
ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உத்தர பிரதேச அரசின் அனுமதியுடன் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் கடந்த புதன்கிழமை (ஆக.27) ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகுந்தன் இந்தத் தகவலை எனக்குத் தெரிவித்தார்.
தலைவராக வி.எஸ்.சுப்பிரமணியம், துணைத் தலைவராக வெங்கட்ரமணன், பொதுச் செயலாளராக த.ஜெகதீசன் ஆகியோரால் வழிநடத்தப்பட இருக்கும் காசி தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழாவில் வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம், மாவட்டக் காவல் துறைத் தலைவர் டி.சரவணன், அவரது துணைவியார் ஐஸ்வர்யா சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். இனிமேல் காசிக்குச் செல்லும் தமிழர்களுக்கு உதவ காசி தமிழ்ச் சங்கமும் இருக்கும் என்பது மகிழ்ச்சியான செய்திதானே.
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது நினைவிருக்கிறது. அது செயல்படுகிறதா என்பது வெளியில் தெரியும்படியாக இல்லை. இந்தியா முழுவதும் வெளி மாநிலங்களில் செயல்படும் தமிழ்ச் சங்கங்களை அவர்கள் ஒருங்கிணைக்கிறார்களா, தொடர்பில் இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
ஆண்டுதோறும் மதுரையில், சென்னையில், தஞ்சையில், கோவையில் இந்தியாவின் பிற மாநிலங்களில் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்தினால்தானே உலகத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு செயல்படுவது வெளியில் தெரியும்?
திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள நடைபாதையில் பழைய புத்தகக் கடைகளைத் துழாவுவதில் எனக்கு அலாதி மகிழ்ச்சி என்பதை முன்பே நான் பதிவு செய்திருக்கிறேன். சட்டென கண்ணில்பட்டது மேலட்டை கிழிந்த நிலையில் இருந்த ஒரு பழைய புத்தகம்; தொட்டால் உதிர்ந்து விடும் என்கிற நிலையில் இருந்தது, சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் முன்பாக வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகம்.
வெளியில் பெயர் எதுவும் இல்லை. உள்ளே பிரித்துப் பார்த்தபோது அது 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் எழுதிய 'புதியதும் பழையதும்' என்கிற புத்தகம் என்று தெரிந்தது. உதிர்ந்து கொண்டிருந்த அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும், பழந்தமிழ் ஓலைச் சுவடிகளை நெருப்பில் போட்டபோது பதைபதைப்புக்குள்ளான உ.வே.சா.வின் உணர்வில் நான் இருந்தேன்.
அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
'வருத்தப்படாதீங்க சார்! புதிய பதிப்பு நிச்சயம் வந்திருக்கும்; நெட்டில் தேடுங்கள் கிடைக்கும்' என்கிறஆறுதல் வார்த்தை வந்தது; திரும்பிப் பார்த்தேன். ஓர் இளைஞர் பொறியியல் தொடர்பான புத்தகங்களை வாங்க வந்திருந்தார்.
என்னிடம் 'புத்தகத்தின் பெயர் என்ன?' என்று கேட்டு தனது அறிதிறன்பேசியில் கூகுளில் தேடிப் பிடித்துத் தகவலும் தெரிவித்தார். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், 'நான் கண்டதும் கேட்டதும்'; 'புதியதும் பழையதும்' என்கிற இரண்டு நூல்களையும் இணைத்துப் பதிப்பித்திருந்த தகவல் கிடைத்த பிறகு நான் ஏன் யோசிக்கிறேன்; அந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன்.
உ.வே.சாமிநாதையர் தனது கடைசி பத்தாண்டுகளில் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகளை எழுதி வந்தார். 'என் சரித்திரம்' கூடத் தொடராக வந்த பிறகுதான் புத்தக வடிவம் பெற்றது. 1936-இல் பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்த 12 கட்டுரைகளைத் தொகுத்து 'நான் கண்டதும் கேட்டதும்' என்கிற தலைப்பில் வெளிக்கொணர்ந்தார். அதற்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பைத் தொடர்ந்து, மேலும் 20 கட்டுரைகளைத் தொகுத்து 'புதியதும் பழையதும்' என்னும் பெயரில் வெளியிட்டிருந்தார். நடைபாதைக் கடையில் பார்த்தது இரண்டாவது புத்தகம்.
'நான் கண்டதும் கேட்டதும்' தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை மட்டுமல்ல; பல அரிய வரலாற்று, இலக்கிய, சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. ஒரு சில ஆராய்ச்சிக் கட்டுரைகள். தான் படித்ததும், தனக்குத் தெரிந்ததும் எல்லாவற்றையும் கட்டுரை வடிவமாக்கி இருக்கிறார் தமிழ்த் தாத்தா.
சேலம் சாருவாய் என்கிற ஊரைச் சேர்ந்த கதிர்வேற் கவிராயர் சொன்ன தகவலின் அடிப்படையில் அமைந்தது அதில் இடம்பெறும் 'மானம் காத்த மைந்தன்' கட்டுரை. வேம்பத்தூர் பெருமாளையரென்கிறவித்வான், திருநெல்வேலி சைவ வேளாளர் பிரபுக்களின் ஆதரவில் எழுதிய 'நெல்லை வருக்கக்கோவை' குறித்த பதிவு. வருக்கக் கோவை பற்றிய விளக்கத்தையும் தருகிறார் உ.வே.சா.
மருது பாண்டியர் 'முள்ளால் எழுதிய ஓலை' குறித்த கட்டுரை 'தினமணி' பாரதி மலரில் வெளிவந்தது. அதை உ.வே.சா.வுக்குச் சொன்னவர் சிறுவயல் ஜமீன்தார் ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் என்று உ.வே.சா. பதிவு செய்கிறார். 'புதியதும் பழையதும்' தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 20 கட்டுரைகளில் 10 கட்டுரைகள் ஏற்கெனவே வெளிவராத புதிய கட்டுரைகள்.
'சென்னை மேற்கு மாம்பலம் திருமதி சியாமளா வாசுதேவன் அவர்களின் கைம்மாறு வேண்டாத நிதியுதவியால் இந்நூல் தொகுதி வெளியிடப்படுகிறது' என்கிற பதிப்புரைக் குறிப்பு நெகிழ வைக்கிறது. திருமதி சியாமளா வாசுதேவனுக்கு எத்தனை நன்றி கூறினாலும் தகும்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த கவிஞர் நாகாவின் 'யாரிடத்திலும் புத்தர் இல்லை', அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு. தறிக்கூடத் தொழிலாளியாகப் பணியாற்றும் கவிஞர் நாகா இதற்கு முன்னால் 'உய்ய்...', 'வேர் நனைக்கும் முத்தத்தின் ஈரம்' என்று இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். புத்தகத் தலைப்புக்கான கவிதையை இங்கே நான் பகிர்கிறேன்.
மால்களில், உணவகங்களில்
மருத்துவமனைகளில்
தனியார் பேருந்தில்
சில ஆட்டோக்களில்
நிதி நிறுவனங்களில்
ஐடி கம்பெனிகளில்
கால் சென்டரில் என
எல்லா இடங்களிலும்
புத்தர் இருக்கிறார்
யாரிடத்திலும் புத்தர் இல்லை...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.