
உலக வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஓர் ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும். இன்றளவும்கூட அனைத்து மதத்தினரும் அவரவர்தம் கடவுளரை வேண்டிக்கொண்டு நோன்பிருந்து பாதயாத்திரையாக கோயிலுக்குச் சென்று வழிபட்டு திரும்புகின்றனர்.
இவ்வாறு வழிநடைப் பயணம் மேற்கொள்ளும்போது உடல் அயர்வு, தளர்வு தெரியாமல் இருப்பதற்காக பல்வேறு விதமான பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வர். இதனால், பிற்காலத்தில் சிற்றிலக்கிய வகைப்பாடுகளுள் ஒன்றாக 'வழிநடைப் பதம்' என்ற ஓர் இலக்கிய வகையே தோன்றியது.
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓர் ஓலைச்சுவடி 'திருவண்ணாமலை வழிநடைப் பதங்கள்' என்ற தலைப்பிலே அமைந்துள்ளது. இலக்கியச் சுவைமிக்க இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே அன்றைய நாளில் திருவண்ணாமலை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர் நம் மக்கள். இவ்வாறு பக்தியின் காரணமாக நடைபெறுவதுபோல், கருத்தியல் சார்ந்தும் நடைப்பயணங்கள் நிகழ்கின்றன.
மக்களால் தலைவர்களாக மதிக்கப் பெற்றவர்களும், அரசியல் தலைவர்களும் தனியாகவோ, மக்கள் திரளோடோ பேரணி நடத்தியதையும் நடத்தி வருவதையும் நாம் அறிவோம். இவ்வாறான அரசியல் தலைவர்களின் பேரணி அல்லது நடைப்பயணம் அந்தந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பொதுக் கொள்கையை அல்லது ஒரு பொதுக் கருத்தின் அடிப்படையில் இயற்கை வளம் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்து ஆளுமைமிக்க ஒரு தலைவரோ, மன்னரோ எவராக இருப்பினும் வீதியில் இறங்கி நடந்து செல்லக்கூடிய நிகழ்ச்சி என்பது வெகுசனங்களின் பார்வையை தன்மீதும், தான் சார்ந்த கருத்தியலின்மீதும் மக்களுடைய கவனத்தை ஈர்க்க நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அக்கருத்தின்மீது மக்களை ஈர்ப்பதற்காக செய்யப்படுகிறது.
இத்தகு நடைப்பயணங்கள் வழியாக ஒரு சமூகத்தில் சின்னஞ்சிறு அதிர்வில் தொடங்கி மிகப்பெரும் அதிர்வையும் சமூக அரசியல் மாற்றத்தையும் உண்டாக்க முடியும் என்பதையும் உணர்ந்துள்ளோம். இதே போன்றதொரு கருத்தாக்கத்தை ஏற்படுத்தவே நம் முன்னோர் முயன்றுள்ளனர்.
பள்ளிப் பருவத்தில் கடையேழு வள்ளல்களைப் பற்றிப் படித்துள்ளோம். சங்க காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த கடையேழு வள்ளல்கள் பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களுள் பறம்பு மலையை ஆட்சி செய்தவர் பாரி; முல்லைக்கொடி வாடுகிறதென்று தன் தேரினை அளித்தவர். இவரின் கொடைச் சிறப்பைக் கண்டு வள்ளலாகப் போற்றி அவர்தம் வரலாற்றைப் படித்து வருகிறோம். பாரி முல்லைக்கு தேர் ஈந்த செய்தியைக் கீழ்வரும் சிறுபாணாற்றுப்படை செய்யுள் சுட்டுகிறது.
'சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாகநெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்'
என்று பாரியின் செயல் போற்றப்படுகிறது.
பாரி குறித்து மேலும் பல செய்யுட்களை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க நூல்களிலே காண முடிகிறது.
பாரியின் வள்ளல் தன்மையைப் போற்றுவதில் அதற்கு விளக்கமளித்த முன்னோர்களின் கருத்தில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், என்னுள் எழுந்த புதிய சிந்தனையாக இக்கருத்தை வெளிப்படுத்துவதில் சிறிதளவேனும் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.
