
கம்பன் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகளை நடத்துபவர்களின் மறைவால், எனக்கு சற்று பதைபதைப்பு வந்துவிடும். அது போன்ற அமைப்புகளால்தான் இன்றும்கூட தமிழகத்தில் பரவலாக இலக்கிய ஆர்வம் நிலை பெறுகிறது.
'எந்தக் கொம்பனாலும் கம்பனை வீழ்த்திவிட முடியாது என்பது மட்டுமல்ல; அந்தப் பெயரை எதிர்மறையாகவோ, விமர்சனமாகவோ உச்சரித்தாலும் கூடக் கம்பன் அவர்களைக் காந்தமாக இழுத்துத் தன்னிடம் சரணடைய வைத்து விடுவான்.
அதேபோல, கம்பனைத் தொட்டவர்கள் அனைவருமே அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தைத் தொடுவார்கள் என்பதை நான் அனுபவபூர்வமாகப் பார்த்திருக்கிறேன்' - இது புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளராக இருந்து சில மாதங்களுக்கு முன்பு மறைந்த ரா. சம்பத்குமார் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன வார்த்தைகள்.
தமிழகத்திலேயே பத்து நாள்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி கம்பனுக்கு விழா எடுக்கும் ஒரே அமைப்பு, புதுக்கோட்டை கம்பன் கழகம்தான். இந்த ஆண்டு புதுக்கோட்டை கம்பன் கழகம் தனது பொன் விழாவைக் கொண்டாட இருக்கும் நேரத்தில், சம்பத்குமார் மறைந்து விட்டாரே என்று அங்கலாய்க்காதவர்களே இல்லை. புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் பத்து நாள் பொன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்ற செய்தியைக் கேட்டு நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நிகழ்ச்சிகளை நடத்த நிரந்தர வைப்பு நிதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் சட்டக் கல்லூரி நடத்தும் தொழிலதிபர் க.ரெத்தினம். தலைவர் முத்துப்பட்டிணம் 'திருப்பணிச் செம்மல்' ச.ராமச் சந்திரனின் வழிகாட்டுதலில் பொன் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவர் இருக்கும்போதே, கம்பன் கழகப் பணிகளைத் தொய்வின்றி நடத்த பேச்சாளர் புதுகை ச. பாரதியைத் தயார் செய்து விட்டிருந்தார் சம்பத்குமார். பிறகென்ன?
எனக்குத் தெரிந்து கம்பன் கழகம் ஒன்றின் செயலாளராக உயர்ந்திருக்கும் ஒரே பெண்மணி புதுகை பாரதியாகத்தான் இருப்பார். தமிழகத்தில் உள்ள எல்லா இலக்கியச் சொற்பொழிவாளர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால், அத்தனை பேருமே அவருக்கு ஊக்கமும், ஆதரவும் கொடுப்பதற்காக புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் பொன்விழாவில் கலந்து கொண்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.
தமிழகத்தில் உள்ள ஏனைய பல கம்பன் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட 'கம்பன் புகழ்பாடி தமிழ் வளர்க்கும்' சான்றோரை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற வைத்தது அவரது தனித்த அணுகுமுறையின் வெளிப்பாடு.
எல்லாவற்றையும் விட என்னை வியப்பில் ஆழ்த்தியது என்ன தெரியுமா? திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கழகங்களை மட்டுமே அலசிக் கொண்டிருக்கும் ரங்கராஜ் பாண்டேயைக் கம்பன்கழக மேடையில் உரையாற்ற வைத்துவிட்டாரே, அதற்காகவே புதுகை பாரதிக்கு 'சபாஷ்' போடவேண்டும்.
இன்று மும்பை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற இருக்கும் வைகைச் செல்வனின் புத்தக வெளியீட்டுக்கு வெள்ளிக்கிழமை மும்பைக்கு கிளம்பியபோது விமானப் பயணத்தில் படிப்பதற்காக நான் எடுத்துச் சென்ற புத்தகம் வ.ரா. எழுதிய 'தமிழ்ப் பெரியார்கள்'.
