அகப்பொருள் மாட்சி!

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு. அதுவே அகத்திணை. இத்திணைக் கல்வி, பருவம் வந்துற்ற நம்பி நங்கையர்க்கெல்லாம் வேண்டும். அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் தாம் கொண்ட மணத்தை மதிப்பர்; பிறந்த பிறப்பை மதிப்பர்.

ஆண், பெண் எனும் பால் பிரிவுள்ள உயர்திணை அஃறிணை உயிர்களுக்கெல்லாம் உயிர் இயற்கை காதல் என்பார் வாழ்விலக்கணம் கண்ட தொல்காப்பியர்.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்

(தொல் - 1168)

செம்மொழித் தமிழ் இலக்கணத்தின்

ஆணி வேர் எது?

எந்த நிலம் சார்ந்து வாழ்ந்தாலும் மனிதர்கள்தம் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் வகுத்து வாழ்ந்தனர். காதல் வாழ்வு இது, இத்தகையது என வெளிப்படுத்திக் கூற இயலாது. அதனால், அது அகம் எனப்பட்டது. உலகத்து உயிர்களையெல்லாம் ஆட்டிப் படைப்பது

பாலியல்சார் காமமே, என்பார். ஹேவ்லாக் எல்லீஸ் என்ற காம உளவியல் பேராசிரியர்.

இன்பத்தை ஓர் ஆண் தனித்துத் துய்த்துவிட முடியாது. அது எப்போது முடியும்? அது அந்த ஆணின் நெஞ்சம் விழையும் ஒப்பற்ற தலைவியாலேயே முடியும்.

இதை உணர்ந்த திருவள்ளுவர்,

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள. (குறள் 1101)

என்றார்.

தலைவனின் கண், காது, மூக்கு, நாக்கு, உடம்பு என்னும் ஐம்புலன்களுக்கும் ஒருசேர இன்பம் தருபவள் பெண்ணே எனத் தேற்றே காரம் தந்து தெளிந்த முடிவாகவே உணர்த்தினார் திருவள்ளுவர். இந்த நுட்ப உணர்வு காமம்,

காதல் வயப்பட்டோர்க்கே நன்குப் புலனாகும். எனவே, தலைவியே, பெண்ணே இன்பத்தின் ஆணிவேர் என்பது தெளிவினும் தெளிவே.

தொல்காப்பியம் வகுத்துக் காட்டும் தலைவியின் மாண்புகள் : அகப்பொருளின் மெய்ப்பொருளான தலைவியைக் கிழவோள் எனவும் கிழத்தி எனவும் வழங்குவார் தொல்காப்பியனார். களவுக் காலத்திலும் கற்புக் காலத்திலும் இல்லறம் ஏற்கும் தலைவிக்கே முதன்மை.

நல்ல குடிப்பிறப்பு, அதற்கேற்ற நல்லொழுக்கம், ஆள்வினை உடைமை, பருவம், வடிவம், அழகு இவற்றால் நிகழும் அன்பு என்னும் ஈர்ப்பு, உள்ளத்தை ஒருமுகப்படுத்துதல், அருள் உள்ளம் கொண்டவளாய் இருத்தல் முதலிய பத்துக் குணங்களையும்கொண்டு தலைவி தலைவனோடு ஒத்து வாழ்வாள்.

தலைவி எளிதில் தன்னைத் தொட்டுப் பார்க்க ஒருப்படாள்; தலைவியாம் கன்னி மகளுக்கு இயற்கை வழங்கிய காப்பரண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பனவே. முதல் மூன்றும் எல்லாரும் அறிந்தனவே. பயிர்ப்பு என்பது பிற ஆடவன் தொட வரும்போது கன்னி மகளுக்கு உண்டாகும் சிலிர்ப்பு, அருவெறுப்பு

பின்எப்படித்தான் தலைவன் தலைவியரிடையே காதல் துளிர்க்கும்? பாலது ஆணையால் (பால் - காமம்) ஈர்ப்பால் நிகழும் என்பார் தொல்காப்பியர்.