மிக்க வள்ளல் தன்மையும் பெருஞ்சிறப்பும்மிக்க மன்னன் பாரி தேரில் ஏறி வரும்போது இன்றைய நாள் போலவே அன்றும் அரசின் தலைவருக்கே உரிய பாதுகாப்பு வீரர்களும் சில அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பலர் வள்ளல் பாரியோடு இணைந்தே பயணித்து வந்திருப்பர்.
அப்படி வரும்போது படர்வதற்கு வழியில்லாமல் இருக்கும் முல்லைக்கொடியைக் கண்ட பாரி உடன் வருகின்ற அமைச்சரிடமோ அல்லது அலுவலரிடமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வீரனை அழைத்து அந்தக் கொடி படர்வதற்குரிய வகையில் ஒரு கொம்பினை நட்டுவிட்டு வாருங்கள் என்று கூறியிருக்கலாம்.
அப்படி அம்மன்னன் சொல்லும்போது அதனை தலைமேற்கொண்டு ஓடிவந்து உடனடியாகச் செய்யக்கூடிய பணியாளர்களும் இருந்தனர். ஆனால், பாரி அவ்வாறு செய்யவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? என்னுடைய பார்வையில் இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இருக்கின்றது.
மேலே கூறிய நடைப்பயணங்கள் போன்று மன்னன் என்ன செய்கின்றான். தன் தேரினை நிறுத்திவிட்டு அதன்மீது முல்லைக்கொடியைப் படர விட்டுவிட்டு தன் இருப்பிடம் நோக்கி நடந்து செல்கிறான். மன்னன் நடக்கும்போது மற்றவர் என்ன செய்வர். அவர்களும் மன்னனோடு சேர்ந்தே நடக்கின்றனர்.
மன்னன் வீதி வழியே வருகின்ற செய்தி மக்களிடையே பரபரப்பான பேசுபொருளாக மாறுகிறது. வள்ளல் பாரி முல்லைக்கு தேரினை ஈந்துவிட்டு தேரிலிருந்து இறங்கி நடந்து வருகின்றார். மக்கள் மத்தியில் ஒரே பேச்சு; ஒருபுறம் வள்ளல் தன்மை; மறுபுறம் அவர் நடந்து செல்லும் பாங்கு பேசப்படுகிறது. இந்த இடத்தில்தான் நாம் ஒன்றை உற்றுநோக்கி கவனிக்க வேண்டியுள்ளது.
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் மன்னனுடைய எண்ணத்தில் தோன்றிய கருத்து 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பிற்காலத்தில் வள்ளலார் கூறியதுபோல் இயற்கையில் தோன்றிய அனைத்துக்கும் உயிருண்டு. அனைத்துயிரையும் போற்றக்கூடிய பண்பு தமிழருக்குண்டு; அத்தகு பண்பினை வளர்த்தெடுக்கும் விதமாக மக்களிடமும் அத்தகு பண்பினை மனதில் ஊட்டும் விதமாக முல்லைக்கொடிக்கு தேரினை வழங்கியிருக்க வேண்டும்.
இதன்வழி வள்ளல் பாரி சொல்ல வந்த கருத்து என்னவென்றால், இயற்கை வளங்களாகிய மரம், செடி, கொடிகளைப் பாதுகாக்க நான் என் தேரினையே கொடுத்து விட்டேன். இயற்கையின் வளம் பாதுகாக்கப் பெற்றால்தான் நாம் வளமுடன் வாழ முடியும். எனவே, என் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக மக்களும் இயற்கை வளங்களை அழித்துவிடாமல் போற்றிப் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினரின் கையில் வழங்க வேண்டும்.
அவ்வாறு இயற்கையைப் போற்றிப் பாதுகாத்து இயற்கையோடு இயைந்த வாழ்வே நமக்கெல்லாம் மகத்தான வாழ்வு என்று உணர வேண்டும். எனவே, இயற்கையைக் காப்போம் வாருங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக அறைகூவல் விடுத்ததாகவே மன்னன் இந்த மாபெரும் செயலைச் செய்தான் என்றே கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.