
பேராசிரியர் சாரதாம்பாள்
சங்க இலக்கியம் ஒரு கருத்துக் களஞ்சியம், வாழ்வியல் விழுமியங்களின் பெட்டகம்; வரலாற்றுக் கருவூலம்; மரபுசார் அறிவியல் தொழில்நுட்பங்களின் அடித்தளம். இது மட்டுமன்று சங்க இலக்கியங்களில் இயற்கையின் பேராட்சியும் அதிகம்.
சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கையைப் பின்னணியாக்கி அதை வாழ்வியல் அனுபவங்களுடன் இணைத்துப் பதிவு செய்துள்ளனர். வாழ்வின் சமூக இயங்கியலை மாந்தர்களின் மன உணர்வுகளில் முட்டி நிற்கும் உணர்வு முடிச்சுகளை சங்க இலக்கியம் இயற்கை அசைவுகளுடன் இணைத்துப் பாடும்போது அது ஓர் அழகியலாகிவிடுகிறது.
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே
(புறம்.242)
என்று அரசனை இழந்து, சமூகமே தவிக்கும் தவிப்பைக் கையறுநிலை உணர்வாக முல்லை மலர் மீது ஏற்றிக் கூறி, கவிஞன் வருந்தி வார்த்தையையாடுகிறான்.
வீட்டில் வளர்க்கும் கோழி, புறா போன்ற பறவைகளின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது, அவை உயிரினங்களின் இயல்பு என்று இயற்கையாகப் பார்த்து மகிழ்வது ஓர் இயல்பு. ஆனால், அச்செயல்பாடுகளை, மானிட உணர்வுகளுடனும் சமுதாய உணர்வுகளும் இழையோடப் படைக்கும்போது அந்தப் படைப்பு மனத்தில் பேரழகை உணர வைக்கிறது.
"குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியனகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை' (அகம்.47)
என்ற பாடலில், மாலை நேரத்தில் நீண்ட நெடிய மாடத்தில் வாழும் ஆண் புறா, தன் துணையை விரும்பி அழைத்தலை, "வீழ்துணைப் பயிரும்' என்ற தொடர் குறிப்பிடுகிறது. (சங்க இலக்கியத்தில் பயிர்தல் என்ற சொல் பறவை விலங்கினங்களின் விருப்ப விழைவைக் குறிக்கும்) புறாவின் பயிர்தல் ஓசையின்வழி தனித்திருக்கும் தலைவியின் ஆழ்மன விருப்பம் இங்கு குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
புறா மட்டுமன்று; கோழியின் தாய்மைப் பண்பையும் சங்கப் புலவன் மனத்தில் நிறுத்தும் பாடல் இங்கு குறிப்பிடத்தக்கது.
"மனை உறை கோழி குறுங்காற் பேடை
வேலி வெருகினம் மாலை உற்றென
புகுமிடன் அறியாது தொகுபுஉடன் குழீஇய
பைதற் பிள்ளைக்கிளை பயிர்ந்தாங்கு'
(குறுந்.139)
என்ற பாடலில், மாலை நேரத்தில் வெருகு (கழுகினம்) பறக்கிறது. சிறுசிறு குஞ்சுகளோ, தாய்ப் பறவையின் இரைக்காகக் காத்து நிற்கிறது. ஐயோ! வெருகு தன் பிள்ளைகளைக் கவர்ந்து விடுமே என்று குஞ்சுகளை அரவணைத்து ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமே என்ற தவிப்பில், தாய்ப் பறவையின் தாய்மை உணர்வை புலவர் புலப்படுத்தி விடுகிறார்.
சங்கக் கவிஞன் எப்படி பறவை விலங்கினங்களின் ஒவ்வோர் அசைவையும் நுணுகி அணுகியிருக்கிறான் என்பது வியப்பாக இருக்கிறது.
புறக்கவிதைகள் முன்னிறுத்தும் போர்ச் சூழல்களில் மனித வாழ்வுடன் ஒன்றிக் கலந்து நிற்கும் சமூக விழுமியங்களே பேசப்படுகின்றன. வாழ்வில் நிலையாமை ஒன்றுதான் நிலைத்தது. "மாற்றம்' என்ற மானிடத் தத்துவம்தான் என்றும் மாறாதது.