மகளிர் பண்பால் இயைந்த மாண்புகள்:

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியல் பொறையும் நிறைவும் வல்லிதின்

விருந்து புறம் தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

என்பது தொல்காப்பியர் வரைவிலக்கணம்

(தொல் - 1078)

கற்பு என்னும் மனத்திண்மை, தலைவன்மீது கொண்ட காதல், நல்லொழுக்கம், பொறுமை, நற்பண்புகளின் திரட்சி, விருந்தினரைப் போற்றிக் காக்கும் கனிவு, சுற்றத்தார் சூழ வாழும் குடியோம்பல் ஆகியனவே குடும்பத் தலைவியின் பண்பு நலன்களாக தொல்காப்பியர் கூறுகிறார்.

பிறர் விரும்புமாறு அருள் பொதிந்த அன்புச்சொற்களைப் பேசுதலும் தலைவியின் பண்பாகும். தன் தலைவனுக்கு எதிரே தன்னைப் புகழ்வதை ஒருக்காலும், தலைவி ஏற்கமாட்டாள்.

அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி

பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே

(தொல் - 1107)

என்பதும் தொல்காப்பியம் தரும் தலைவியின் பண்புகளாம். இத்தகைய பண்புகளைப் பெற்ற தலைவியைப் பெறும் தலைவன் என்ன தவம் செய்திருக்க வேண்டும்!

குறுந்தொகை காட்டும் தலைவியர் தனிப் பண்புகள் : தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து, ஒரு பெண்ணிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தான். அவனைப் போலவா எண்ணுவாள் அவன் தலைவி?

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

(குறுந்தொகை -49)

'இப்பிறவியில்தான் தலைவனைத் தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை, அடுத்த பிறவியிலாவது அவனுடைய நெஞ்சம் கவரும் பெண்ணாய், அவனே என் கணவனாய் வாய்க்கட்டும்'” என்று பொறுமை காத்த தலைவியர் அன்று இருந்தனர்.

தலைவனைக் காணாது

ஏங்கும் தலைவியின் தவிப்பு

'உயர்ந்த மலையில் உள்ள பெரிய தேனடையைக் கண்ட, இருகால்களும் இல்லாத முடவன் தன்உள்ளங்கை குவித்துத் தேனடையைக் காட்டி நக்கி இன்புற்றதைப் போல, தலைவர் அருளவில்லை ஆனாலும், அவரைக் காணும்போதே என் நெஞ்சம் இனிக்கிறதே'' என்றாள் தலைவி.

நெடுவரைப்

பெருந்தேன் கண்ட இருங்கை முடவன்

உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து

சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்

நல்கார் நயவா ராயினும்

பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.

(குறுந்தொகை - 60)

எனப் பரணர் பாடி மகிழ்கிறார்.

தலைவியின் உறுதியும் தலைவனின் உள்ளமும்: 'கார்காலம் வந்தால் உடனே உன்னைக் காண ஓடோடி வருவேன்'' என்று சொல்லிவிட்டுப் பொருள் தேடச்சென்றான் தலைவன்.

கார்காலமும் வந்தது, அதன் அடையாளமாகக் கொன்றை மலர்க் காடும் பூத்தது. ஆனாலும், உன் தலைவர் வரவில்லையே என்ற தோழியை நோக்கித் தலைவி,

'கானம் கார் எனக் கூறினும் யானோ

தேறேன் அவர் பொய் வழங்கலரே''

என்று கூறுகிறாள். என்னதான் கொன்றை மலர்க்காடு கார் எனக் கூறினாலும் எனக்குத் தெரியாதா அவர் பொய் கூறார் என்று.

அடடா ! எவ்வளவு உறுதி தலைவிக்கு? எத்தகைய உள்ளம் தலைவனுக்கு? என்று விழியுயர்த்தி வியப்பெய்து கின்றோம். இன்று இத்தகைய தலைவனும் தலைவியும் உள்ளனரா என்றால் விடை விழி பிதுங்கிச் சாம்புகின்றது!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com