

எட்டயபுரம் பாரதியார் இல்லம் சீரமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதால், இந்த ஆண்டு வழக்கம்போல டிசம்பர் 11-ஆம் தேதி மகாகவி பாரதியார் பிறந்த தினத்தில் பாரதியார் இல்லத்தில் கூடுவதும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்வதும் இயலாது என்று தெரிவிக்கிறது மாவட்ட நிர்வாகம்.
அதேபோல, பாரதி அன்பர்களும், இலக்கிய அமைப்புகளும், பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்களும் கலந்து கொள்ளும், பாரதியார் இல்லத்தில் இருந்து மணிமண்டபத்துக்கான ஊர்வலமும் இந்த ஆண்டு சாத்தியப்படாது என்று நமது நிருபர் சங்கரேஸ்வர மூர்த்தி தெரிவிக்கிறார்.
அதனால் நாம் அனைவரும் இந்த ஆண்டு பாரதியார் மணிமண்டபத்தில்தான் கூடுகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளுக்கு இன்னும் நான்கு நாள்கள்தான் இருக்கின்றன. எட்டயபுரம் குறித்து விரிவாக எழுதிய நீங்கள், மதுரையில் நடைபெற இருக்கும் 'மகாகவி பாரதியார் விருது' விழா குறித்து எதுவும் ஏன் எழுதவில்லை என்றும், இந்த ஆண்டுக்கான விருது பெறும் பாரதி அறிஞர் அல்லது ஆய்வாளர் யார் என்று கேட்டும் குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இனியும் அதை வெளிப்படுத்தாமல் இருப்பது நியாயமே இல்லை.
தனது முதல் மொழியாக்க முயற்சியாக சிறுமியாக இருக்கும்போதே பாரதியாரில் தொடங்கியவர் இப்போது அகவை 86-ஐ எட்டிவிட்ட எழுத்தாளர் பிரேமா நந்தகுமார். எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கர்நாடக சங்கீதத்தில் புலமையுடையவர் என்று பன்முகத் திறமை கொண்ட பிரேமா நந்தகுமாருக்கு அறிமுகம் தேவையில்லை.
திருநெல்வேலி மாவட்டம் கார்கோடகநல்லூரில் பிறந்த பிரேமா நந்தகுமார் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் பேசவும், திறம்பட எழுதவும் புலமை பெற்றவர்.
பாரதியார் குறித்து சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிவு செய்த பெருமைக்குரியவர் அவர்.
கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியில் இயங்கி வரும் பிரேமா நந்தகுமார் இதுவரையில் எழுதியிருக்கும் நூல்கள் 72. தங்களது ஸ்ரீரங்கம் வீட்டில் நந்தகுமார் தம்பதி நூலகம் போலப் போற்றிப் பாதுகாத்து வரும் புத்தகங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேல்.
டிசம்பர் 11 மாலை 5.30 மணிக்கு, மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள, மகாகவி பாரதியார் ஆசிரியராகச் சிறிது நாள்கள் பணியாற்றிய சேதுபதி மேல் நிலைப் பள்ளி அரங்கத்தில் திருமதி பிரேமா நந்தகுமாருக்கு 'தினமணி' மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவுக்கு பாரதி அன்பர்களும், தினமணி வாசகர்களும், தமிழ்ப் பற்றாளர்களும் திரளாக வர வேண்டும் என்கிற எனது தனிப்பட்ட அழைப்பாக இதை எடுத்துக் கொள்ள விழைகிறேன். விருது வழங்கி கெளரவிக்க இருப்பவர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன்.
நான் தஞ்சைக்குச் சென்றிருந்த போது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ் கல்வித் துறையின் தலைவர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தனிடமிருந்து வாங்கி வந்த புத்தகங்களில் முக்கியமானது பாரதியார் பாடல்களின் ஆய்வுப் பதிப்பு. பேராசிரியர் ம.ரா.போ.
