
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் காலப்போக்குடன் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. இதைக் கவலையாய் கழிப்பதும், களிப்புடன் இருப்பதும் நமது தேர்வுதான்.
நமது உணர்வுகள் பற்றி காலத்துக்குக் கவலை இல்லை. சந்திக்கும் ஏமாற்றங்களும், துரோகங்களும் மனத்தையும் உடலையும் பாதிக்கவே செய்கின்றன. எதிரி நமக்கும் எதிரே நிற்கிறான்; அடையாளம் காண முடிகிறது. ஆனால், துரோகி நமக்கு அருகில்தான் இருக்கிறான்.
நமது பக்கத்தில் இருப்பவர்களால்தான் துரோகங்கள் அரங்கேறுகின்றன. இந்த அதிர்ச்சிகள் நமது மனத்தினை ஆக்கிரமித்து, கவலைகளில் மூழ்கடிப்பது, தவிர்க்க இயலாததுதான். ஆனால், எத்தனை காலத்துக்கு அந்தக் கவலையில் கட்டுண்டு இருக்கிறோம் என்பதே கேள்வி. நடந்துவிட்டதை மனதிலிருந்து ஒதுக்கி, எதுவும் நிரந்தரமானதில்லை என்ற புரிதலுடன். அந்தச் சூழலைக் கடந்து வருவதுதான் அறிவுடைமை. பொருத்தமான ஓரிடத்தில், இந்த அறிவுரையை நமக்குச் சொல்கிறான் கம்பன்.
இராவணன் மரணத்துடன் போர் நிறைவடைந்தது. அந்த செய்தியைச் சீதையிடம் சொல்ல, அனுமனை அனுப்பினான் இராமன். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அனுமன், சீதையிடம் செய்தியைச் சொல்லி ஆடிப்பாடினான். அனுமன் செய்த உதவிகளுக்கு, அவனுக்கு மிகவும் நன்றி சொன்னாள் சீதை.
இராவணன் அதிகாரத்தில் இருந்தபோது, அவனது ஆணையின்படி சீதையை மிரட்டிக்கொண்டிருந்த காவல் அரக்கியர், இப்போது அஞ்சி நடுங்கிக்கொண்டு நின்றிருந்தனர். ஒரு முறை சீதையைக் காண வந்த இராவணன், 'இவள் மனத்தை மாற்றி, என்னுடன் வாழ இவளைச் சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு; இவள் தொடர்ந்து மறுத்துக்கொண்டிருந்தால், உங்கள் உயிர் உடலில் தங்காது' என்று மிரட்டிவிட்டுப் போனான்.
அரசன் ஆணைக்கு பயந்த காவல் அரக்கியர், சீதையைத் தொடர்ந்து பல விதங்களிலும் மிரட்டினர். மிகப் பெரும் உருவம் கொண்டிருந்த அந்தக் காவல் அரக்கியரின் அச்சுறுத்தலில், அஞ்சி நடுங்கியிருந்தாள் சீதை. சூழ்நிலையின் மாற்றத்தால், இப்போது அந்தக் காவல் அரக்கியர் நடுங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயந்து நிற்பதைப் பார்த்த அனுமன், சீதையிடம், 'தாயே! இவர்கள் உங்களை எவ்வளவு கொடுமைப் படுத்தினார்கள்; இவர்களை சும்மா விட்டுவிடக்கூடாது! நான் இவர்கள் குடலை உருவி எடுப்பேன்; குருதியைக் குடிப்பேன்; அவர்கள் உடலை முருக்கி உண்பேன். அனுமதி தாருங்கள்' என்று கோபத்துடன் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்ட அரக்கியர் எல்லோரும் ஓடி வந்து, 'தாயே... நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று சீதையின் கால்களில் விழுந்தனர்.
'அனுமனே! இவர்கள் மீது கோபப்பட ஒன்றுமே இல்லை...
தங்கள் தலைவன் சொன்னதைச் செய்ததைத் தவிர இவர்கள் என்ன தவறு செய்தார்கள்?' என்று அவனைத் தடுத்த சீதை சொன்னாள்; 'என்னுடைய தீவினைப் பயனால்தான் இந்தக் கொடுமைகள் நடந்தன...' தொடர்ந்து அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். 'தாயைவிட அன்புடையவனாகத் திகழும் அனுமனே! அப்படிப்பார்த்தால், திட்டமிட்டுத் தீமை செய்த கூனியின் கொடுமையைவிட அதிகமாகவா இவர்கள் கொடுமை செய்துவிட்டார்கள்?' இந்தக் கேள்வி மூலம், கைகேயி மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதையும், கோபமும் வருத்தமும் கூனி மீதுதான் என்பதை வெளிப்படுத்தினாள் சீதை.
தொடர்ந்து, அனுமனுக்கு அவள் சொன்ன அறிவுரைதான் மிக முக்கியம். 'நீ அறிவுடையவன்; அறிவுடையவர்களின் செயல் என்ன தெரியுமா? நடந்து முடிந்த துயரங்களை மனத்தில் சுமக்காமல் இருப்பதுதான். நமக்கு நிகழ்ந்த வருத்தங்களையும் துன்பங்களையும் மனதுக்குள் வைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பது அறிவுடையவர்களின் செயல் இல்லை' என்றாள். இதுதான் கம்பனின் பாடல்.
யான் இழைத்த வினையினின் இவ் இடர்-
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்!
பாடலின் இறுதியில் இருக்கும் 'புந்தியோய்' என்ற சொல்லுக்கு, 'அறிவுடையவனே' என்று பொருள். நமது வாழ்க்கைப் பயணத்தில், ஏமாற்றங்களும், தோல்விகளும், நம்பிக்கைத் துரோகங்களும் சாலைகளின் இருபுறங்களிலும் இறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. இவற்றை ஒரு முறையேனும் சந்திக்காதவர், நம்மில் யார்தான் உண்டு? ஆனால், இவை நமது வெற்றிப் பயணத்துக்கு எந்த விதத்திலும் தடையாக இருந்துவிடக் கூடாது. கதையைச் சொல்வதுடன், 'நடந்து
முடிந்துவிட்டவற்றுக்காக கவலைப்பட்டுக்கொண்டே இருத்தல், அறிவுடைய செயல் அன்று' என்று நமக்கு ஓர் அறிவுரையையும் சேர்த்துச் சொல்கிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.