சென்னை டாக்டர். எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று உயர்ந்து நிற்கும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் இப்போதைய கட்டடம் உருவானதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் நாளமில்லா சுரப்பிகள் (என்டோக்ரைன் சர்ஜரி) அறுவைச் சிகிச்சைத் தலைமை மருத்துவராக இருந்து பணிஓய்வு பெற்ற மருத்துவர் எம்.சந்திரசேகரன் என்பது பலருக்கும் தெரியாது. அவர் எழுதியிருக்கும், "நினைவில் நின்ற நிகழ்வுகள்' என்கிற புத்தகம் இப்போது வெளிவந்திருக்கிறது.
மருத்துவர் எம்.சந்திரசேகரனைப் பற்றி சிறு குறிப்பை முதலில் பதிவு செய்துவிடுகிறேன். காலங்கள் பல கடந்தும் நினைவுகூரப்படும் விரல்விட்டு எண்ணக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான அவரது தந்தை நீதிபதி எஸ்.மகாராஜன், "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரின் "வட்டத்தொட்டி' இலக்கியக் குழுவில் முக்கியமான உறுப்பினர். கம்பனில் தோய்ந்த ஜஸ்டிஸ் மகாராஜன், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையின் தலைமைப் பொறுப்பேற்று சட்டத் தமிழுக்கு உரம் சேர்த்தவர்.
நாளமில்லா சுரப்பிகளுக்கான அறுவைச் சிகிச்சைப் பிரிவு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உருவானதற்கு, மருத்துவர் எம்.சந்திரசேகரன்தான் முழுமுதல் காரணம். அவருக்கு உதவிக்கரம் நீட்டியவர் அப்போது நிதித் துறை செயலராக இருந்த ஏ.எம்.சுவாமிநாதன். அது எப்படி சாத்தியமானது என்பதை விவரிக்கும் "நினைவில் நின்ற நிகழ்வுகள்' பகுதி மிகவும் சுவாரஸ்யமானது.
அதேபோல, ஒருநாள் பழைய சென்னை பொது மருத்துவமனைக் கட்டடத்தில் உள்ள ஒரு வார்டின் தரை இடிந்து 20 ஆகஸ்ட் 2000 அன்று முதல் தளத்தில் விழுந்த நிகழ்வு திடுக்கிட வைக்கிறது. பழைய கட்டடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டடம் எழுந்தது. புதிய கட்டடத்தை வடிவமைப்பதற்கான குழுவில் இடம்பெற்ற ஒரே மருத்துவர் எம்.சந்திரசேகரன்தான் என்கிற தகவலை மட்டுமல்ல, அந்தக் கட்டடம் உயர்ந்ததற்கு அவரது பங்களிப்பு என்னென்ன என்பதையும் விவரிக்கிறது புத்தகம். 150 வருடம் பழைமையான கட்டடம் இடிக்கப்பட்டு இப்போதைய அதிநவீன மருத்துவமனை அங்கே உயர்ந்து நிற்கிறது.
மருத்துவர் சந்திரசேகரன் எனக்கு மருந்துச்சீட்டு எழுதித் தரும்போதெல்லாம் பொறாமையாக இருக்கும். பொதுவாக, மருத்துவர்களின் கையெழுத்தை பிரம்மாவே நேரில் வந்தாலும் படிக்க முடியாது. மருத்துவருக்கும் மருந்துக் கடைக்காரர்களுக்கும் மட்டும்தான் அது புரியும் என்பார்கள். அதற்கு நேர்மாறாக அவரது கையெழுத்து மணிமணியாக, முத்து முத்தாக இருக்கும்.
அவரது அழகான கையெழுத்தின் ரகசியம் என்ன என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் நான் தெரிந்து கொண்டேன். 35 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் நண்பர்களானபோதே அவர் தெரிவித்திருந்தால், "இது என்ன சுருக்கெழுத்தா?' என்று எல்லோராலும் எனது கையெழுத்து கேலி செய்யப்படுவதில் இருந்து தப்பி இருப்பேன்.
ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, ஒரு சில நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறார் மருத்துவர் எம்.சந்திரசேகரன். "நினைவில் நின்ற நிகழ்வுகள்' இத்துடன் முடிந்துவிடக் கூடாது. அடுத்த தொகுதி விரைவில் வெளிவர வேண்டும்.
நல்ல படைப்புகளை வெளிக்கொணர்வது என்பதுதான் நல்ல பதிப்பகத்தின் அடிப்படை இலக்காக இருக்க முடியும். படைப்புக்கும் படைப்பாளிக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதற்கு எள்ளளவும் குறையாத முக்கியத்துவம் பதிப்பகத்துக்கும் உண்டு. அதை நிரூபித்திருக்கிறது "விழிகள்' பதிப்பகம்.
28.08.2023 "இந்த வாரம்' பகுதியில், பணிஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு இப்ராஹிம் கலிஃபுல்லாவைச் சந்திக்கச் சென்றதையும், அவர் எனக்கு அன்பளிப்பாக ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் பரிசளித்தது குறித்தும் எழுதியிருந்தேன். 1940-இல் வெளியான ஆங்கிலப் புத்தகம் ஒன்றை மறுபதிப்புச் செய்து, தனது தந்தையும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமான மாண்புமிகு ஃபக்கிர் முகமது நினைவாக வெளியிட்டிருந்தார் அவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சர்.லயோனல் லீச் அணிந்துரையுடன் 1940-இல் வெளியானது, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய அந்தப் புத்தகம். அவர் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு அது. வழக்குரைஞர்களுக்குத் தேவையான எல்லா விவரங்களையும் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கும், புதிதாக வழக்குரைஞர் தொழிலை மேற்கொள்பவர்களுக்கும் எடுத்துரைக்கும் வழிகாட்டி அந்த நூல்.
வழக்குரைத்தல் மற்றும் தொழில்சார் நடத்தை குறித்த எல்லா விஷயங்களையும் கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் பேசியுள்ளார். சட்டத் தொழில் மற்றும் அதன் பொறுப்புகள் குறித்துத் துவங்கும் அவர், வழக்குரைஞர்களின் பயிற்சிக்களம், வாடிக்கையாளர்களைச் சந்தித்தல், வழக்கைத் தயாரித்தல், முறையீடு தயாரித்தல், சாட்சிகளை விவரித்தல், நீதிமன்றத்தின் நடத்தை, தொழில்சார் நடத்தை, நீதிமன்றத்துக்கான கடமை, தொழில்சார் கடமை என்பவை மட்டுமல்லாமல் வழக்குரைஞர்களின் உரிமைகள் குறித்தும், சட்டத் துறையின் எதிர்காலப் பிரச்னைகள் குறித்தும்கூட 85 ஆண்டுகளுக்கு முன்னால் விளக்கி இருக்கிறார்.
நான் எழுதி இருந்ததைப் படித்த அடுத்த வாரமே என்னைத் தொடர்புகொண்டு, அந்தப் புத்தகம் குறித்த விவரங்களைக் கேட்டு வாங்கினார் "விழிகள்' வேணுகோபால். சட்டத் துறை, காவல் துறை தொடர்பான பல புத்தகங்களை மொழியாக்கம் செய்த அனுபவம் உள்ள மு.குமரேசன் மூலம் கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய புத்தகத்தைத் தமிழாக்கம் செய்து "தொழில்சார் நடத்தையும் வழக்குரைத்தலும்' என்கிற தலைப்பில் வெளிக்கொணர்ந்து விட்டது "விழிகள்' பதிப்பகம்.
அந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள இயலாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.
ஞானக்கூத்தன் நினைவாகப் போட்டி நடத்தி, அதற்காக வந்த 90 கவிதைகளில் 62 கவிதைகளை, "ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள்' என்கிற தலைப்பில் தொகுத்திருக்கிறார் அழகியசிங்கர். அதில் செந்தமிழ்பாரதி எழுதிய "தெரிந்தால் கூறுங்கள்' கவிதையில் இடம் பெறுகின்றன இந்த வரிகள்-
உலக வரைபடமே தெரியாமல்
பயணிக்கும் பறவைகள்
யாரை நம்பி சிறகை விரிக்கின்றன...
தெரிந்தால் கூறுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 08-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 01-03-2026
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