குருசாமி பதிப்பாசிரியராக இருந்து 1987-ஆம் ஆண்டு அந்த ஆய்வுப் பதிப்பு வெளிக்கொணரப்பட்டது. அதன் பிறகு நான்கு பதிப்புகள் கண்டுவிட்டது இந்த ஆய்வுப் பதிப்பு.
ம.ரா.போ. குருசாமியின் தலைமையில், யாப்பியல் வகைமைப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட ஆய்வுப் பதிப்பு இது.
கவிதைகளை திரள்படுத்தி பாட பேத, பிரதி பேதங்களைக் குறித்ததுடன் , பின்னிணைப்புகள் சிலவும் உருவாக்கி முதற்படி தயாரித்துக் கொடுத்து உதவியவர் பெரியவர் சீனி.விசுவநாதன் என்றால், இந்தப் பணியில் 'சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.இராமச்சந்திரனின் பங்களிப்பும் கணிசமாகவே இருந்திருக்கிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியமும், அவரைத் தொடர்ந்து பதவியேற்ற முனைவர் ச.அகத்தியலிங்கமும் இதை வெளிக்கொணர ஊக்கமூட்டியவர்கள்.
அணிந்துரை வழங்கி இருக்கும் 'சிலம்புச் செல்வர்' ம.பொ.சி., பாரதியார் கவிதைகளின் தொகுப்பாக இதுவரை வெளிவந்த பதிப்புகளில் காணப்படும் கருத்து முரண்களை அகற்றி, இலக்கணப் பிழைகளை நீக்கி, முந்தைய பதிப்புகளில் திளைத்துப் போயிருந்த அச்சுப் பிழைகளையும் களைந்து பிழையற்ற பதிப்பை உருவாக்கி இருப்பதாகக் கூறியிருப்பது உண்மையிலும் உண்மை.
பாரதியாரின் கவிதைகளை அவை புனையப்பட்ட காலத்தையொட்டி வரிசைப்படுத்தி, கவிதை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வரிசை எண் கொடுத்து, சிலவற்றின் தலைப்பை மாற்றி, தேவைப்பட்ட இடத்தில் புதிய தலைப்பைத் தந்து இந்தப் புதிய பதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பில் தரப்பட்டுள்ள 267 கவிதைகளில் உள்ள 2,576 செய்யுள்களுக்கும் தனித்தனியே எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாரதியாரும், அவருக்குப் பிந்தைய காலத்துப் பதிப்புகளை வெளியிட்டவர்களும் எழுதிய முன்னுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. 259 பக்கங்களைக் கொண்ட பின்இணைப்பில், பாரதியாரின் கவிதைகளுடன் தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளும் தரப்பட்டுள்ளன. அச்சில் வெளிவந்த முதல் படிவம்தான் இதில் இடம் பெறுகிறது. பாரதியாரே திருத்தி இருந்தாலும் அந்தத் திருத்தங்கள் அடிக்குறிப்பில்தான் இடம் பெறுகின்றன.
மகாகவி பாரதியின் பற்றாளர்களும் சரி, ஆய்வாளர்களும் சரி கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆய்வுப் பதிப்பு இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வேண்டுகோள். அச்சுக்கலை மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டுவிட்டது. நல்ல வடிவமைப்புடனும், புதுப் பொலிவுடனும் ஐந்தாவது பதிப்பை விரைவில் வெளிக்கொணர வேண்டும்!
பாரதியார் குறித்தே எழுதிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனது பழைய நாட்குறிப்பைப் புரட்டச் சொன்னது உள்மனது. அதில் இருந்து தேர்ந்தெடுத்தது எப்போதோ எழுதி வைத்திருந்த இந்த வரிகள்-
சுப்பிரமணிய பாரதி
அக்கினிக் குஞ்சல்ல
எரிமலைப் பிழம்பு;
மின்னலை விழுங்கி
நெருப்பை உமிழும்
கவிதைப் பிரவாகம்;
பொது ஆண்டு
கிறிஸ்துவுக்கு முன்
கிறிஸ்துவுக்குப் பின்;
தமிழ் இலக்கியம்
பாரதிக்கு முன்
பாரதிக்குப் பின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.