அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்களின் மரபுத் தொடர்ச்சியை இனப்பெருக்கம் என்பர். மனித இனத்துக்கு மட்டுமே அது மக்கட்பேறு எனச் சிறப்பிக்கப்படுகிறது.
Updated on
2 min read

மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்களின் மரபுத் தொடர்ச்சியை இனப்பெருக்கம் என்பர். மனித இனத்துக்கு மட்டுமே அது மக்கட்பேறு எனச் சிறப்பிக்கப்படுகிறது.

நம் முன்னோர் மனித வாழ்வில் பெறக்கூடிய பதினாறு பேறுகளுள் மக்கள் பேறும் ஒன்றாகும் என்பர். ஐயன் வள்ளுவனே முதன்முதலில் 'மக்கட்பேறு' எனக் குறிப்பிடுகின்றார்.

'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெரும்பே றில்லை' என முதுமொழிக்காஞ்சியும் (ப.51) அதை வலியுறுத்தும். பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் இலக்கியம் உருவாக மக்கட்பேற்றின் சிறப்பே காரணம் எனலாம்.

சங்ககாலம் தொட்டே மக்கட்பேறு சிறப்பாகப் போற்றப்பட்டது. 'இம்மை உலகத்தில் புகழொடு விளங்கி மறுமை உலகில் குறைவின்றி வாழவும், பகைவரும் ஆசைப்படும் செம்மையான தோற்றம் கொண்ட புதல்வரைப் பெற்ற செம்மல்கள்' என அகநானூற்றில் செல்லூர்கோசிகன் எனும்

புலவர் கூற்றே அதற்குச் சான்றாகும். இதை,

'இம்மை உலகத்து இசையோடும் விளங்கி

மறுமை உலகமும் மறுவின்றி எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சி

சிறுவர் பயந்த செம்மலோர்' (அகநா.66)

என்ற அவரது பாடல் உணர்த்தும். மக்கட் சிறப்பைக் கூறியதோடு அந்த மக்களைப்

பெற்றோரை 'செம்மலோர்' எனப் பாராட்டு

வதும் இங்கு குறிக்கத்தக்கது.

கம்ப நாட்டாழ்வாரும் இம்மையிலும்

மறுமையிலும் இன்பமும் புகழும் தருவது

மக்கட்செல்வமே என்பார். இதை,

'உரிமை மைந்தரைப் பெறுகின்ற உறுதுயர் நீங்கி

இருமையும் பெறற் கென்பது பெரியவரி யற்கை'.

(அயோ.கா. 6. பா.65)

என்ற பாடல் அடிகளால் அறியலாம்.

மேற்கூறிய சான்றுகள் இம்மையிலும் மறுமையிலும் வாழ்க்கையை இன்புறச் செய்வது பிள்ளைச் செல்வமே என்பதை வலியுறுத்துகிறது.

முன்னோர்களுக்கு பிதிர்க்கடன் செய்யும் சடங்குகளை அவர்களின் பிள்ளைகளைக் கொண்டு செய்வது மரபாதலால், அந்தப் பிள்ளையைப் பெறாதவர்கள் சமூகத்தில் இரங்கத்தக்கவர்களாக அந்தக் காலத்தில் கருதப்பட்டனர்.

கோப்பெருஞ்சோழனும் புலவர் பொத்தியாரும் 'உடலொடு உயிரியைந்தன்ன' நட்பினர் ஆவர். சோழன் வடக்கிருக்கப் போவதை அறிந்த புலவர் அவனோடு உயிர்துறக்க இடம் வேண்டுகிறார். பொத்தியாரின் மனைவி கருவுற்றிருப்பதை அறிந்த சோழன் 'புதல்வன் பிறந்தபின் வா' எனக்கூறி அனுப்பி விடுகிறான். இதை,

'... நின் வெய்யோள் பயந்த

புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென

என்னிவ ணொழித்த வன்பி லாள'

(புறம் பாடல் 222 வரி 2-4)

என்ற அடிகள் உணர்த்தும்.

பாண்டியன் அறிவுடைநம்பி புறநானூற்றில் பாடிய ஒரே பாடலில் மக்கட்பேற்றின் சிறப்பு பேசப்படக் காணலாம். அந்தப் பாடலில் செல்வம் பலவற்றையும் படைத்து பலரோடுகூட உண்ணும் பெருஞ்செல்வத்தை உடையவராய் இருந்தாலும் அறிவை இன்பத்தால் மயக்கும் புதல்வர் இல்லையென்றால், வாழ்வால் முடிக்கக்கூடிய பொருளே இல்லை; வாழ்வைக் குறைவின்றி முடிப்பது மக்கட்செல்வமே என்பான். இதை,

'மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே'

(புறம். 188. வரி 6-7)

என்ற பாடலடிகளால் அறியலாம். இதில் 'பயக்குறை' என்ற சொல் புதல்வரைப் பெற்றால் ஒழிய வாழ்வு நிறைவுறாது என்பதைச் சொற்செறிவோடு கூறுவதும் 'மயக்குறுமக்கள்' எனும் சொல் குழந்தைகளின் செயல்பாடு தரும்

இன்பம் பெற்றோர் அறிவையே மயக்கச் செய்யும் என்பதை உணர்த்துவதும் சிறப்பாகும்.

மக்கட்பேறும் திருவள்ளுவர் கூறுவதைப்போல், அறிவறிந்த மக்கட்பேறாய் அமைதல் வேண்டும். அவ்வாறமைய, பெற்றோரும் அறநெறியொடு வாழ்ந்து ஒழுக்கம் குன்றாதவராய் விளங்க வேண்டும். அதனால்தான், அவர்

அறிவறிந்த மக்கட்பேறும் 'குலனுடையார் கண்ணே உள' என்றார். 'குலம் சுரக்கும்

ஒழுக்கம் குடிகட்கெல்லாம்' என்று கம்பன்

கூறுவதும் நோக்கத்தக்கது.

'சிறுவர் பயந்த செம்மலோர்' எனப் பெற்றோர் சிறப்பிக்கப்பட்டதையும் இங்கே நினைவுகூரலாம். பாரதிதாசனும் 'எந்தை, தாய், நல்லொழுக்கம் உடையவர்கள் என்பதால், கற்றவரில் ஒருவரென ஆக்கி வைத்தார்' (குடும்ப விளக்கு) என மக்கட்பேறு சிறக்க பெற்றோரே காரணம் என்பதை வலியுறுத்துவதும் நோக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com