உடன்படாவிட்டால் உடன்போக்கு!

'காதல் அடைவது உயிரியற்கை' என்று கூறினார் புரட்சிக் கவிஞர். காதல் உயிர்த் தொடர்பு உடையதாக இருக்குமாயின் அதில் ஏமாற்றம், பிரிவு, மனமுறிவு ஆகியவற்றுக்கு இடமே இல்லை.
உடன்படாவிட்டால் உடன்போக்கு!
Published on
Updated on
3 min read

'காதல் அடைவது உயிரியற்கை' என்று கூறினார் புரட்சிக் கவிஞர். காதல் உயிர்த் தொடர்பு உடையதாக இருக்குமாயின் அதில் ஏமாற்றம், பிரிவு, மனமுறிவு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. வெறும் உடற்கவர்ச்சியில் பிறப்பதன்று உண்மைக் காதல்.

காதலுக்கு இடையூறுகள் வரும். அவற்றைக் காதலர்களின் வலிமைமிக்க உள்ளம் தாங்கி நிற்கும். உறவுக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற பரம்பரை வழக்கம்; ஜாதி, செல்வத் தகுதி ஆகியவை காதலுக்குத் தடையாகிவிடுவதைக் காண்கிறோம். இவற்றை மீறி நிகழ்வதே காதலர் உடன்போக்கு. இந்தக் காதல் தடை மீறலாகிய உடன்போக்கைச் சங்க இலக்கியங்கள் மிக அழகாகச் சித்தரிக்கின்றன.

ஏரியில் மழைக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்நிறைந்தது. ஏரி உடைத்துக் கொள்ளுமோ என்று கருதிய ஊரார் பல தடுப்புகளைச் சமைத்தனர்; ஆனாலும், ஒருநாள் இரவில் ஏரி உடைத்துக் கொண்டு வெள்ளமாய் நீர் வெளியேறி விட்டது. இதுவே ஓர் உருவகம். ஏரி உடைந்து வெள்ளம் வெளியேறுவதுபோல் காதலர் உடன்போக்கு மேற்கொள்கின்றனர்.

ஓர் ஆடவன், ஒரு குமரி என இருவரின் உள்ளத்தில் காதல் பூத்தது. மறைவடக்கமாக இருந்த காதல் ஊரார் சிலரின் பார்வையில் பட்டுவிட்டது. இந்தக் களவுச் செய்தி பெற்றோரை எட்டியது. 'மகளே! இனி நீ தினைக் கொல்லைக்குக் காவலுக்காகப் போக வேண்டாம்' என்று தடுத்து விட்டனர். தலைவன் இரவுக் காலங்களில் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமல் தோழியிடம் கவலை தெரிவித்தான். இச்சூழலிலேயே உடன்போக்குத் திட்டமிடப்பட்டது.

தலைவியின் உள்ளமெல்லாம் போராட்டம். எப்படித் துணிந்து போவது? பெற்று வளர்த்தவர்களையும் தோழியரையும் நிலையாகப் பிரிந்தே போவதா? பெற்றதாயும் செவிலியும் காலை எழுந்து என்னைப் படுக்கையில் காணாது தவிப்பார்களே! என்றெல்லாம் கலங்குகின்றாள். ஒருவழியாகத் துணிந்து கருக்கல் கரையுமுன் புறப்பட்டு விடுகிறாள். தலைவனிடம் அவளை அடைக்கலப்படுத்துகிறாள் தோழி.

நீண்ட தொலைவு போன பின்பு வாடிய தலைவி தலைவனின் தோளில் மெல்லச் சாய்ந்து நடக்கிறாள். அவள் மனம் இப்போது வீட்டை நினைக்கிறது. 'இந்நேரம் பொழுது விடிந்திருக்கும்; வீட்டில் உறைந்த தயிரைக் கடையத் தொடங்கியிருப்பார்கள்; நான் விளையாடிய பந்தையும், கழற்றி வைத்துவிட்ட சிலம்புகளையும் பார்த்து என் தோழியர் கண்ணீர் சிந்துவார்கள்' என்று கருதுகிறாள். வழியில் வரக்கூடும் துன்பத்திற்காக தலைவி அஞ்சுகிறாளோ என்று தலைவன் கருதுகிறான்.

'காதலியே! ஒன்றும் கவலைகொள்ளாதே. எதிரே யாரும் போருக்கு வந்தாலும் அவர்கள் அனைவரையும் தாக்கி வீழ்த்துவேன். ஆனால், உன் உறவினர்கள் வந்தால் மட்டும் நான் சற்று மறைந்து கொள்வேன்' என்கிறான். மணற்பாங்கான இடத்தில் அவளை விளையாடச் சொல்லி ஓய்வுபெறத் தூண்டுகின்றான்.

