இந்த வாரம் கலாரசிகன் - 13-04-2025

பாரதியாரின் எல்லா படைப்புகளையும் இப்போது நாம் படித்துப் பிரமிக்கிறோம்.
இந்த வாரம் கலாரசிகன் - 13-04-2025
Updated on
2 min read

பாரதியாரின் எல்லா படைப்புகளையும் இப்போது நாம் படித்துப் பிரமிக்கிறோம். அவை அனைத்தையும் தேடிப் பிடித்துத் திரட்டித் தொகுத்து நமக்கு அளித்த பாரதி அன்பர்களின் அளப்பரிய பணிகள், மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் வேர்கள்போல மறைந்து நிற்கின்றன.

மகாகவி பாரதியாரின் மனைவியார் செல்லம்மா பாரதி, சகோதரர் விசுவநாத ஐயர், பாரதியைத் தனது ஞான குருவாகவே நினைத்த பரலி சு.நெல்லையப்பர் உள்ளிட்டவர்கள் தொடங்கி வைத்த பாரதியாரின் படைப்புகளைத் தேடித் தொகுக்கும் பணியில், அவர்களுக்குப் பிறகு பலர் முனைந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சமீப காலத்தில் பெரியவர் சீனி. விசுவநாதனின் காலவரிசைப்படுத்தும் பணி மிகப் பெரிய பங்களிப்பு.

ரா.அ.பத்மநாபனின் பங்களிப்பும், அமுத நிலையம், சக்தி காரியாலயம் ஆகியவற்றின் பங்களிப்பும் சாதாரணமானவை அல்ல. பெரியவர் சீனி.விசுவநாதனின் பணியையொட்டி, இளசை மணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ய.மணிகண்டன் உள்ளிட்டவர்கள் இதுவரை வெளிவராத பல புதிய படைப்புகளைத் தேடிக் கண்டறிந்து தந்திருக்கிறார்கள். பாரதி படைப்புகளைத் தேடித் தந்த, தருகின்ற ஒவ்வொரு பாரதி ஆய்வாளருக்கும் நாம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

'இந்த வாரம்' ஆறு தொகுதிகளின் அறிமுக விழா கடந்த மாதம் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தாரால் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது, பெரியவர் 'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி என்னைத் தனியே அழைத்து, 'உங்களுக்கு ஒரு பொக்கிஷத்தைப் பரிசாக அளிக்கிறேன்'' என்று கூறி ஓர் உறையை என்னிடம் தந்தார்.

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்புப் படிக்கும் மாணவனாக இருந்த எனக்கு பாரதியார் மீதும், அவரது கவிதைகள் மீதும் பற்றை ஏற்படுத்திய எனது ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் குறித்து நான் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடி பரிதிமாற் கலைஞரின் மகள் வழிப் பெயரனான வி.ஜி.சீனிவாசன், 'சக்தி காரியாலயம்' அதிபர் வை.கோவிந்தனுக்கு 1957 செப்டம்பர் 23-ஆம் தேதி எழுதிய கடிதத்தின் ஒளியச்சுதான் என்னிடம் 'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி தந்த அந்தப் பொக்கிஷம்.

சக்தி காரியாலயம் வெளிக்கொணர இருக்கும் 'மகாகவி பாரதியார் கவிதைகள்' மூன்றாம் பதிப்பில் சேர்க்க வேண்டிய சில கவிதைகளைக் குறிப்பிட்டு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன், 'தியாகி' கிருஷ்ணசாமி பாரதி, தன் பங்குக்கு சேர்ப்பதற்காக சில கவிதைகளைக் குறிப்பிட்டு, அத்துடன் எங்கள் ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் குறித்த 'அபிமானத்தையும்' பதிவு செய்திருக்கிறார்.

'திரு. வி.ஜி.சீனிவாசன் பாரதியாரின் உண்மையான பக்தர்களில் ஒருவர். பித்தர் என்று சொன்னாலும் பிழையாகாது. பாரதியார் பாக்களை ஆழத் துருவிப் படித்துச் சுவைத்தவர். சிறந்த பேச்சாளர். உயர்ந்த எழுத்தாளர். ஆசிரியர். அவரோடு தாங்கள் தொடர்பு வைத்துக்கொள்வது இலக்கிய சேவைக்குப் பயன்படும். அடுத்த பதிப்பு வெளியிடும்போது அவர் உதவியை நன்றியறிதலோடு குறிப்பிட வேண்டியது தங்கள் கடமையாகும்'' என்கிற அந்த வரிகளைப் படித்ததும் நான் நெகிழ்ந்து விட்டேன்.

