கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

வள்ளுவன், பொதுவாக சொற்களில் தேன் குழைத்து தருவான். ஆனால், கடுமையான கருத்துகளைச் சொல்லும்போது, அவனிடம் மென்மையை எதிர்பார்க்க முடியாது.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

வழக்குரைஞர் த. இராமலிங்கம்

வள்ளுவன், பொதுவாக சொற்களில் தேன் குழைத்து தருவான். ஆனால், கடுமையான கருத்துகளைச் சொல்லும்போது, அவனிடம் மென்மையை எதிர்பார்க்க முடியாது. மிரட்டும் குரல் அல்லது எச்சரிக்கும் குரல்கூட குறள்வழி வரும். எந்தச் சூழலிலும் நிலை தாழ்ந்து நாம் நடந்துவிடக்கூடாது என்று சொல்ல வரும்போது அவன் சொன்ன உவமை, அவ்வளவு கடுமையானது.

'தலையின் இழிந்த மயிர் அனையர்' என்பது அவன் சொன்ன உவமை. தலையில் இருக்கும்வரை, முடி அவ்வளவு சிறப்புடன் இருக்கும்; அதற்கான கவனிப்புகளும் அதிகமாக இருக்கும். தலையில் இருந்து இறங்கிவிட்டால், தலை முடிக்குக் கொடுக்கப்படும் மரியாதை எல்லோரும் அறிந்ததுதான். அதுவும் சாப்பிடும்போது, கையில் அது தட்டுப்பட்டால், வீடாக இருந்தால்கூட கோபச் சொற்கள் குறைவாக வந்து விழும். உணவு விடுதியாக இருந்துவிட்டால், பிரளயம்தான்.

கம்பனுக்குள் போவதற்குள், வள்ளுவனின் மற்றொரு குறளையும் பார்த்துவிடலாம். நீரில் கால் வைத்த கஜேந்திரன் என்னும் யானையின் காலை, முதலை ஒன்று கவ்விக்கொள்ள, அந்த பக்திமிக்க யானை இறைவனை அழைக்க, இறைவன் தனது சக்கராயுதத்தால் முதலையின் தலையைத் துண்டித்து, யானைக்கு மோட்சம் வழங்கிய கதை, மக்களுக்கு அறிமுகமான ஒன்று. அப்படி ஒரு காட்சியைச் சொல்லும் வள்ளுவன், 'நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற' என்றான்.

நீரில் இருக்கும் முதலையின் ஆற்றல் மிக அதிகம். நீரைவிட்டு வெளியேறி, தரைக்கு வந்தால், பலம் வாய்ந்தபிற மிருகங்கள் எளிதாக

முதலையைக் கொன்றுவிடும் என்பது பொருள். இந்த இரண்டு குறள்களையும் மனதுக்குள் வாங்கிக்கொண்டவனாக, கம்பன் ஒரு காட்சியை நமக்குக் காட்டுகிறான்.

சேது அணை கட்ட, வானரங்கள் சிறு கற்கள் முதல் பெரிய மலைகள்வரை, அனைத்தையும் கொண்டு வந்து கடலுக்குள் எறிய, அவற்றை எளிதாகக் கைகளில் வாங்கிய நளன், உரிய முறையில் அடுக்கி, பாலத்தைக் கட்டிக்கொண்டிருந்தான். வானரங்கள் எறிந்த மலைகளில், சிங்கங்களூம் புலிகளும் உலவிக் கொண்டிருந்தன. ஆண் யாளிகளும் அந்த மலையில் வாழ்ந்து வந்தன.

வானரங்கள் மலையை வேருடன் பறித்துத் தூக்கி எறிந்தபோது, அந்த மலையில் இருந்த சிங்கங்கள், புலிகள், ஆண் யாளிகள் உட்பட அனைத்தும் கடலில் வீழ்ந்தன. கடலில் தூக்கி வீசப்பட்டதால், மலையில் ஆற்றலுடன் திரிந்த இந்தக் கொடிய விலங்குகள், நீரில் தமது ஆற்றலை இழந்தன. மிகப் பெரிய கூர்மையான பற்களுடன், எதையும் கடித்து விழுங்கும் ஆற்றலுடன் கடலில் நீந்திக் கொண்டிருந்த சுறா மீன்களின் வாயில் இந்தக் கொடிய விலங்குகள் சிக்கின. சுறா மீன்களை எதிர்த்துப் போராட முடியாமல், இந்த விலங்குகள் இறந்தன. இப்படி ஒரு காட்சியை நமக்குக் காட்டிவிட்டு, நம்மிடம் கேள்வி கேட்பதுபோல, நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறான் கம்பன். பாடலைப் பார்க்கலாம்:

கூருடை எயிற்றுக் கோள் மாச் சுறவுஇனம் எறிந்து கொல்ல,

போருடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப் போத்தும்,

நீரிடைத் தோற்ற அன்றே? - தம் நிலை நீங்கிச் சென்றால்,

ஆரிடைத் தோலார் மேலோர், அறிவிடை நோக்கின் அம்மா?

மலையில் முழு ஆற்றலுடன் திரிந்த விலங்குகள், கடலில் சுறா மீன்களுக்கு உணவானதைச் சுட்டிக்காட்டி, 'இந்த நிகழ்வினை உனது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து பார்; உனக்கு ஓர் உண்மை விளங்கும்' என்னும் கம்பன், ஒரு கேள்வியாகவே அந்த உண்மையை விளக்குகிறான். 'ஆற்றலில் சிறந்தவர்களும், தங்களது நிலையை விட்டு மாறிவிட்டால், தம்மைவிட ஆற்றல் குறைந்தவர்களிடம் தோற்கத்தானே வேண்டும்...?'

கையில் இருக்கும் பணம் கரைந்து போய் நிலைமை மாறினாலும், எவருக்கும் தலை வணங்காமல் வாழ்ந்துவிடலாம். குணம் கெட்டு நிலை மாறினால், தலை குனியத்தான் வேண்டும் என்னும் செய்தியை நமக்குப் பாடமாகத் தருகிறான் கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com