
'போருக்கு நின்றிடும்போதும் உள்ளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்' என்பன மகாகவி பாரதியின் வரிகள். கோபம் அல்லது வெறுப்பு அல்லது பழிவாங்கும் உணர்வு அல்லது தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளும் மனநிலை இப்படி ஏதோ ஓர் உணர்வுதான் எந்தப் போருக்கும் அடிப்படை. ஆனால், அந்த நேரத்திலும் உள்ளத்தில் அமைதி மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஞான நிலையை பாரதி வலியுறுத்துகிறான்.
கோபம் கொள்வதற்கான அனைத்துக் காரணிகளும் இருந்தும் கோபமே இல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை நிலை! ஒரு காட்சியில் இந்தச் செய்தியை நமக்குத் தெளிவாகக் கூறுகிறான் கம்பன்.
சேது அணை கட்டி, வானர சேனை இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. அமைதி நாடிப் பேசச் சென்ற அங்கதன் தூதும் தோல்வியில் முடிந்தது. 'அகழியைத் தூர்த்து, மதிலைத் தாண்டி, உள்ளே செல்லுங்கள்; போருக்கு வரச்சொல்லி அறிவிப்பு செய்யுங்கள்' என்று இராமன் கட்டளையிட, போர் தொடங்கியது. இலங்கை நகரின் நான்கு திசைகளிலும் வானரப்படையின் தாக்குதல் கடுமையாக இருந்தது. தனது சேனைக்குப் பெரும் இழப்பு ஏற்படுவதை அறிந்து பெரும் சினம் கொண்ட இராவணன், தானே போருக்கு வந்தான். இராமனும் போருக்கு வந்தான். இருவருக்கும் இடையே மிகக் கடுமையாகச் சண்டை
நடந்தது.
சண்டையின் இறுதியில், கொண்டு வந்திருந்த அனைத்து ஆயுதங்களையும் இழந்து, நிராயுதபாணியாக நின்றான் இராவணன். அவனுக்கு நல்லறங்களை எடுத்துக்கூறிய இராமன், 'இன்று போய் போர்க்கு நாளை வா' என்று அனுப்பிவிட்டான். அரண்மனை திரும்பிய இராவணனிடம் அவனது தாத்தா மாலியவான், என்ன நடந்தது என்று கேட்டான். நடந்தவற்றை, இராவணன் மிக விரிவாக விவரித்தான். இந்த இடத்தில், இராவணன் என்னும் பாத்திரத்தையே விஸ்வரூபம் எடுக்க வைத்தான் கம்பன். எந்த இராமனை எதிர்த்து சண்டைக்குச் சென்றானோ, அந்த இராமனின் பெருமைகளை, அவனது அழகை, வில்லின் ஆற்றலை, போரிடும் திறமைகளை மிக வியந்து இராவணன் பேசினான். அவனது பல வியப்புகளில் முக்கியமானது, போரிடும் நேரத்தில், இராமன் முகம் எப்படி இருந்தது என்பதுதான். பாடலைப் பார்த்துவிடலாம்;
எறித்த போர் அரக்கர் ஆவி எண்இலா வெள்ளம் எஞ்ச
பறித்த போது என்னை அந்த பரிபவம் முதுகில் பற்ற
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை.
என தனது தாத்தாவான மாலியவானிடம் விளக்கினான் இராவணன். 'எண்ணில் அடங்காத அரக்கர்களைக் கொன்று குவித்தான் இராமன். வாழ்நாளில் நான் சந்திக்காத இந்த அவமானத்தை எனது முதுகில் அவன் சுமக்கச் செய்தான். ஆனால், அப்போதும் அவன் முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. நான் சென்ற நேரத்தில் இருந்து தொடர்ந்து என்னுடன் போரிட்டான். அம்புகள் அவன் வில்லில் இருந்து வந்தவாறு இருந்தன.
அப்போது, அவன் முகத்தைப் பார்த்தேன்; அதில் கொஞ்சமும் கோபம் இல்லை. இளவயதில், கூனியின் முதுகில் மிக விளையாட்டாக அம்பு எய்தபோது அவன் முகம் எப்படி பதற்றமும் கோபமும் இல்லாமல் இருந்திருக்குமோ, அப்படித்தான் என் மீது அம்புகளை எய்தபோதும் அவன் முகம் இருந்தது; அதில் சினம் என்பது இல்லவே இல்லை'.
தனது மனைவியைக் கவர்ந்து வந்து சிறைவைத்து, தனது எல்லா துன்பங்களுக்கும் காரணமான இராவணனுடன் சண்டையிடும்போதும், சினமற்ற, அமைதியான முகத்துடன் இராமன் இருந்தான் என்று இராவணன் வாயிலாகவே சொல்ல வைத்து, நமக்கு ஒரு செய்தியை உறுதியாகச் சொல்கிறான் கம்பன். 'உனது எந்தச் செயல்களிலும் கோபம் மட்டும் கலந்திருக்கவே கூடாது; எதையும் அமைதியுடன் செய்து பழகு; வெல்வது எளிது' என்பதே அது. காரணம், கோபத்துடன் எழுபவன், எப்போதும் இழப்புகளுடன்தான் உட்காருகிறான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.