

ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எழுதி புறநானூற்றில் (183) இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாடலின் முதல் இரு வரிகள் கல்வி கற்கும் முறை குறித்து கூறுகிறது. அடுத்த வரிகள் தான் பாடலின் சிறப்புப் பகுதி. ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகளில் தாய் வேறுபாடு பார்க்கமாட்டாள்.
அவளுக்கு எல்லா பிள்ளையும் ஒரே தரம்தான். ஆனால், ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்றாலும், கல்வியால் மேன்மை பெற்ற பிள்ளையிடம் தாயின் மனம் இயல்பாக சென்றுவிடும்; வேறுபாட்டை உருவாக்கிவிடும். அதாவது, பிறப்பில் ஒரு தன்மையுடைய ஒரே வயிற்றில் பிறந்தோருள்ளும் ஒருவரின் கல்விச் சிறப்பால் தாயின் மனமும் வேறுபடும் என்கிறார் நெடுஞ்செழியன்.
'பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்'
என்கிறது பாடல்.
அடுத்து கூறுவதுதான் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. காலம் காலமாக மூத்தவனுக்கு அரசு என்பது எழுதப்பட்ட விதி.
மூத்தவன் என்பது மட்டுமே அரசாளத் தகுதியாகிவிடாது. அவ்வாறு அவனுக்கு அரசு கொடுத்தால் என்னவாகும்...? அது நல்லரசாக இருக்குமா...?
'ஒரு குடியில் பிறந்த பலருள்ளும் மூத்தவனே வருக' என்று சொல்லாமல், அவர்களுள் அறிவுடையோன் செல்லும் வழியில்தான் அரசும் செல்லும் என்கிறார். ஆக, கல்வியில் மேம்பட்டவனுக்கே அரசாளும் தகுதியே தவிர, மூத்தவன் என்பது தகுதியல்ல.
'ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்'
என்பது பாடல் வரிகள்.
மேலும், கீழ்பாலுள்ள ஒருவன் கல்வியில் மேம்பட்டால், அவன் மேலானவன் என்று சொல்லவில்லை. மாறாக, மேல்பாலுள்ளவன் அவனுக்கு நிகரானவன் என்று உயர்வு - தாழ்வு பேதம் கற்பிக்க முடியாது என்று பாடலை முடிக்கிறார்.
தகுதி என்பது கல்வி மேன்மையால் வருவதே அன்றி, குலத்தால் வருவதல்ல. கீழ்ப்பால் ஒருவனின் கல்விச் சிறப்பானது, மேல்பால் ஒருவனை வழிநடத்தவும் வல்லது. அவன் வழியைப் பின்பற்றவும் செய்வது. இவ்வாறு கல்வியின் மேன்மையைத் தமிழர்கள் மேம்பட்ட நிலையில் வைத்துப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.