
சில நாள்களுக்கு முன்பு நான் தஞ்சாவூர் சென்றிருந்தேன். தஞ்சாவூர்வரை சென்று விட்டு கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியத்தை சந்திக்காமல் எப்படித் திரும்புவது? அதிலும் அவர் சற்று உடல்நலக் குறைவுடன் இருக்கிறார் என்கிற செய்தியைக் கேட்டதற்குப் பிறகும் சந்திக்காமலும், நலம் விசாரிக்காமலும் திரும்பவா முடியும்?
எனது நீண்டகால குடும்ப நண்பரும் தஞ்சை மருதுபாண்டியர் கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளருமான மருதுபாண்டியனை அழைத்துக்கொண்டு நானும், எங்கள் தஞ்சாவூர் தலைமை நிருபர் வி.என்.ராகவனும் குடவாயிலார் வீடு தேடிப் போனோம்.
அகவை எழுபது கடந்து விட்டால், எல்லோருக்குமே ஏற்படுகின்ற இயல்பான உடற்சோர்வும், தடுமாற்றமும் யார், இன்னார் என்று பார்ப்பதில்லை. குடவாயிலாரையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டில் சில மாதங்கள் முடக்கி இருக்கிறது இயற்கை. மற்றபடி அவர் நன்றாகவே இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டபோது சற்று ஆறுதலாக இருந்தது.
கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்டு, பல வரலாற்று உண்மைகளை உலகுக்கு வெளிக்கொணர்ந்த பெருமை குடவாயில் பாலசுப்பிரமணியத்துக்குத்தான் உண்டு. சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் இருவருடைய பிறந்த நாளையும் காலத்தையும் கண்டறிந்து உறுதி செய்தவர் அவர்தான். தான் பிறந்தது ஆடித் திருவாதிரை எனவும், தனது தந்தை பிறந்தது ஐப்பசி மாதச் சதயம் என்றும் அந்த நாள்களில் விழா எடுப்பதற்கு நிவந்தம் கொடுத்திருப்பதையும் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார் ராஜேந்திர சோழன்.
அவர்களுக்கு 100 ஆண்டுகள் கழித்துப் பட்டத்துக்கு வந்த இரண்டாம் குலோத்துங்கன், தனது முன்னோர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இருவரின் பிறந்த நாள்களான ஐப்பசி சதயம், ஆடித் திருவாதிரையில் விழா எடுத்ததற்கான கல்வெட்டுச் சான்றும் இருக்கிறது. இப்போது 1,000 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு விழா எடுக்கப்படுகிறது என்றால் அதற்கு குடவாயிலார் கண்டறிந்த அந்தக் கல்வெட்டுச் சான்றுகள்தான் காரணம்.
கொள்ளிடம் அணைக்கரையில் கீழணை கட்டுவதற்கு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, அந்தக் கற்களை பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர் என்கிற வரலாற்றுப் பதிவும் குடவாயில் பாலசுப்பிர மணியத்தால்தான் வெளிக்கொணரப்பட்டது.
நூற்றுக்கணக்கான கல்வெட்டுப் பதிவுகள், செப்புப் பட்டயங்கள், பழங்கால நாணயங்கள், சின்னங்கள் என்று குடவாயிலார் தேடிப்பிடித்து வரலாற்றுச் சான்றுகளைத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் வழங்கி இருக்கிறார். கண்டியூர் அருகே நந்திபுரத்தில் ஆயிரம் சிவலிங்கங்கள் கொண்ட ஆலயத்தைக் கண்டறிந்து அடையாளம் காட்டிய பெருமையும் அவரையேச் சேரும்.
குடவாயில் பாலசுப்பிரமணியம் குறித்து தனியாகவே ஒரு புத்தகம் எழுத வேண்டும். காலாகாலத்துக்கும் தமிழும், தமிழகமும் குடவாயிலாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றன.
இன்னும்கூடத் தீர்வு காணப்படாமலும், விவாதப் பொருளாகவும் தொடர்கிறது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் காலம். இரட்டைக் காப்பியங்கள் என்று அறியப்படும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரே காலத்தைச் சேர்ந்தவைதானா என்கிற கேள்வி விவாதப் பொருளாகத் தொடர்கிறது.
மணிமேகலையை யாத்த சீத்தலை சாத்தனாரும், சங்கப் பாடல்கள் சில இயற்றி இருக்கும் சாத்தனாரும் ஒருவரல்ல என்பதற்கு, மொழியமைப்பேகூடச் சான்று. துறவறம் போற்றும் மணிமேகலை இயற்றிய சாத்தனார், அக இலக்கியம் பாடியிருக்க மாட்டார் என்பது வாதம். சிலப்பதிகாரத்துக்கும், மணிமேகலைக்கும் கதைத் தொடர்பு இருந்தாலும்கூட, மொழியமைப்பு, சமுதாய அமைப்பு உள்ளிட்டவை வேறுபடுகின்றன.
மணிமேகலையை யாத்தவர் 'மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்' என்று உரையாசிரியர்கள் குறிப்பிட்டிருகிறார்கள். சங்கப் பாடல்களில் 'சாத்தனார்' என்கிற பெயருடன் ஏறத்தாழ 30 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவர். அவர்தான் மணிமேகலையை யாத்தவர் என்று சொல்லிவிட முடியாது.
சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 200 என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிவான ஒன்று. மணிமேகலையின் காலம் அதுவல்ல என்பதற்கு, எத்தனையோ சான்றுகள் அந்தக் காப்பியத்தில் காணப்படுகின்றன.
தமிழகத்தில் பெளத்தத்தின் பொற்காலம் என்பது கி.பி. 400 முதல் கி.பி. 600 வரை. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் சமய இலக்கியங்களின் காலம் தொடங்கி விடுகிறது.
அதனால், பெளத்தம் அழிவடைந்த கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக சீத்தலைச் சாத்தனாரைக் கருத முடியாது.
சாத்தனார் வட மொழி, பாலி மொழிகளில் வரம்பிலாப்புலமை பெற்றவர் என்பதும், புத்த பிரானின் புனித நெறிகளைத்
தமிழகத்தில் பரப்பும் நோக்கில்தான் மணிமேகலையைப் படைத்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மகாயான பெளத்தக் கருத்துகளும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் சாங்கியக் கருத்துகளும், கி.பி. நான்காம் நூற்றாண்டின் தருக்கவாத கருத்துகளும் மணிமேகலையில் உள்ளன.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு முனைவர் சோ.ந. கந்தசாமி அகலமாகவும், ஆழமாகவும் உழுவதுபோல ஆய்வு செய்து படைத்திருக்கும் புத்தகம்தான் 'மணிமேகலையின் காலம்' தமிழ் இலக்கிய மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்று பரிந்துரைக்க விரும்புகிறேன்.
ஜப்பானில் நடைபெற்ற உலக அளவிலான பாஷோ நினைவு ஹைக்கூ போட்டியில் வென்று விருது பெற்ற கவிஞர் முத்துப்பேட்டையில் இடைநிலை
ஆசிரியராகப் பணிபுரியும் க.ராஜ
குமாரன். அவரது கவிதை இது.
பயணம் முடித்த நதி
தனி வழி தேடி
அலையாகிறது...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.