இதே சமயம் தலைவி வீட்டில் வளர்ப்புத் தாயிடம் அவர் உடன் போன நிலையைத் தெரிவிக்கிறாள் தோழி. வளர்ப்புத் தாய் என்னும் செவிலி பெற்ற தாயிடம் கூறுகிறாள். பெற்றதாய் தன் கணவனிடமும் மகன்களிடமும் தெரிவிக்கிறாள். கணவன் கொதித்துக் கண் சிவந்து 'இப்படியும் செய்தாளே' என்று அமைதி இழக்கிறான். தலைவியின் உடன் பிறந்தவர்கள் வில்லையும் அம்பையும் எடுத்து 'அவளை என்ன செய்கிறோம் பார்' எனக் குமுறுகின்றனர். ஒரு பகல் முழுவதும் உடன்போக்கு மேற்கொண்ட காதலரைக் குறித்துப் பேசியவாறு இருக்கின்றனர். பின்பு அவர்கள் மனம் ஆறி விடுகின்றது. அவள் விரும்பித் தேர்ந்து கொண்ட மணம் இது. நாம் இதைத் தடுப்பது அறமாகுமா' என்ற சிந்தனை அவர்களுக்கு வருகிறது.

செவிலித் தாய் மகளைத் தேடிக் கொண்டு வீடு தாண்டி ஊர்தாண்டிச் செல்கிறாள். எதிரில் வந்த துறவியர் கூட்டத்தைப் பார்த்து, 'அந்தணர்களே! உங்கள் வழியில் என் மகள் ஒருத்தியும், பிறன் மகள் மகனும் போவதைப் பார்த்தீர்களா' என்று செவிலித் தாய் கேட்கிறாள்.

'பார்த்தோமே! அந்தப் பெண்ணின் தாயா நீங்கள்?. நல்லதுதான். அம்மா! சந்தனம் மலையிலே பிறந்தாலும் அது மலைக்குப் பயன்படுவதில்லை. உன் மகளும் அப்படித்தான். கடலிலே முத்து தோன்றுகின்றது. அது கடலுக்குப் பயன்படுவதில்லை. உங்கள் மகள் தக்கவனையே தன் துணையாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றாள். அவளுக்குத் துன்பம் விளைவிக்காதீர்கள்' என்று கூறினர்.

சங்ககால மனிதர்கள் காதலுக்குத் தடையாக இருந்ததில்லை. காதலை அவர்கள் மதித்தனர். 'மண்படைத்தது காதலெனில் மறுப்பெதற்கு கட்டுப்பாடு எதற்கு' என்று பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், அவர்கள் காதலர் ஒருங்கிணைந்து வாழ்வதையே விரும்பினர்.

உடன்போக்கை மேற்கொண்ட காதலர் நிலையாகத் தலைவியின் பெற்றோரையும், அவர்களது உறவையும் கத்தரித்து விட்டார்கள் என்று சங்க காலத்தில் கூறப்படவில்லை. உடன்போகிய காதலர் மீண்டு வருவதையே பெற்றோர் விரும்பினர். காதலரும் திரும்பி வந்து இனிய சூழலைப் படைத்தனர் என்று 'ஐங்குறுநூறு' கூறுகிறது.

தலைவி வழியிடையில் வருவோரைக் கண்டபோது அவர்களிடம் 'எங்கள் ஊர்ப்பக்கம் செல்லும்போது என் தோழியரைப் பார்த்தால், நான் காதலனோடு செல்வதை அவர்களுக்குச் சொல்லுங்கள்' என்கிறாள்.

கவலை மிகக் கொண்டு வழிநடக்கும் செவிலியைப் பார்த்தவர்கள் 'அம்மா நீங்கள் யார்' என்று கேட்க அவள் சொல்லுகிறாள், 'குடம் உள்ளே செல்லாதவாறு குறுகிய கிணற்றில் நீரின்றி வறண்டுவிட்ட பாலை நிலத்தில் ஒருவனுடன் போய்விட்ட ஒரு பெண்ணின் தாய் நான்' என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றாள்.

பெற்றோர் எதிர்பார்த்தவாறு காதலர் தலைவியின் ஊருக்குத் திரும்பிவிட்டனர். தலைவியின் தாய் சுவைமிக்க உணவையும் பாலையும் தலைவிக்குக் கொடுக்கிறாள். தோழி, தலைவியிடம் 'நீ சென்ற ஊர் எப்படிப்பட்டது' என்று கேட்கிறாள். அதற்குத் தலைவி கூறுகிறாள்.

'அவர் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது. அவர் வீட்டுத் தோட்டத்தில் சிறு சிறு பள்ளங்களாய் அமைந்த கிணறுகளில் தண்ணீர் தேங்கியிருக்கும். அவற்றில் தழைகள் உதிர்ந்திருக்கும். மான்கள் அந்தத் தண்ணீரைப் பருகி நிற்கும். தண்ணீர் கலங்கிச் சேறாக இருக்கும் என்றாலும், இப்போது இங்கு நான் பருகிய தேன் கலந்த பாலைவிட அந்த அவருடைய நாட்டுக் கலங்கல் நீர் இனிதாகவே இருந்தது' என்றாள். இதுவே உடன்போக்கு மேற்கொண்டவர் உள்ள நிலையாகும்.

இது, கபிலரின் ஐங்குறுநூறு 203-ஆவது பாடலின் சொல்லோவியம்,

அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்

தேன் மயங்கு பாலினும் இனிய- அவர் நாட்டு

உவலைக் கூவற் கீழ

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com