துக் காத்தார்.
அவரைப் போலவே கோடி கொடுத்த கொடைஞராக, குடியிருந்த வீடும் கொடுத்த விழுச்செல்வராக வள்ளல் அழகப்பரும் விளங்கினார். அவர் அளித்த கொடைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு விட முடியாது. ஆனாலும் அந்தக் கொடையை எல்லாம் விஞ்சும் ஒரு நிகழ்வு அவர் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது. அது இந்த வள்ளல் மரபோடு ஒத்திருக்கிறது.
வள்ளல் அழகப்பர் அண்ணல் காந்தியடிகள்மீது அளப்பரிய பற்றுக் கொண்டிருந்தவர். 1948-ஆம் ஆண்டு அவர் சுடப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் துடிதுடித்துப் போய்விட்டார். வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. அவர் மனம் உடனடியாகக் காந்தியடிகளுக்கு அருகில் சென்று விட்டது.
அதே வேகத்தில் உடலும் செயல்பட்டது. சென்னையிலிருந்த சித்த மருத்துவர் ஒருவரை உடன் அழைத்துக் கொண்டு தில்லிக்கு விமானத்தில் பறந்து சென்றார். தில்லியில் சுடப்பட்ட ஒருவருக்குச் சென்னையிலிருந்து சென்று உதவி செய்து காப்பாற்ற இயலுமா என்கிற எண்ணமெல்லாம் அவருக்குத் தோன்றவில்லை. அவருடைய ஒரே நோக்கம், காந்தியடிகளைக் காப்பதே. நொடிப்பொழுதில் மனத்தில் முடிவெடுக்கிற அந்த வள்ளல்களின் தன்மையை என்னென்பது?
பிறர் துன்பங்கண்டு துடிக்கின்ற துடிப்பு வள்ளல்களுக்கே உரியது போலும். வள்ளல் அழகப்பரும் அவ்வரிசையில் தன்னை நிறுவிக் கொள்கிறார். அதனால்தான், தான் பெற்ற கல்வியாகிய செல்வத்தை இந்தச் சமுதாயம் பெற வேண்டும் என்று கருதித் தனது செல்வத்தையெல்லாம் கல்விக்கே கொடையாகக் கொடுத்து, இப்படிச் சொன்னார்:
'நான் கனவு காண்பவன்தான். ஆனால் கனவு காண்பவர்கள்தான் மனிதர்களில் பெரும் செயல்வீரர்களாகத் திகழ்கிறார்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். எதிர்கால நோக்கமும், கனவுகளும் இல்லாமல் எதிர்காலத்தை உருவாக்க முடியாது. இத்தகைய கனவுகள் மேலும் மேலும் வளர்ந்து நிதர்சனங்களாக உருவாகும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்''.
அந்தக் கனவு இன்றும் புத்துயிர்ப்போடு ஒவ்வொரு கணமும் அவரது கல்வி நிறுவனங்களின் வாயிலாக நனவாகிக் கொண்டிருக்கிறது. அவரது பிறந்த நாளான இன்று, வள்ளலின் பெரும்புழைப் போற்றுவோம்.
(ஏப்ரல் 6, வள்ளல் அழகப்பரின் பிறந்த நாள்)