இந்த வாரம் கலாரசிகன் - 10-08-25

சென்ற வாரப் பதிவில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. அதற்காக வாசகர்கள் மட்டுமல்லாமல், சென்னை கம்பன் கழகச் செயலாளர் முனைவர் சாரதா நம்பி ஆரூரனும் என்னை மன்னித்தருள வேண்டும்.
இந்த வாரம் கலாரசிகன் - 10-08-25
Published on
Updated on
2 min read

சென்ற வாரப் பதிவில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. அதற்காக வாசகர்கள் மட்டுமல்லாமல், சென்னை கம்பன் கழகச் செயலாளர் முனைவர் சாரதா நம்பி ஆரூரனும் என்னை மன்னித்தருள வேண்டும்.

கம்பன் கழகம் போன்ற இலக்கிய அமைப்பு ஒன்றின் செயலாளராகி இருக்கும் முதலாவது பெண்மணி என்று நான் புதுக்கோட்டை

கம்பன் கழகத்தின் செயலாளராக உயர்ந்திருக்கும் புதுகை பாரதியை குறிப்பிட்டதில் தவறு நேர்ந்துவிட்டது. அந்தத் தவறை எனக்குச் சுட்டிக்காட்டிய பாரதிக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளாக இலக்கிய மேடைகளில் வலம் வருபவர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன்; ராணி மேரி கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகவும், ஒளவை நடராஜனுடன் நூற்றுக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கு பெற்றவராகவும் தமிழகத்துக்கு நன்கு அறிமுகமானவர் அவர்.

'இலக்கிய வீதி' இனியவன் செயலாளராக இருந்தபோதிருந்து, சென்னை கம்பன் கழகத்தின் துணைச் செயலாளராக இயங்கி வந்த சாரதா நம்பி ஆரூரன், கடந்த நான்கு ஆண்டுகளாக செயலாளராக திறம்பட சென்னை கம்பன் கழக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும்கூட, அச்சுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நிமிட அவசரம் காரணமாகவோ என்னவோ தவறு நேர்ந்துவிட்டது.

அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, தமிழகத்தில் என்ன இலக்கிய நிகழ்வுகள் நடந்தன, யார் விருது பெற்றார்கள், எந்தப் புத்தகம் வந்தது, கவிஞர்கள், எழுத்தாளர்கள், புதிய இலக்கியவாதிகள் யார், யார் என்பதற்கான ஆவணப் பதிவாக 'இந்த வாரம்' மட்டுமே திகழும். அதில் ஒரு தவறான பதிவு ஏற்பட்டு விடலாகாது; அது மட்டுமல்ல முனைவர் சாரதா நம்பி ஆரூரன் கடந்து போகக்கூடிய ஆளுமையா என்ன?

டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமையில் மிகச் சிறப்பாகத் தனது 51-ஆவது கம்பன் விழாவை நடத்திக் கொண்டிருக்கும் சென்னைக் கம்பன் கழகத்துக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு சென்னைக் கம்பன் கழக விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.

தமிழ்நாடு அரசின் விருதுகள் ஆளும் கட்சி அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்கிற பரவலான விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. அந்த விமர்சனம் 'தகைசால் தமிழர்' விருதுக்குக்கூடப் பொருந்தும் என்றாலும், இதுவரையில் கெளரவிக்கப்பட்டிருக்கும் ஐந்து விருதாளர்களும் அந்த விருதுக்கு முழுவதும் தகுதியானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர் விருது' இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கப்பட உள்ளது. எழும்பூர் பைஜ் மஹாலில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக.15) அவருக்குப் பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விருதுபெறும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வாழ்த்துகள். அவரைத் தேர்ந்தெடுத்து கெளரவிக்க உள்ள தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

முனைவர் வைகைச்செல்வனின் 'ஒரு நூற்றாண்டின் தவம்' புத்தக வெளியீடு கடந்த வாரம் நவி மும்பை தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டு சிறப்பித்தார். தினமணி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முன்னணி நாளிதழ்களில் வெளியான முனைவர் வைகைச்செல்வனின் நடுப்பக்கக் கட்டுரைகளின் தொகுப்புதான் 'ஒரு நூற்றாண்டின் தவம்'.

வைகைச்செல்வனுக்கு அறிமுகம் தேவையில்லை. நாடறிந்த தமிழறிஞர்; அரசியல் தலைவர்; சட்டப் பேரவை உறுப்பினராகவும், அரசுத் தலைமைக் கொறடாவாகவும், பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்; அவருடைய இலக்கிய அறிவும், நிர்வாக அனுபவமும், சமுதாய சிந்தனையும் 'ஒரு நூற்றாண்டின் தவம்' புத்தகத்தில் கட்டுரைகளாக வடிவம் பெற்றிருக்கின்றன.

2019 முதல் 2024 வரை ஐந்தாண்டுகளில் அவர் எழுதி வெளிவந்திருக்கும் 154 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. முனைவர் வைகைச்செல்வனின் பரந்து விரிந்த பார்வையில் பட்ட சிந்தனைக்குரிய பிரச்னைகள் அனைத்துமே கட்டுரை வடிவம் பெற்றிருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, நிர்வாகம், நீதித் துறை, சர்வதேசப் பிரச்னைகள், கல்வி, சுகாதாரம் என்று எதையும் விட்டுவிடாமல் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் அவர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் என்பதால் கல்வி குறித்தும், தமிழ் பற்றாளர் என்பதால் மொழி வளர்ச்சி குறித்தும், சட்டம் படித்தவர் என்பதால் சட்ட மசோதாக்கள், நீதித் துறை குறித்தும், அரசியல்வாதி என்பதால் சமுதாயப் பிரச்னைகள் குறித்தும் அவர் தனது பார்வையைப் பதிவு செய்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பருவநிலை மாற்றம், மதுவிலக்கு உள்ளிட்ட சுகாதாரப் பிரச்னைகள், விளையாட்டு, இணையவழி சூதாட்டம் போன்றவையும் அவரது பார்வையிலிருந்து தப்பவில்லை.

''ஓர் எழுத்து தவம் செய்தாலன்றி இந்த நூலை முனைவர் வைகைச்செல்வன் எழுதி இருக்க முடியாது. அவரது அபாரத் தேடல் திறன், சொல் திறன், துறை சார்ந்த ஆழ்ந்த அறிவு, முழுநேர வாசிப்பு ஆகியவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது. கட்டுரைகளின் வாக்கியக் கட்டமைப்புகளும், எளிமையான சொற்றொடர்களும் முனைவர் வைகைச்செல்வன் சொல்ல வந்த கருத்துகளை நம் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிவு செய்து விடுகின்றன'' என்கிற தினமலர் நாளிதழின் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதியின் வாழ்த்துரை வரிகளை அப்படியே ஆமோதித்து நானும் வழிமொழிகிறேன்.

பிஞ்சுக் குழந்தைகள் இயற்கையுடன் வாழ்கிறார்கள். இயற்கையை அவர்கள் அதிகமாகவே நேசிக்கிறார்கள். வளர்ந்த பிறகுதான், இயற்கைக்கு எதிராக மாறுகிறார்கள். கவிஞர் தரன் எழுதிய 'பூ அவிழும் சமிக்ஞை' என்கிற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற இந்தக் கவிதையைப் படித்தபோது அந்த உண்மை விளங்கியது.

குழந்தைகள்

எப்பொழுது வீடு வரைந்தாலும்

பக்கத்தில் ஒரு மரமும்

மேலே சில பறவைகளும்

பின்புறம் ஒரு மலையும்

கட்டாயம் வரைந்து விடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com