வ.ரா.வின் பார்வையில் பாரதி!

வசனத்திற்கு வ.ரா. போதும்; கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று மகாகவி பாரதி பாராட்டிய வ.ரா. என்ற வ.ராமஸ்வாமி அய்யங்கார் பாரதியார் குறித்துப் பதிவு.
வ.ரா.வின் பார்வையில் பாரதி!
Updated on
2 min read

'வசனத்திற்கு வ.ரா. போதும்; கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று மகாகவி பாரதி பாராட்டிய வ.ரா. என்ற வ.ராமஸ்வாமி அய்யங்கார் பாரதியார் குறித்துப் பதிவு செய்துள்ளவற்றில் சில துளிகள்...

வ.ரா. புதுச்சேரியில் தங்கியிருந்த மகாகவியை முதன்முதலில் சந்திக்கிறார். முதல் சந்திப்பின்போது, பாரதியின் காலில் விழுந்து 'சாஷ்டாங்க நமஸ்காரம்' செய்கிறார். பாரதி வ.ரா.வைப் பற்றிக் கேட்கிறார். உடனே வ.ரா. தன்னைப் பற்றிக் 'கடகட'வென ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொள்கிறார். இச் செய்கை பாரதிக்கு ஏற்புடையதாக இல்லை. 'ஒரு தமிழன் மற்றொரு தமிழனிடம் தமிழில் உரையாடக் கூடாதா?' என்று 'பட பட'வென்று பொரிந்து தள்ளுகிறார் பாரதி.

வ.ரா. தன்னுடைய முதல் சந்திப்பிலேயே பாரதியின் 'தாய்மொழிப் பற்றை' நன்கு அறிந்து கொண்டார். பாரதியாரின் முக்கியமான குணம் பேசினால், பேசிக் கொண்டிருப்பார்; பேச்சு ஓய்ந்து விட்டால், உடனே பாட்டில் பாய்ந்து விடுவார். பாரதி மெளனமாக இருப்பது அபூர்வம்.

பாரதி புதுச்சேரி வீதிகளில் நடந்து சென்றால், பலர் பயபக்தியுடன் நின்று கொண்டு அவரைக் கும்பிடுவர். பாரதியார் உடனே தம்முடைய இரண்டு கைகளையும் கூப்பி, முகத்திற்குக் கொண்டு போய் பதிலுக்குக் கும்பிடுவார். நடந்து கொண்டே கும்பிடும் வழக்கம் அவரிடம் இல்லை. சற்றே நின்று கும்பிட்டு, அவர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் மேலே நடந்து செல்வார்.

பாரதியார் மாநிறமாக இருப்பார். ஐந்தரை அடிக்கு மேல் உயரம்; முகத் தோற்றத்துக்கு ஏற்றார்போல் அளவான நாசி (மூக்கு). பாரதியின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக்

கண்கள். பரந்த நெற்றி, தலைமுடி, இருபுறமும் நன்கு வளர்ந்திருக்க, தலையின் நடுப்பகுதியில் முக்கால்வாசிப் பகுதி வழுக்கை. இருபுறமும் உள்ள தலைமுடியை நடுப்பகுதிக்குக் கொண்டுவர பாரதி தலை சீவ, வெகுநேரம் எடுத்துக் கொள்வார்.

அவருடைய வலக்கை எழுதா நேரங்களில் எல்லாம், பெரும்பாலும் மீசையில் இருக்கும். மீசையை முறுக்க மாட்டார்; மாறாக அவருடைய கை, மீசையைக் தடவிக் கொடுக்கும். நடுநெற்றியில் சந்திர வட்டத்தைப் போல், குங்குமப் பொட்டு எப்போதும் இருக்கும்.

உடலில் எப்போதும் ஒரு பனியன்; அதற்கு மேல் ஒரு சட்டை; அதற்கும் மேல் ஒரு கோட்டு; அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் மட்டும் போட்டுக் கொள்வார்; சட்டையின் இடப்பக்கம் பித்தான் துவாரத்தில் ஏதாவது ஒரு மலரைச் செருகி வைத்துக் கொள்வார்; இடக்கையில் எப்போதும் ஒரு நோட்டு புத்தகம்; சில காகிதங்கள்; ஏதேனும் ஒரு புத்தகம்; கோட்டுப் பையில் ஒரு பென்சில்; பாரதியாரின் கையெழுத்து முத்து முத்தாய்த் தெளிவாக இருக்கும்.

