கம்பனின் தமிழமுதம் - 40: மனிதனும் விலங்காவான்; விலங்கும் தெய்வமாகும்!

எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் 'அவர் தெய்வப்பிறவி' என்றே சொல்கிறது.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் 'அவர் தெய்வப்பிறவி' என்றே சொல்கிறது. தனது உயர்ந்த குணங்களாலும், செயல்களாலும் பறவை இனத்தைச் சேர்ந்த ஜடாயு தெய்வமான காட்சி கம்பனில் உண்டு.

சீதையைக் காப்பாற்றும் நோக்குடன், இராவணனுடன் சண்டையிட்டு மரணமடைந்தது ஜடாயு. அதனை 'தெய்வ மரணம்' என்றே கம்பன் குறிக்கிறான். தனது கேவலமான குணங்களாலும் செயல்களாலும் மனிதன் விலங்காகவே மாறிவிடுவதும் உண்டு. ஒருவரின் சிந்தனையும் செயலுமே, அவர் தரத்தை நிர்ணயிக்கிறது. பொருத்தமான காட்சி ஒன்றில், கம்பன் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறான்.

சீதை இராவணனால் வலிந்து கொண்டு செல்லப்பட்ட பின்னர், இராமனும் இலக்குவனும் சபரியின் அறிவுரைப்படி சுக்கிரீவனைக் காண இரலைக் குன்றம் வந்து சேர்ந்தனர். அவர்களை முதலில் சந்தித்து, அறிமுகம் செய்துகொண்டு, சுக்கிரீவனிடம் அழைத்துச் சென்றவன் அனுமன்.

சுக்கிரீவனுக்கும் அவனது அண்ணன் வாலிக்கும் இடையேயான முரண் சிந்தனையை இராமனுக்கு விளக்கிச் சொல்லி, 'வாலியைக் கொன்றே ஆகவேண்டும்' என்னும் மனநிலைக்கு இராமனைக் கொண்டு வந்ததும் அனுமன்தான். வாலியின் இருப்பிடம் நோக்கி எல்லாரும் போனார்கள்.

இராமன் தனது திட்டத்தை விளக்கினான். 'சுக்கிரீவன், வாலியைப் போருக்கு அழைக்க வேண்டும்; வெளியே வரும் வாலி, சுக்கிரீவனுடன் மோதுவான்; அப்போது, மறைந்திருந்து அம்பு செலுத்தி வாலியைக் கொல்ல வேண்டும்' என்பதே திட்டம். இந்தத் திட்டத்தின்படி, சுக்கிரீவன் வாலியின் அரண்மனைக்கு வெளியே நின்று, அவனைப் போருக்கு அழைத்தான். கோபம் கொண்ட வாலி, மனைவி தாரையின் சொற்களை மீறி சண்டைக்கு வந்தான். சரியான நேரத்தில் அவன் மீது அம்பு எய்தான் இராமன். மார்பில் தைத்த அம்புடன் கீழே சாய்ந்தான் வாலி.

வாலிக்கு எதிரில் வந்து நின்றான் இராமன். வாலிக்கும் இராமனுக்கும் பெரும் சொற்போர் நடந்தது. 'நீ இவ்வளவு பெரிய தவறு செய்து, தீராத பழிக்கு ஆளாகிவிட்டாயே இராமா? நான் என்ன குற்றம் செய்தேன்?'' என்று கேட்டான் வாலி. 'தவறேதும் செய்யாத உன் தம்பி சுக்கிரீவனைக் கொல்லத் துணிந்தாய்.

அவனது மனைவியையும் கவர்ந்து கொண்டாய். பிறன் மனைவியைக் கவர்தல் மிகப் பெரிய தவறு'' என்று சுட்டிக்காட்டினான் இராமன். இந்தக் குற்றச்சாட்டுக்கு, மிகப் பொருத்தமான ஒரு பதிலைச் சொன்னான் வாலி. 'இராமா... மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கற்பு நிலை, குரங்குகளாகிய எங்களுக்கு இல்லை; உங்களுக்கு இருக்கும் கற்பு நெறியை, எங்கள் குலத்தில் நீ எதிர்பார்க்கக்கூடாது'' என்றான் வாலி.

மிக அருமையான, மனித குலத்துக்கு இன்றும் தேவையான ஒரு கருத்தை, இராமன் வாயிலாகக் கம்பன் இங்குபதிவு செய்தான். 'வாலி... நீ பிறப்பால் குரக்கினத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். ஆனால், நீ நன்கு கற்றவன். இறை நம்பிக்கை கொண்டவன். எந்த விதத்திலும் நீ சாதாரணமான குரங்கு வாழ்க்கை வாழவில்லை; எல்லா விதத்திலும் மேம்பட்ட வாழ்க்கை உன்னுடையது. ஆனால், இந்தத் தவறைச் செய்யும்போது மட்டும், 'நான்

குரங்குதானே' என்று நீ கூறிக்கொள்வதை ஏற்க முடியாது'' என்று சொன்ன

இராமன், தொடர்ந்து சொன்னதாகக் கம்பன் எழுதினான். 'இது சரி; இது தவறு என்று சிந்திக்காமல், மனதுக்குத் தோன்றியபடி வாழ்கின்ற மக்கள், விலங்குகள் ஆகிவிடுகிறார்கள். நெறி தவறாமல் வாழ்கின்ற விலங்குகளும், தேவர்களுக்குச் சமமாகிவிடுகின்றன'. ஆழமான இந்தக் கருத்தைப் பதிவு செய்யும் கம்பன் கவிதையைப் பார்க்கலாம்.

தக்க இன்ன, தகாதன இன்ன, என்று

ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள

மக்களும் விலங்கே; மனுவின் நெறி

புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே.

'உயர்ந்த சிந்தனைகள் இன்றி, தவறான செயல்களைச் செய்து வாழும் மனிதர்கள், விலங்கு வாழ்க்கையே வாழ்கிறார்கள். நெறி பிறழாமல் வாழ்வது ஒரு விலங்காக இருந்தாலும் அது தெய்வ நிலையை எய்துகிறது' என்பது கருத்து. உயர்ந்த வாழ்க்கை வாழும் மனிதர்கள், தெய்வமாக அனைவராலும் மதிக்கப்படுவார்கள் என்னும் சிந்தனையை இங்கு உறுதிப்படுத்துகிறான் கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com