பழந்தமிழரின் நீர் மேலாண்மை

நீர் வளத்தை மையப்படுத்தி நில உயிர்கள் அனைத்தும் வாழ்கின்றன என்பதை உணர்ந்த பழந்தமிழர்கள் உருவாக்கிய நீர் நிலைகளில் ஏரியும் ஒன்று.
கோப்புப் படம்
கோப்புப் படம்Center-Center-Tiruchy
Published on
Updated on
1 min read

ம.ரஞ்சிதா

நீர் வளத்தை மையப்படுத்தி நில உயிர்கள் அனைத்தும் வாழ்கின்றன என்பதை உணர்ந்த பழந்தமிழர்கள் உருவாக்கிய நீர் நிலைகளில் ஏரியும் ஒன்று.

காடுகளை அழித்து வளம் பெருக்கினான்

கரிகாலன் என்பதை 'காடுகொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி' (பட்டினப் பாலை: 283-284) என்ற தொடர் எடுத்துரைக்கிறது. மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் ஏரிகள், ஆற்றுக்கால் ஏரிகள் அமைக்கப்பட்டன.

பொதுவாக ஏரிகள் கிராமத்தின் பன்முகத் தேவைகளை நிறைவு செய்ய உதவும் களஞ்சியமாக உள்ளன. நிலத்தின் ஒரு பகுதியில் பெய்யும் மழைநீர் ஏரிக்குள் வடிவதை வடிகால் எனவும், ஏரிகளில் வடியும் நீரை வடிநீர் அல்லது பரப்பு நீர் என்றும் அழைத்தனர்.

ஏரியிலுள்ள நீரை வயல்களுக்கு எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட கட்டமைப்பே மடைகள் ஆகும். நீர்ப்பெருக்கிகள் வெள்ள அபாயத்திலிருந்து காக்கவும் மிகை நீரை வெளியேற்றவும் உருவாக்கப்பட்டதுதான் மறுகால். இவற்றையே கலிங்கு, கோடி என்றழைத்தனர். இதை,

....குளம் நிறைந்து வாள்கண்

கரியமை சேறு சித்திக் கலிங்கு திறந்த வன்றே

(சீவக சிந்தாமணி- 2476)

என்ற தொடர் விளக்குகிறது. 'கலிங்கு' என்பது ஏரியின் மிகை நீர்ப்போக்கி என்பதைக் குறிப்பிடுகிறது. இது ஏரியின் பரப்பளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுவது நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைப்பது போன்றவற்றால் நீரை அதிகமாகச் சேமிக்க வழிவகை செய்தனர். நீர்மேலாண்மையில் தமிழர்கள் பல உத்திகளைக் கையாண்டனர்.

பாரியின் நாட்டில் ஏரிகள் அரைவட்டமாக அமைக்கப்பட்டிருந்ததை,

அறையும் பொறையும் மணந்த தலைய

எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரை

(புறம்:118)

என்ற புறநானூற்றுத் தொடர் வழியே அறியலாம். ஏரிக்கரைகள் எட்டாம் பிறைச் சந்திரன் வடிவில் இருந்ததால், கரையின் நீளம் குறைவாகவும் கொள்ளளவு அதிகமாகவும் அமைந்திருந்தன. இந்த முறைமை தமிழர்கள் கையாண்ட நீர் மேலாண்மையின் உயரிய தொழில்நுட்பம் எனலாம்.

நீர்நிலைகளின் வகைகளாக பெரிய ஏரி, குளம், ஊருணி, திருமஞ்சனக்குளம், தெப்பக்குளம் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. பெரிய ஏரி, குளம் என்பது பாசனப் பயன்பாட்டுக்கும், ஊருணி கிராமக் குடிநீர்த் தேவைக்கும், திருமஞ்சனக்குளம் இறைவழிபாட்டுக்கும், தெப்பக்குளம் கோயில் திருவிழாக்களில் இறைவன் எழுந்தருளுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டன.

பள்ளமான நில அமைப்பு இல்லாத சரிவான நிலங்களிலும் ஏரி அமைக்கும் முறையை அறிந்திருந்தனர். இதை புறநானூற்றுப் பாடலில் 'நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருக' என்ற தொடர் விளக்குகிறது; மேடு-பள்ளமான இடங்களில் எல்லாம் நீர்நிலைகள் (ஏரி, குளம்) அமைத்து மழை நீரைச் சேமித்தார்கள் என்பதை எடுத்துரைக்கிறது.

ஏரியின் உயரம், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அறிந்து உருவாக்கியுள்ளனர். ஏரியின் மொத்தக் கொள்ளளவைத் தாண்டி நீர் வந்தால் அது கலிங்கு வழியே வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு செய்வதால் கரை உடையாமலும் நீர் வீணாகாமலும் வேறொரு ஏரியிலோ அல்லது ஆற்றிலோ கலந்துவிடும்படி வாய்க்கால்கள் அமைத்திருப்பதும் தெரிய வருகிறது. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை நீர் மேலாண்மை முறைக்கு முன்னோடியாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com