ப.ஜீவகன்
பழந்தமிழ் அதிசயங்கள் அக்கால மக்களின் கலை, பண்பாட்டு கலாசாரத்தின் கருவூலமாகத் திகழ்கின்றன. அந்த மக்களின் நுண்கலைகள் மட்டுமல்லாது அறிவியல் அத்தனை சிந்தனைகளையும் தெள்ளிதின் அறிய முடிகிறது.
கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதையில் நவீன அறிவியல் புரட்சிக்கு இணையான வியப்பான அறிவியல் வளத்தைக் காண முடிகிறது. அதாவது விரல் ரேகையைக் கொண்டே ஒருவரது உருவத்தை வரைதல் ஆகும். உண்மையில் இது கற்பனை வடிவம் என்றாலும், கொங்கு வேளிரின் சீரிய சிந்தனை என்றே சொல்லலாம். இதனை ஒரு நிகழ்ச்சியின் மூலம் பெருங்கதை நமக்கு விளக்குகிறது.
மதன மஞ்சிகை என்பவள் தன் மாளிகையின் மேலிருந்து பந்தாடுகிறாள். அப்போது, அந்த வீதி வழியே நரவாணன் யானை மீதேறி உலா வருகிறான். மதன மஞ்சிகை விளையாடிய பந்து தவறி அவன்மீது விழுகிறது. எதிர்பாராமல் கீழே விழுந்த பந்தைக் காண விழைந்த அவள் நரவாணனைக் கண்டு நாணம் கொள்கிறாள். அவனும் அவள் பேரழகைக் கண்டு வியப்புறுகிறான். எனினும், தன் மீது பந்தெறிந்தது யார் என அறிய விருப்பம் கொள்கிறான். அதனால், தன் நண்பன் கோமுகனிடம் அப்பந்தைக் கொடுத்து இப்பந்திற்குரியவளைக் காண இயலுமா? என வினவுகிறான்.
அதைக் கேட்ட கோமுகன் அப்பந்தை உற்றுநோக்கி, அது சிறந்த மணம்மிக்க சந்தனம் பூசப்பட்ட கைகளால் இறுகப் பிடிக்கப்பட்டிருந்ததால், அதில் பதித்திருந்த கைரேகையை நன்கு ஆராய்ந்து அப்பந்திற்குரியவளை தன் மனதால் சிந்தித்து வரையத் தொடங்கினான்.
அப்பந்தின் மீது பதிந்திருந்த ரேகைக்குரிய விரல்களையும், உள்ளங்கைகளையும், அதற்கு ஏற்ற முன்கைகளையும் வரையத் தொடங்கினான். இவ்வாறு படிப்படியாக முன்கைக்குரிய தோள்களையும், தோள்களுக்குரிய அழகிய முகத்தினையும் வரைந்தான். தொடர்த்து, நுண்ணிய புருவங்களையும் குழை அணியும் காதுகளும், கரிய கூந்தலும் என உடல் முழுவதையும் சிவந்த அடிகளோடு நூலால் அளந்து அளந்து வரைந்தவன்போல ஓவிய இலக்கணத்தில் கை தேர்ந்தவனாய் அப்பந்திற்குரிய பாவையை வரைந்து முடித்து நிமிர்ந்துப் பார்த்தான். மதன மஞ்சிகை எதிரே நிற்பதுபோல உணர்ந்தான். அவன் வரைந்த ஓவியத்தை கொங்கு வேளிர் தம் கவித் திறத்தால் இவ்வாறு கவி புனைகிறார்.
விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும்
அங்கைக்கு ஏற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக்கு ஏற்ற நன்கு அமைதோளும்
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும்
மாப்படு வடுஉறழ் மலர்நெடுங் கண்ணும்
துப்பு அன வாயும் முத்துஒளி முறுவலும்
ஒழுகுகொடி மூக்கும் எழுதுநுண் புருவமும்
சேடு அமை செவியும் சில்இருங் கூந்தலும்
ஒல்கு மயிர் ஒழுக்கும் அல்குற் பரப்பும்
மருங்கின் நீளமும் நிறம் கிளர் சேவடித்
தன்மையும் எல்லாம் முன்முறை நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதி
பாவை இலக்கணம் பற்றி மற்று அதன்
நிறமும் நீளமும் பிறவும் தெரியாச்
செறிதாள் அண்ணலைச் செவ்வியின் வணங்கி
இதன் வடிவு ஒப்போன் இந்நகர் வரைப்பின்
மதன மஞ்சிகை ஆகும்!
என முடிவு செய்கிறான். இக் கைரேகையைக் கொண்டு அதற்குரிய முழு உருவத்தையும் வரைதல் இன்று நவீன தொழில்நுட்பத்துடன் குற்றவாளியை இனம் காண காவல் துறை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தோடு ஒப்ப நோக்கத்தக்கதாக உள்ளது.
பந்தில் பதிந்த கைரேகையைக் கண்டு அந்த ரேகைக்குரியவரை ஓவியமாக வரையும் தேர்ந்த நிபுணர்கள் அக்காலத்திலேயே இருந்துள்ளனர் என்பதற்கு கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை சான்று பகர்ந்து விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.