காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

பொதுமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
Published on

பொதுமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. காலம் அறிதல் என்னும் அதிகாரத்தில்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)

என்கிறார் திருவள்ளுவர். தன்னிலும் வலிய ஆந்தையைக் காக்கை பகற்காலத்தில் வென்றுவிடும். ஆதலால், பகையை வெல்லக் கருதும் அரசர்களுக்கு ஏற்ற காலம் இன்றியமையாதது என்பது இதன் பொருளாகும். சுற்றந்தழால் எனும் அதிகாரத்தில்,

காக்கை கரவா கரைந்துஉண்ணும்; ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள. (527)

என்பதும் அவர்கூற்றே. காக்கைகள் இரையைக் கண்டால் மறைக்காது தம் இனத்தை அழைத்து அவற்றோடு சேர்ந்து உண்ணும். அத்தகையவர்களுக்கே செல்வங்களும் உளவாம் என்பது இதன் பொருள்.

இப்படிக் காகத்தின் இயல்பறிந்து அவற்றைப் பதிவு செய்துள்ள நம் முன்னோர், அவை வீட்டருகில் 'கா கா' எனக் கரைவதை நன்னிமித்தமாகவே கருதினர். அத்தகு செயலைக் குறிப்பிட்டுப் பாடிய நச்செள்ளையார் என்னும் பெண்பாற்புலவர், 'காக்கை பாடினியார்' என்னும் அடை பெய்தே அழைக்கப்பட்டுள்ளார்.

தலைவியைப் பிரிந்து சென்று மீண்டு

வந்த தலைவன் ஒருவன், 'யான் பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு அவளைத் தேற்றியிருந்தாய்' என்று தோழியைப் புகழ்ந்தான். அதற்கு அவள் என் செயல் ஒன்றுமில்லை; காக்கை கரைந்ததையே நன்னிமித்தமாகக் காட்டி அவளை ஆற்றுவித்தேன் என்கிறாள். அதனைப் பின்வருமாறு விளக்கிப் பேசுகிறாள்.

திண்ணிய தேரையுடையவன் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்னும் வள்ளல். அவனது காட்டிலுள்ள இடையர்களுக்குரிய பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் முற்றும் ஒருங்கே விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய சுடுசோற்றை ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும் காக்கைக்குரிய பலியானது சிறிய அளவினதே ஆகும் என்கிறாள்.

நின் வரவுக்குரிய நிமித்தமாகக் காக்கை கரைதலையே பலமுறையும் உறுதிபடச் சுட்டிக்காட்டி மெல்ல மெல்லத் தலைவியின் துயரத்தை நான் ஆற்றுவித்தேன் என்கிறாள். இவ்வகையில் காக்கை செய்த நன்றிக்கு ஏழு கலத்தில் நிறைத்த நெய்ச்சோற்றினை ஏந்தினும் அதற்கு ஈடாகாது என்பது அவள் கருத்து. இக்கருத்தமைந்த குறுந்தொகைச் செய்யுள் இதோ!

திண்டேர் நள்ளி கானத்து அண்டர்

பல்லா பயந்த நெய்யில் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது என்தோழி

பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே!

(குறுந்.210)

காக்கை கரைதல் புதியோர் வரவைக் குறிக்கும் எனும் நம்பிக்கை பழங்காலத்துப் பெண்களிடமிருந்தது என்பதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றும் உறுதி செய்கிறது. அங்கும் பெண்ஒருத்தி காக்கை தன் கிளையோடு ஆர உண்டு மகிழப் பலியுணவினைப் பொற்கலத்தில் இட்டுத் தருவதாகக் கூறுகிறாள்:

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்

பச்சூண் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெஞ்சின விறல்வேல் விடலையொடு

அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே!

(ஐங்.391)

'குற்றமில்லாத சிறகுகளையுடைய சிறிய கருங்காக்கையே' வெவ்விய சினமும் வெற்றியுமுடைய வேலை ஏந்தும் காளை போன்றவனோடு சென்ற அழகிய கூந்தலையுடைய என் மகளை வருமாறு கரைவாயாக; கரையின் அன்புடைய நின்முறைமைக்கேற்ப நின் கிளைக்காக்கைகளோடு நீ உண்ணும் வகையில் பசிய ஊன்கலந்து ஆக்கிய சோற்றினைப் பொற்கலத்தில் இட்டுப் பலியுணவாக உனக்குத் தருவேன் என்பது இதன் பொருளாகும்.

காக்கை கரைந்தால் சென்றவர் மீள்வர் என்னும் நம்பிக்கை இதில் வெளிப்படு

கிறது. 'விடலையொடு அஞ்சிலோதியை வரக் கரைந்தீமே' என்பதனால் இதையறியலாம். இன்றும் இதன் எச்சமாகக்

கிராமப்புறங்களில் காக்கை கரைந்தால் விருந்துவரும் எனும் நம்பிக்கை உள்ளதைக் காணலாம்.

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்பெறும் பெரியாழ்வாரும் 'காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்' என்று பாடியிருக்கிறார். அவர் தம் தாழ்ச்சியை (நைச்சியம்) வெளியிடும் நிலையில்,

வாக்குத் தூய்மை இலாமையினாலே

மாதவா! உன்னை வாய்க் கொள்ள மாட்டேன்;

நாக்கு நின்னை அல்லால் அறியாது

நான் அது அஞ்சுவன் என்வச மன்று;

'மூர்க்குப் பேசுகின்றான் இவன்' என்று

முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்;

காரணா கருளக் கொடியானே!

'திருமகள்கேள்வனே! வாக்குத் தூய்மை இல்லாத காரணத்தால் உன்னைத் துதிக்கும் வல்லமை அற்றவனாயிருக்கிறேன். ஆனால், இந்த நாக்கோ உன் பொருள்சேர் புகழைப் பேசுவதன்றி மற்றொன்றினை அறியாது. இதன் குற்றத்தை நினைத்து நான் அஞ்சுகின்றேன். நாவும் என் வசப்பட்டது அன்று.

'இது மூர்க்கர் சொல்லும் சொல்லாயிருக்கிறதே' என்று நீ முனிந்தாயாகிலும் என் நாவினுக்கு - அது தரும் தொல்லைக்கு ஆற்றமாட்டாதவனாயிருக்கிறேன் காக்கையின் வாயினிடத்துப் பிறக்கும் சொற்களையும் அறிவுடையார்கள் கட்டுரையாக நல்ல சொற்களாகக் கொள்வார்கள் அல்லவோ?

அதுபோல, சர்வ காரணபூதனாய் இருக்கக் கூடியவனே! பெரிய திருவடியாகிய கருடனைக் கொடியாக உடையவனே! நீயும் என் பொல்லாச் சொல்லை நல்ல சொல்லாகக் கொண்டருளவேணும்' என்று பிரார்த்திக்கிறார் பெரியாழ்வார். இங்குக் 'காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்' என்னும் பெரியாழ்வார் வாக்கு, 'பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்' என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கை நினைப்பிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com