வரதராஜ ஐயங்கார் ராமசாமி ஐயங்கார் எனும் 'வ.ரா.' மகாகவி பாரதியாரை நேரில் பார்த்து அவருடன் சிலகாலம் வாழ்ந்து அவரையே தனது மானசீக குருவாக ஏற்று எழுத்தாள
ரானவர். தமிழகத்துக்கு பாரதியை எடுத்துக்காட்டியவர்களில் வ.ரா. முக்கியமானவர். 'மணிக்கொடி காலம்' என்று இலக்கிய உலகம் சிலாகித்துக் கொண்டாடும் அந்தப் பத்திரிகையைத் தொடங்கியவர். இதழியலில் இவரது நெடும்பயணம் குறித்து தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்.
சுதந்திரன்(1920) சமரசபோதினி(1924), தமிழ் ஸ்வராஜ்யா(1925), ராய.
சொவின் 'ஊழியன்' என்று பயணித்து, 1933-இல் 'மணிக்கொடி' ஆரம்பித்து நடத்தினார். இலங்கை சென்று வீரகேசரி ஆசிரியராகவும் சிலகாலம் இருந்தார். 1935-இல் காந்தி பத்திரிகையில் வ.ரா. எழுதிய தொடர்தான் 'தமிழ்ப் பெரியார்கள்'. 1943-ஆம் ஆண்டு தனது தமிழ்ப்பண்ணை பதிப்பகம் மூலம் சின்ன அண்ணாமலை அதற்கு முதன்முதலில் நூல் வடிவம் கொடுத்தார்.
வ.ரா.வின் தமிழ்ப் பெரியார்கள் புத்தகத்தில் ராஜாஜியில் தொடங்கி, ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர்.
வரதராஜுலு நாயுடு, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், ஜார்ஜ் ஜோசப், எஸ். சத்திய மூர்த்தி, வ.உ.சி., எஸ்.எஸ். வாசன், கே.பி.சுந்தராம்பாள், என்.எஸ்.கிருஷ்ணன், நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை என்று 12 ஆளுமைகள் இடம் பெறுகிறார்கள். அவர்களில் எட்டு பேருடன் நெருங்கிப் பழகியவர் வ.ரா. எனும்போது, அந்தக் கட்டுரைகளின் சுவாரஸ்யம் குறித்துச் சொல்லவா வேண்டும்?
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த 12 அரிய ஆளுமைகள் குறித்த நேரடி அனுபவத்தை இந்த நூல் தருகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகில் எந்த வகையான மொழி பயன்படுத்தப்பட்டது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
ஓர் ஆவணமாக, கையேடாக இருக்கிறது இந்த நூல். நடைச்சித்திரம் என்கிற எழுத்துப் பாணிக்கு எடுத்துக்காட்டாகவும் இதைப் பார்க்கலாம்.
சென்னையில் வானூர்தியில் ஏறி அமர்ந்தபோது 'தமிழ்ப் பெரியார்கள்' புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கிய நான் படித்து முடிக்கும்போது, விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு ஒலித்தது. படித்ததை மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கிறது வ.ரா. எனும் பெரியாரின் நடைச்சித்திர எழுத்து நடை!
இந்த ஊர், அந்த ஊர், இந்த மாவட்டம், அந்த மாவட்டம், இந்த மாநிலம், அந்த மாநிலம் என்கிற பேச்சே இல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக நடைபெறும் பாலியல் சீண்டல்களும், வன்கொடுமைகளும் மனதை மிகவும் காயப்படுத்துகின்றன. அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ, எண்ம ஊடகமோ எதுவானாலும் சரி அன்றாடச் செய்தியாகி விட்டன பாலியல் வன்முறைகள்.
பேராசிரியர் அப்துல் காதரின் 'பூக்களாலும் பூகம்பம் நிகழலாம்' கவிதைத் தொகுப்பை மீள்வாசிப்புக்கு எடுத்துப் புரட்டியபோது சுருக்கென்று தைத்தது இந்தக் கவிதை.
காகிதப் பூக்களுக்குக்
கற்பழிப்பு பயமில்லை
பிளாஸ்டிக் மலர்களுக்குப்
பிரசவ வலியில்லை
அசல்களுக்கு மட்டுமே
ஆபத்து அதிகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.