வி.ஜி.சீனிவாசனின் மாணவன் என்று நான் பெருமையோடும், பெருமிதத்தோடும் சொல்லிக் கொள்வதைவிடப் பெரிய தகுதி எனக்கு என்னவாக இருந்துவிட முடியும்?

எங்கள் கும்மிடிப்பூண்டி நிருபர் பா.ஜான் பிரான்ஸிஸ், சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது, எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகம், 'பெண் மருத்துவர்கள்-சொல்லப்படாத கதைகள்'. ஆங்கிலத்தில் கவிதா ராவ் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருப்பவர் த.சித்தார்த்தன்.

பாலின சமத்துவம் என்பது இன்னும்கூட சாத்தியமாகவில்லை என்கிற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்போதே அப்படி என்றால், 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்...

சமூக, ஜாதிய கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, துணிந்து மருத்துவராக முற்பட்ட பெண் என்று பார்த்தால் அது ஆனந்திபாய் ஜோஷியாகத்தான் இருக்கும். 1883-ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வி படிப்பதற்காக அமெரிக்கா பயணிக்க முற்பட்டார் அவர். எம்.டி. படிப்பை முடித்த ஆனந்திபாய் மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கும் முன்பே இறந்துவிட்டார் என்பது துரதிருஷ்டவசமானது.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்று 1912-ஆம் ஆண்டிலிருந்து மருத்துவராகப் பணிபுரிந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியைக் குறிப்பிடலாம். ஆனால் அவருக்கு முன்பே காதம்பரி கங்குலி, ருக்மாபாய் ராவத், ஹைமாவதி சென் ஆகியோர் மருத்துவர்களாகி இருந்தனர்.

மருத்துவராக மட்டும் முத்துலெட்சுமி ரெட்டி நினைவுகூரப்படுவதில்லை. தீவிர சமூக சீர்திருத்தவாதியான அவர்தான் தேவதாசி முறையை ஒழித்தவர் என்பதாலும், அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக முக்கியக் காரணம் என்பதாலும் போற்றப்படுகிறார்.

முத்துலெட்சுமி ரெட்டிக்குப் பிறகு, மருத்துவராகப் பிரபலமானவர் கேரளத்தின் மேரி யூனெஸ் லூகோஸ். மேரி லூகோஸ்தான் இந்தியாவின் முதலாவது தலைமை அறுவைச் சிகிச்சை மருத்துவர். அவர் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் மருத்துவராகவும் இருந்தார்.

கவிதாராவ் இந்தியாவின் மருத்துவத் துறை முன்னோடிகளான பெண் மருத்துவர்கள் ஏழு பேர் குறித்த பதிவை முன்வைப்பதன் மூலம் எழுப்பும் கேள்வி ஒன்று இருக்கிறது- ஏன் அந்தப் பெண் மருத்துவர்கள் நாடு தழுவிய அளவில் அறியப்படவில்லை, கொண்டாடப்படவில்லை?

இஸ்லாம் ஓர் இறுக்கமான சமயம். அந்த சமயம் குறித்தோ, சமய சம்பிரதாயங்கள் குறித்தோ, செயல்பாடுகள் குறித்தோ, சிறு விமர்சனங்களைக் கூட அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் சகித்துக் கொள்வதில்லை என்பது இஸ்லாமியர்கள் குறித்த விமர்சனம். அப்படி இருக்கும்போது, இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் இஸ்லாமிய சிறுமி ஒருத்தியின் ஆழ்மன விருப்பத்தை, உளவியல் ரீதியாக உணர்ந்து பதிவு செய்திருக்கும் கவிதை இது. அந்தக் கவிஞர் வேறு யாரும் அல்ல, எச். ஜி. ரசூல். அந்தக் கவிதை இதுதான் -

பொட்டு வச்சு பாக்க

எனக்கும் ஆசை

உம்மா திட்டுவாளோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com