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் யாண்டு கழிந்தனரே
என்று மதுரைக் காஞ்சி உணர்த்தும் வாழ்வின் நிலையாமைத் தத்துவம் மனித வாழ்வின் உச்சக்கட்டமாகும்.
பிறருக்கு எப்போதும் நல்லதையே செய்ய வேண்டும்; நன்மை செய்ய இயலாவிடில் தீமையான எண்ணத்தையாவது உன் சிந்தனையிலிருந்து அகற்றிவிடு என்ற அறிவுரையை
"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்' (புறம். 195)
என்று புறநானூறு எடுத்து மொழிகிறது.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா'
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே.....'
(புறம் 192)
என்ற கணியன் பூங்குன்றனார் பாடல், எல்லோரையும் உறவினர்களாகக் கருத வேண்டும் என்ற எண்ணத்தை மனிதச் சிந்தனைக்குள் பதிக்க வேண்டும் என்று மட்டும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு மனிதப் பிறவியும் எதிர்கொள்ளும் நல்ல செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் காரணம் நாம்தான்; பிறரைக் குற்றம்சாட்டக் கூடாது. மனித வாழ்வியலில் பிறப்பும் இறப்பும் இயற்கை; எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்ற எண்ணங்களையும் விதைக்கிறது.
"கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழி படூஉம்'.
(புறம்.192)
எனப் பேராற்று நீரிலே இழுத்துச் செல்லும் புணையானது, அந்நீர் செல்லும் வழியிலே செல்லும் அதுபோன்ற இவ்வுலகில் பிறந்த ஒவ்வோர் உயிரும் அதற்கென்று விதித்த விதிப்படி ஊழ்வினைப் பயணம் செய்யும்! இந்த ஊழ்
வினைச் செயற்பாட்டினையும் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மொழிந்த ஊழ்வினைத் தத்துவத்தையும் உணர்த்திவிடுகிறது.
இங்கு வள்ளுவத்தையும் நினைவுகூர்தல் வேண்டும் 'ஊழ்' என்ற அதிகாரத்தில் "ஊழிற்;பெருவலி யாவுள' என்று ஊழ்வினையை விட ஆற்றல் மிக்கது எது? என்பர். இதற்குப் பதிலை ஆள்வினை உடைமையில்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
என்று தாளாது ஓயாது உழைக்கும் முயற்சியுடையவர் ஊழ்வினையையும் விரட்டியடிக்க முடியும் என்று தனிமனிதனுக்குரிய "தன்னம்பிக்கை சார்ந்த திறனை' வலியுறுத்துகிறார்.
"ஓர் இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப' (புறம். 194)
என்ற புறப்பாடல் பேசும் செய்தியைச் சங்க இலக்கியம் கற்ற யாராலும் மறக்க முடியாது.
ஒரு பக்கம் திணை முழவு ஓசை, மறுபக்கம் இறப்புச் சடங்கில் எழும் பறை ஓசை; பிறப்பும் இறப்பும் இயல்பு என்ற வாழ்வியல் தத்துவத்தை மட்டும் பேசுவதுடன் சங்கப் புலவன் நிற்கவில்லை.
"இன்னாது அம்ம இவ்உலகம்
இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே'
(புறம்.194)
என்ற இரண்டு அடிகள் இங்கு குறிப்பிடத்தக்கன.
"நிஜ உலகுடன் மனிதன் கொண்ட உறவு அழகியல் நிலைப்பட்ட சமூக உறவு' என்று ஏங்கெல்ஸ் சொல்வது போன்று, சங்க இலக்கியங்களில் ஊடாடி நிற்கும் கருத்துப் பிழிவுகள் அனைத்தும் சங்க இலக்கியங்கள் உரத்துப் பேசும் வாழ்வியல் சார்ந்த சமூக உண்மைகள் என்பதுதான் உண்மை. சங்க இலக்கியங்கள் மனிதத்தையே பேசுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.