தலையில் முண்டாசு கட்டிக் கொள்வார். பாரதியார் எப்போதும் எம்பி, எம்பி ஒரு துள்ளல் நடையோடு வீதியில் செல்வார். ஏனென்றால் அவருடைய இடக்கால் பாதத்தில் 'கால் ஆணி' விழுந்திருந்தது. அதனால் இடக்கால் பாதம் முழுமையாக தரையில் பாவாது. ஆனால், நிமிர்ந்து நடப்பார். குனிந்து நடந்ததே கிடையாது. 'கூனாதே, கூனாதே' என்று எதிரில் வரும் இளைஞர்களை அடிக்கடி ஊக்கப்படுத்துவார். கொஞ்சங்கூட சதைப்பற்றே இல்லாத மார்பினை, பட்டாளத்துச் சிப்பாய்போல், முன்னை தள்ளி தலை நிமிர்ந்து பாடிக் கொண்டே நடப்பார்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் 'லா மார்ஸேய்ஸ்' 'லா சேம்பர்தே மியூஸ்' என்ற பிரெஞ்சுப் பாடல்களைப் பாடிக் கொண்டு அவற்றின் தாளத்திற்கேற்ப நடப்பதில் பாரதியாருக்கு மிகுந்த ஆசை.

பணம் கொடுக்கிற சங்கதியில் பாரதியாரோடு நிரம்ப ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவருடைய கையில் பணம் இருக்காது என்பது உண்மை. ஆனால், பிச்சைக்காரனுக்குப் பிச்சை போடுவதுபோல நினைத்துக் கொண்டு எவரேனும் உதவி செய்ய முன்வந்தால் அவர்கள் பாரதியாரிடம் அவமானப்பட்டுப் போவார்கள்.

நடத்தை கிரமத்தில், மரியாதை விஷயத்தில் பிறர் துளி தவறு நடந்தாலும் பாரதியாருக்கு ரோஷமும் ஆத்திரமும் வந்து விடும். இரவிலோ, விடியற்காலையிலோ, எப்பொழுதேனும் உரத்த குரலில் பாரதியார் பாட ஆரம்பித்து விட்டால் பாட்டு நிற்பதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் பிடிக்கும். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளோருக்கும் தூக்கம் போய் விடலாம். ஆனால், யாரும் இதைப் பற்றிப் பாரதியாரிடம் குறை சொன்னதே கிடையாது.

பாரதியாருக்கு பாலகங்காதர திலகரின் மீது அபார பக்தி. ஒரு சமயம் வ.வே.சு. ஐயர், பாரதியார் ஆகிய இருவரும் புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது, வ.வே.சு. ஐயரைத் தேடி ஒரு பிரபல வழக்குரைஞர் வந்தார். அவர் வ.வே.சு. ஐயரைப் பார்த்து, 'ஏன் ஸார்! உங்க டிலக் இப்போ எங்க இருக்கான்?' என்று கேட்டார்.

ஐயரின் முகம் சிவந்து போயிற்று. பாரதியாருக்குப் பொத்துக் கொண்டு வந்தது கோபம்.

வந்தவரைப் பார்த்து, 'ஏண்டா? நீ தமிழன் இல்லையா? நீ என்ன வெள்ளைக்காரனா? என்னடா 'டிலக்' வேண்டியிருக்கு?

திலகர் அப்படின்னு சொல்ல உன் நாக்கு கூசுகிறதா? எங்கள் தலைவர் திலகர். உங்க வீட்டு மாட்டுக்காரனா? அவன் இவன்னு அந்த மகானை மரியாதை இல்லாமப் பேசற? முழு மூடா' என்று பொரிந்து தள்ளிவிட்டார் பாரதி. வந்த மனிதருக்கு (திருச்சியில் பிரபலமான வழக்குரைஞர்) முகத்தில் ஈயாடவில்லை. ஒரு நொடியும் தாமதிக்காமல் பாரதியாரிடம் அவர் மன்னிப்புக் கேட்டார். பாரதியின் கோபம் தணிந்தது.

பாரதியார் சீட்டு மற்றும் சதுரங்கம் விளையாட்டில் எப்போதாவது ஈடுபடுவார். ஆனால், இவ்விரண்டு ஆட்டங்களிலும் அவருக்கு பாண்டித்தியம் கிடையாது. சதுரங்க விளையாட்டில் வ.வே.சு. ஐயர் திறமை வாய்ந்தவர். அவர் பாரதியாரின் காய்களை வெட்டித் தீர்த்து வென்று விடுவார். 'ஐயரே! இவ்வளவு கடுமையாகக் கொலைத் தொழிலை செய்யாதேயும்.

அப்புறம் உமக்குக் குழந்தை குட்டிகள் பிறக்கா' என்று அழாக்குறையாகப் பாரதியார் சொல்லுவார். ஐயருக்குக் காய்கள் வெறும் சதுரங்கக் காய்கள். பாரதியாருக்குக் காய்கள் குழந்தை மாதிரி.

பாரதியாருக்கு கடலில் நீந்த வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், நீந்தத் தெரியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com