இந்த வாரம் கலாரசிகன் - 06-04-2025

இரண்டு ஆளுமைகளான ஆனந்த விகடன் சேர்மனும், ஆசிரியருமான எஸ்.எஸ்.பாலன் என்கிற, எஸ்.பாலசுப்பிரமணியன் என்கிற, எழுத்தாளர் சேவற்கொடியோனும் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையும்.
இந்த வாரம் கலாரசிகன் - 06-04-2025
Updated on
2 min read

தமிழ் இதழியல் உலகில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிக அழுத்தமாகத் தடம் பதித்த இரண்டு ஆளுமைகள் ஆனந்த விகடன் சேர்மனும், ஆசிரியருமான எஸ்.எஸ்.பாலன் என்கிற, எஸ்.பாலசுப்பிரமணியன் என்கிற, எழுத்தாளர் சேவற்கொடியோனும் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையும். பத்திரிகை அதிபர்களான அந்த இருவரும் தங்களது முகமாக பத்திரிகை இருந்தால்போதும் என்று கருதியவர்கள்.

கல்கி, தேவன், சாவி, மணியன், மதன் உள்ளிட்ட பலர் ஆனந்த விகடனின் முகமாக வலம்வர அனுமதித்த, எம்.டி. என்று எல்லோராலும் பரவலாக அறியப்பட்ட சேர்மன் எஸ்.பாலசுப்பிரமணியனின் பெருந்தன்மையை நினைத்தால் வியப்பு மேலிடும்.

எங்களது ஆசிரியர் சாவி சார் அடிக்கடி நினைவுகூரும் இதழியல் சமகாலத்தவர்கள் குமுதம் எஸ்.ஏ.பி.யும், ஆனந்த விகடன் எஸ்.பாலசுப்பிரமணியனும். பிரசுரத்துக்கு வரும் கதை, கட்டுரைகளை படித்து, திருத்தி, செப்பனிட்டு, தேவைக்கேற்றவாறு அளவைக் குறைத்து, தலைப்பிட்டு வெளியிடுவதில் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு நிகரானவர் அவர் மட்டுமே என்று பலமுறை சாவி சார் தெரிவித்திருக்கிறார்.

எஸ்.எஸ்.வாசன் ஆசிரியராக இருந்தபோது ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதால் சாவி சாருக்கும் எஸ்.பாலசுப்பிரமணியனுக்கும் நெருக்கமான நட்பு இருந்ததில் வியப்பில்லை.

ஆனந்த விகடனில் "சேவற்கொடியோன்' என்கிற பெயரில் வெளிவந்த தொடர் கதைகளின் மூலவர் எஸ். பாலசுப்பிரமணியன்தான் என்பது பின்னாளில்தான் எனக்குத் தெரிய வந்தது.

1960 களில் ஆனந்த விகடனில் வெளிவந்த "உன் கண்ணில் நீர் வழிந்தால்', "என் கண்ணில் பாவையன்றோ', "பேசும் பொற்சித்திரமே' உள்ளிட்ட அவரது தொடர் கதைகளுக்காக வாசகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அவர்களில் நானும் ஒருவன்.

நாடு தழுவிய அளவில் எஸ்.பாலசுப்பிரமணியனை பிரபலப்படுத்தியது எம்.ஜி.ஆர். ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பி.ஹெச்.பாண்டியன் தனது வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை அறிவித்த நிகழ்வு.

அதுகுறித்துக் கடைசி வரை அவர் எதுவுமே பேசவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடையாள இழப்பீடாக அவருக்கு வழங்க உத்தரவிட்ட 1000 ரூபாயை அவர் என்ன செய்தார் தெரியுமா? இரண்டு ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் ஃபிரேம் செய்யப்பட்டு அவரது அலுவலக அறையில், பத்திரிகை அடக்குமுறைக்கு எதிரான வெற்றியைப் பறைசாற்றியபடி காட்சியளித்தன.

ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசனின் குழந்தை என்றால், ஜூனியர் விகடன் எஸ்.பாலசுப்பிரமணியனின் புலனாய்வு இதழியல் பங்களிப்பு. அவரது இன்னொரு கொடை கார்ட்டூனிஸ்ட் மதனை ஆசிரியராக அறிமுகப்படுத்தியது. மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் மூலம் நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

எஸ்.எஸ்.வாசன் போலவே ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியனுக்கும் திரைப்படப் பின்னணி உண்டு. எஸ்.எஸ்.பாலன் என்கிற பெயரில் அவர் இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த "சிரித்து வாழ வேண்டும்' திரைப்படமும், பிரம்மாண்டமாக மூன்று மொழிகளில் தயாரித்து இயக்கிய "எல்லோரும் நல்லவரே' திரைப்படமும் அவரது திரையுலகப் பங்களிப்புக்கு கட்டியம் கூறும்.

விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளரும், எஸ்.பாலசுப்பிரமணியனின் நேர்முக உதவியாளராக இருந்தவருமான ஜே.வி.நாதன், அவருடனான தனது அனுபவங்களை "சேவற்கொடியோன்' என்கிற பெயரில் நூலாக்கம் செய்திருக்கிறார். எஸ்.பாலசுப்பிரமணியன் குறித்த வித்தியாசமான, சுவாரஸ்யமான பதிவு.

'சிறுகதை மன்னன்' புதுமைப்பித்தன் என்று சொன்னால் எல்லோருக்கும் "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' கதைதான் நினைவுக்கு வரும். ஆனால் புதுமைப் பித்தனுக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளின் பட்டியலில் அந்தக் கதை இல்லை என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

பதிப்புத் துறை முன்னோடிகளில் ஒருவர் முல்லை முத்தையா. அவர் செய்திருக்கும் சாதனைகள் குறித்துப் புத்தகமே எழுதலாம். ராஜாஜி, பாரதிதாசன், அண்ணா உள்ளிட்ட பெரும் ஆளுமைகளின் படைப்புகளைக் கேட்டு வாங்கி அச்சு வாகனம் ஏற்றிய பெருமைக்குரியவர் அவர்.

புதுமைப்பித்தனின் கதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்கிற ஆவல் முல்லை முத்தையாவுக்கு ஏற்பட்டது. அதுகுறித்து புதுமைப் பித்தனின் இணைபிரியா நண்பராக இருந்த தொ.மு.சி. ரகுநாதன் பதிவு செய்திருக்கிறார்.

1947-இல் புதுமைப்பித்தன், முல்லைப் பதிப்பக அதிபர் முத்தையாவிடம் சில நூறு ரூபாய்களைக் கடனாகப் பெற்றிருந்தார். அதற்குப் பிரதிபலனாகப் புதுமைப்பித்தன் சிறந்தது எனக் கருதும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட அனுமதி தரும்படி முல்லை முத்தையா வேண்டுகோள் விடுத்தார். அப்போது முத்தையா வெளிக்கொணர்ந்த 'முல்லை' இதழில் ஆசிரியராக இருந்தவர் தொ.மு.சி.ரகுநாதன்.

புதுமைப்பித்தன் தனது சிறந்த கதைகள் என்று தேர்ந்தெடுத்து தொகுப்பாக வெளிக்கொணர முல்லை முத்தையாவிடம் வழங்கிய ஏழு கதைகளில் "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' இல்லை.

"விபரீத ஆசை' என்கிற தலைப்பில் முல்லைப் பதிப்பகத்தால் வெளிக்கொணரப்பட்டது புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு. "விபரீத ஆசை', "சிவ சிதம்பர சேவுகம்', "புரட்சி மனப்பான்மை', "படபடப்பு', "அன்று இரவு', "நிசமும் நினைப்பும்', "எப்போதும் முடிவிலே இன்பம்' ஆகியவைதான் அந்த ஏழு சிறுகதைகள்.

1952-இல் வெளிவந்த புதுமைப்பித்தனின் "விபரீத ஆசை' சிறுகதைத் தொகுப்பு 2022-இல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிக்கொணரப் பட்டிருக்கிறது.

மருத்துவர் கோ.தென்றலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு "சிதறிக் கிடக்கும் மீசைத் துண்டுகள்'. அதில் இடம் பெற்றிருக்கும் இந்த மூன்றுவரிக் குறுங்கவிதை, பக்கம் பக்கமாக எழுதப்படும் சமுதாய அவலத்தை பசுமரத்தில் ஆணி அடிப்பதைப்போலப் பதிவு செய்கிறது.

ஒலியில்கூட

ஏற்றத்தாழ்வு

குறில் நெடில்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com