
தமிழர் பண்பாட்டில் சிறப்புடையது விருந்தோம்பல். இப்பண்பு சங்ககாலம் தொட்டு இருந்து வருகிறது.
ஆணும், பெண்ணும் கூடி இல்லறம் நடத்துவதன் முதன்மைப் பயன் விருந்தோம்பல் என்று தொல்காப்பியம் இலக்கணம் வகுத்திருக்கிறது.
'கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள்
(தொல் பொருள். கற்பியல் (11))
இதனை வழிமொழிகிறது,
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் 81)
இல்லற வாழ்க்கையின் உயிர்துடிப்பாக விளங்குவது விருந்தோம்பலே என வள்ளுவர் கூறியபின் மறுப்பார் யார்?
கண்ணகியைப் பிரிந்து பல ஆண்டுகள் மாதவியுடன் வாழ்ந்த கோவலன் மீண்டு வந்த பின் கண்ணகி அழுகிறாள். பொன்னும் பொருளும் இளமையும் போய்விட்டதே என்று அல்ல விருந்தோம்பல் போய் விட்டதே என்று அழுகிறாள்.
அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை
(சிலம்பு மதுரைக் காண்டம் கொலைக்களக்காதை, 73}75)
என்று விருந்தினரை உபசரிக்கும் பேறு எனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறாள்.
சங்க இலக்கியத்திலோ கடமை பெருமை என விருந்தோம்பல் பேசப்படுகிறது. இல்லறத்திலே வாழ்வோர்க்குரிய கடமைகளில் விருந்து புரத்தல் முதன்மையானது.
விருந்தினர் என்றால் இக்காலத்தில் நாம் உறவினர் என்று நினைக்கிறோம். ஆனால், உறவினர் என்றால் சுற்றம். விருந்தினர் என்றால் முன்பின் அறியாத புதியவர்கள். விருந்து என்ற சொல்லுக்கே புதுமை என்று பொருள்.
அக நூலான நற்றிணை,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தன் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் (நற். 135: 3}4)
என்று உணவு வகைகளை விருந்தினர்க்குத் தந்த பின்பே தாம் உண்டதாகக் கூறுகிறது.
உழவர்கள் கொண்டு வந்த ஆமை, கரும்பிலிருந்து எடுத்த தேனையும் பெண்டிர் எடுத்து வந்து குவளை போன்றவற்றை வன்புலத்திலிருந்து வந்த விருந்தினர்க்கு விரும்பிக் கொடுத்துள்ளனர் என்று இனிப்போடு விருந்தினருக்கு உணவளித்துள்ளனர் என்று புறநானூறு கூறுகிறது.
'கீழ்படைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ற் திட்ட யாமையு மறைநர்
கருபிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்த்தரு மகளிர் குற்ற குவளையுமும்
வன்ப்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
பென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
(புறம். 42)
வந்த விருந்தினர்களை உபசரிப்பது மட்டுமல்ல அவர்களை மரியாதையோடு வழியனுப்பிய செய்தியையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. விருந்தினர்கள் விடை பெற்றுச் செல்லும் போது அவர்களுடன் ஏழு அடி உடன் சென்று வழியனுப்ப வேண்டும்.
இம்மரபை, கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடை பெறும்போது ஏழடி தொலைவு நடந்து சென்று வழியனுப்பினான் என்று பொருநர் ஆற்றுப்படை காவின் ஏழு அடிப் பின் சென்று (பொருநர் 166) கூறுகிறது.
தான் எனும் சுயநலம் அற்று அனைவரோடும் பகிர்ந்துண்டு வாழும் பண்பை வளர்ப்பதே விருந்தோம்பல். எல்லாருக்கும் எல்லாமும் என்ற சிந்தனைக்கு மனதைப் பக்குவப்படுத்தும் தமிழரின் சிறந்த அறம் விருந்தோம்பல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.