பாரதியின் புதிய சிந்தனை!

பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாக்கிப் பாடியவர் எவரும் இலர்.
பாரதியின் புதிய சிந்தனை!
Published on
Updated on
2 min read

பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாக்கிப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, "கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான். "சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா' என்னும் கீர்த்தனை தொடங்கி "கண்ணம்மா என் காதலி' என்னும் தலைப்பில் பாரதி பாடிய கீர்த்தனைகள் ஆறு.

இறைவன் ஒருவனே ஆடவன்; அதாவது புருஷோத்தமன்; உயிர்கள் (ஜீவாத்மாக்கள்) யாவும் அவனுக்கு நாயகி நிலையில் உள்ளவையே என்னும் சமயக் கருத்தை மாற்றி விடுகிறான் பாரதி. ஆழ்வார்கள் யாரும் இப்படி மாற்றிப் பாடவில்லை.

எனவே, பாரதி பாட்டில் இஃதொரு "புதுமை' எனக் கருதுகிறோம். ஆழ்வார்கள் இறைவனை நாயகி நிலையில் வைத்துப் பாடவில்லை என்றாலும், அவனைத் தாய், தந்தை முதலான எல்லா உறவு நிலைகளுக்கும் உரியவனாக்கியிருக்கின்றனர்.

திருவாய்மொழிப் பாசுரம் ஒன்று பின்வருமாறு பேசுகிறது.

சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும்

நன்மக்களும்

மேலாத் தாய்தந்தையும் அவரே

இனி ஆவாரே

இதில் பிள்ளைகள், பெற்றோர் ஆகிய உறவுகளுக்கும் முன்னதாகச் "சேலேய் கண்ணியர்' என்பதனால், "கயல்போலும் கண்ணழகால் மயக்கும் காதலியையே' குறிக்கிறார் ஆழ்வார்.

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ

மற்றையா ராவாரும் நீ

என்பது பெரிய திருவந்தாதியில் இடம் பெறும் பிறிதொரு பாசுரமாகும். இதைப் பாடியவரும் நம்மாழ்வாரே. "எல்லா உறவுமாக இறைவன் இருக்கிறான்' என்பதை இப்பாட்டிலும் உறுதி செய்கிறார் அவர். எனவே இறைவனைத் தலைவி நிலையில் வைத்துப் பாடுவதற்கும், ஆழ்வார் பாசுரங்களில் இடமிருக்கிறது என்று அறியலாம்.

பாரதி தன்னுடைய நுட்பமான நோக்கினால் இதனைப் புரிந்து கொண்டு, "கண்ணம்மா என் காதலி' என்று பாடியிருக்கலாம்; அல்லது அவருக்கே உரிய புதுமை வேட்கை இதற்குக் காரணமாகலாம்.

"கண்ணம்மா என் காதலி' பாடலில் சற்றும் எதிர்பாராதவகையில் பெண்ணுரிமைச் சிந்தனைக்கு இடமளிக்கிறான். பெண்ணே! நாணிக்கண் புதைப்பதில் பொருள் இல்லை; இதற்கு முன் எத்தனையோ பிறவிகளில் ஒன்றாகப்பிறந்து, சேர்ந்து வாழ்ந்தவர்கள் நாம்; இனிவரும் பிறப்புகளிலும் நமக்குப் பிரிவில்லை என்று கூறி முகத்திரையை விலக்குகிறான் காதலன். அப்போது தலைவனின் கூற்றாகப் பாரதி பாடுவன மனம் கொள்ளத்தக்கவை.

நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! இது

நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்;

போற்றும் இராமனென முன்புதித்தனை; அங்குப்

பொன் மிதிலைக் கரசன் பூமடந்தை நான்

"சென்ற பிறப்பில் அவள் இராமனாம்; இப்போதைய காதலன், முற்பிறப்பில் சீதையாம். ஒவ்வொரு பிறப்பிலும் பெண்- பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் பிறக்க வேண்டும்' என்பது கட்டாயம் இல்லையே. எனவே, இந்த நினைப்பைப் புரட்டிப் போட்டு விடுகிறான் பாரதி. தமிழுக்கு இது புதிய சிந்தனை.

பழைய சங்கப் பாடல் ஒன்றில், எதிர்வரும் பிறப்பில் நீயே எனக்குக் கணவனாக - நான் உன் மனைவியாக வேண்டும் என்று தான் தலைவி ஒருத்தி பேசுகிறாள்.

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியர்எம் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே

(குறுந். 49:3-5)

என்பன பாடலடிகள்.

இப்படி மாற்றியதோடு மட்டும் பாரதி நிற்கவில்லை. காதலர்களாக அன்றி நண்பர்களாகவும் பிறக்கலாமல்லவா?

ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல்

கொண்டோன்- கண்ணன்

உருவம் நினக்கமையப் பார்த்தன்

அங்கு நான்

என்று அடுத்து ஒரு பிறப்பில் தானும் காதலி கண்ணம்மாவும் - பார்த்தனும் கார் படைத்த நிறத்துக் கண்ணனுமாகச் சீர்படைத்த கேண்மையுடன் இருந்ததைப் பேசுகிறான். இன்னும் ஒரு படி மேலே சென்று,

முன்னை மிகப் பழமை இரணியனாம் எந்தை

மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ

என்று முன்னைப் பழம்பிறப்பு நிலையை வேறு வகையிலும் விளக்குகிறான். காதல் நட்பு பகைமை பாராட்டியவனின் மூர்க்கம் தவிர்க்கும் சீற்றம் போன்ற எல்லாவற்றையும் இறைவனிடமே காணும் உயர்ந்த நிலைக்கு கொடுமுடிக்குப் போய் நிற்கிறது கவிதை.

மாலார் அவரே (அதாவது திருமால்) எனக்கு எல்லாம் இனி ஆவாரே என்ற நம்மாழ்வாரின் ஞானம் கனிந்த சீரிய நிலைக்குப் பாரதி திரும்பிவிடுவதைக் காட்டும் மிகச்சிறந்த பக்திக் கவிதை இது. மேலும் பாரதியின் புதுமைக்கோர் புதுமை என நிற்கும் கவிதையாகவும் இதைக் கருதலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com