கரும்பும் தமிழரும்...

தமிழ்நாடு நீர் வளமும், நில வளமும் பெற்றதோர் வளநாடாகும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ம.கங்கா

தமிழ்நாடு நீர் வளமும், நில வளமும் பெற்றதோர் வளநாடாகும். இதனை, 'காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி' (பட்டி.283-284) என்ற தொடர் கரிகாலன் காடுகளை அழித்து அவற்றைப் பயிர் செய்வதற்கு ஏற்ற விளைநிலமாக மாற்றினான் எனக் குறிப்பிடப்படுகிறது.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் பயிர்த் தொழில் முதன்மைத் தொழிலாக விளங்கி வருகிறது.

பயிர் வகைகளுள் பணப்பயிராய் மிளிரும் கரும்புடன் தமிழர் கொண்டுள்ள தொடர்பினைக் காண்பது தமிழர் தம் பல்துறை அறிவுக்குச் சான்றாகிறது எனலாம்.

தமிழரின் வாழ்வியலில் கரும்பு ஓர் ஆதாரமாகத் திகழ்கிறது. விழாக் காலங்களில் வீடுகளிலும், பொது விழாக்களின்போதும் பொதுவிடங்களிலும் வாழையோடு

கரும்பினையும் கட்டியுள்ளனர் என்பதை,

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் (1:46-47)

என்ற மணிமேகலைத் தொடர் சுட்டுகிறது.

அதியமானின் முன்னோர் அரிய கரும்பினை வேற்று நாட்டிலிருந்து கொண்டு வந்து பயிரிட்டனர் என்பதை,

அமரர் பேணியும் ஆவுதிஅருத்தியும்

அரும்பெறல் மரபில் கரும்பு இவண் தந்தும் (99:1:2)

என்ற ஒளவையின் புறநானூற்றுத் தொடரின்வழி அறிய முடிகிறது.

தமிழ்நாடெங்கும் கரும்புப் பயிர் செய்யப்பட்ட இடம் கரும்பின் பாத்தி என்றும், கழனி என்றும் கூறப்பட்டது. கரும்பைப் 'பழனவெதிர்' என்று அழைப்பதாக மயிலை.சீனி வேங்கடசாமி 'பழங்காலத் தமிழர் வாணிகம்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

நெல் வயல்களைச் சுற்றி கரும்பு பயிரிடப்பட்டது. கரும்பு, நெல் வயலுக்கு வேலியாக அமைந்ததை,

வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்

பாத்திப் பன்மலர்ப் பூத்ததும் (புறம். 386:10-11)

என்ற புறநானூற்றுத் தொடர்வழி அறிய முடிகிறது.

கரும்பிலிருந்து சாறு பிழிய இயந்திரம் பயன்பட்டமை,

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் (ஐங்.55-1)

என்ற ஐங்குறுநூற்றுத் தொடர் குறிக்கிறது. கரும்பு பிழியப் பயன்பட்ட இயந்திரத்தின் ஒலி களிறு பிளிறுவதுபோல் இருந்தது என்று ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.

மழைகண் டன்ன ஆலைதோறும் ஞெரேர் எனக் கழைகண்

உடைக்கும் கரும்பின் ஏத்தமும் (மலை: 340-341)

என மழை பொழிவதைப் போன்று ஆலைகள் சாறு பிழிந்தன என்பதால் சாறுபிழியும் ஆலைகள் மிக விரைவான இயக்கத்தில் இருந்தமை தெரிகிறது. ஆலைக் கரும்பின் கணுக்களை இயந்திரம் நொறுக்குவதால் இடையறாமல் ஒலி எழுந்த வண்ணம் இருந்தது என்பது மலைபடுகடாம் சுட்டும் செய்தியாகும்.

இதன்வழி விவசாயத்தோடு, அதனை மதிப்புக்கூட்டும் தொழில் நுட்ப அறிவும் பெற்றவர்களாகத் தமிழர்கள் சிறந்திருந்தமையை உணர முடிகிறது.

கரும்பிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி வெல்லம் தயாரிக்கப்பட்டது. கரும்புச்சாற்றிலிருந்து வெல்லம் காய்ச்சப்படும் போது ஆலைதோறும் புகை சூழ்ந்துள்ளது என்பதை, விசயம் அடூவம் புகைசூழ் ஆலைதோறும் (பெரும்.261)

என்ற பெரும்பாணாற்றுத் தொடர் சுட்டுகிறது. அதாவது, வெல்லம் என்பதற்கு விசயம் என்ற பெயரும் அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com