வானம் ஊன்றிய மதலை

உலக வரலாற்றில் முதன் முதலில் கலங்கரை விளக்கத்தை ஹென்றி வின்ஸ்டான்லி என்னும் இங்கிலாந்துக்காரர் கண்டுபிடித்ததாக அறிய முடிகிறது.
கலங்கரை விளக்கம் - கோப்புப் படம்
கலங்கரை விளக்கம் - கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

உலக வரலாற்றில் முதன் முதலில் கலங்கரை விளக்கத்தை ஹென்றி வின்ஸ்டான்லி என்னும் இங்கிலாந்துக்காரர் கண்டுபிடித்ததாக அறிய முடிகிறது. அவர், 1696 - இல் தொடங்கி 1698 வரை ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் நிறைவாகக் கலங்கரை விளக்கத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்துள்ளார்.

பெருங்கப்பல் வணிகரான இவரிடம் ஐந்து கப்பல்கள் இருந்துள்ளன. அவற்றில் இரண்டு கப்பல்கள் இங்கிலாந்து கடலில் உள்ள எட்டி ஸ்டோன் என்னும் பதினைந்து கிலோ மீட்டர் நீளம் உள்ள கடல் பாறையில் மோதி அழிந்துவிட்டன.

தனது இரண்டு கப்பல்கள் பாறையில் மோதி அழிந்ததைக் கண்ட ஹென்றி வின்ஸ்டான்லி அங்கே பாறை இருப்பதைக் கப்பலுக்குத் தெரிவிக்க விரும்பினார். அதற்காக அவர் ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்க விரும்பி, அவர் அதனை எட்டி ஸ்டோன் பாறை மீதே உருவாக்கினார். கல்லாலும் மரத்தாலும் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் கண்ணாடிகளைப் பொருத்தி அதில் மெழுகுத் திரிகளை எரிய வைத்தார். இந்தக் கலங்கரை விளக்கம்தான் முதல் கலங்கரை விளக்கம்.

சங்க காலக் கலங்கரை விளக்கம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததை நமது இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவு நீர் அழுவத்து ஓடு கலம்

கரையும் துறை

(பெரும்பாணாற்றுப் படை : 346-351)

என்று கலங்கரை விளக்கத்தைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.

அவ்வாறு அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் போய், தீப்பந்தம் வைப்பதற்கு ஏறிச் செல்வதற்கு வசதியாகப் பெரிய ஏணியும் சாற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்று பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கிறது.

கலம் என்றால் கப்பல் என்று பொருள். கரை என்றால் அழை என்று பொருள். விளக்கம் என்றால் விளக்கு என்று பொருள். கடலில் செல்லும் கப்பலுக்குக் கரை இருப்பதை உணர்த்திக் கரைக்கு அழைக்கும் விளக்கு என்பது கலங்கரை விளக்கத்தின் பொருள். இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானளாவ உயர்ந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்ததைச் சிலப்பதிகாரமும் நமக்குத் தெரிவிக்கிறது.

கடற்கரையில் பலவகையான விளக்குகள் இரவில் பொருத்தப்பட்டிருந்தன என்பதை இளங்கோ குறிப்பிட்டுள்ளார். மீன் விற்போர், மோதகம் முதலானவற்றை விற்போர் தாங்கள் விற்கும் பொருள் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக விளக்குகளைப் பொருத்தி வைத்திருந்தனர். கடற்கரையில் நிற்கும் கட்டுமரங்களின் அடையாளமாக அங்கேயும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அதைப் போல் கடலில் கப்பல்கள் வழி மாறிச் செல்லாமல் இருப்பதற்காகக் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது எனச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இதனை இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும் (6: 141) என்னும் அடி உணர்த்துகிறது.

கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்தின் ஒளியானது, கடலில் பரவியிருந்தது எனத் தெரிவித்துள்ள காரணத்தால் அந்தக் கலங்கரை விளக்கமானது உயரமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

சோழர் காலக் கலங்கரை விளக்கம்

பிற்காலச் சோழர்கள் காலத்தில் - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள கோடியக்கரையில் கலங்கரை விளக்கம் இருந்துள்ளது.

இந்தக் கலங்கரை விளக்கம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்ட உயர்ந்த கலங்கரை விளக்கம். இந்தக் கலங்கரை விளக்கம் 2004 -ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையின்போது அழிந்துவிட்டது. அதன் எச்சத்தைத் தற்போதும் காணமுடிகிறது.

தற்காலக் கலங்கரை விளக்கம்

இந்தியாவில் உள்ள தற்காலக் கலங்கரை விளக்கங்களில் மிகவும் பழைமையானது சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம். இது முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது ஆகும். மாமல்லபுரத்தில் பாறைக்கு மேல் கம்பீரமாக நிற்கும் இந்தக் கலங்கரை விளக்கம் 1887 - ஆம் ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போதும் இந்தக் கலங்கரை விளக்கத்தைப் பார்க்கலாம். இது தவிர கன்னியாகுமரி, சென்னை முதலான இடங்களில் அமைந்துள்ள கலங்கரை விளக்கங்கள் இருபதாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை ஆகும். சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு பழைய கலங்கரை விளக்கம் இருந்ததாக அறியமுடிகிறது.

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், அந்தமான் முதலான பல பகுதிகளில் பல கலங்கரை விளங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான் உலக அளவில் முதல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக நாடுகளுடன் கப்பல் மூலம் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாம் கலங்கரை விளக்கம் அமைத்து வரலாறு படைத்துள்ளோம் என்னும் உண்மையை உலக வரலாற்றில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com