முனைவர் ப. சுடலைமணி
குறுந்தொகையில் களவொழுக்கத்தில் இரவுக் குறியிடத்துத் தலைவியைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த தலைவன், தன் உள்ளத்துக்கு உரைத்ததாக கபிலர் எழுதிய குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று காணப்படுகிறது. தலைவி குறிப்பிட்ட இடத்துக்கு இரவில் யாரும் அறியா வண்ணம் தலைவன் சென்றான். தன்னால் முடிந்த அனைத்துக் குறிப்புகளையும் தலைவிக்கு அனுப்பினான்.
தலைவன் குறியிடத்திலிருந்து அனுப்பிய ரகசியக் குறிப்புகள் சரியான முறையில் தலைவியைச் சென்றடையவில்லை. தலைவி இறுதி வரையிலும் தலைவனைச் சந்திக்க குறியிடத்துக்கு வரவில்லை. ஆதலால், அவனுக்குத் தலைவியைக் பார்க்காமல் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.
தலைவனின் துயரத்தைக் கண்ணுற்ற பாங்கன் அவனிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தான். தலைவன் தன்னுடைய துயரத்தை மறைத்து, நெஞ்சுக்குக் கூறியது போன்று பாங்கனுக்குப் பதில் கூறுகிறான்.
தலைவியைச் சந்திக்க முடியவில்லை என்று மட்டும் கூறாமல் தலைவியின் உறவினர்களைப் பற்றியும் கூறுகிறான். அதாவது, குறிஞ்சி நில மக்களின் வேளாண்மை சார்ந்த அறிவையும் கூறு
கிறான். ஐவனம் என்று அழைக்கப்படுகின்ற மலைநெல் விளைவித்த செய்தியையும், ஈரப்
பதமிக்க பகுதிகளில் மலைநெல்லை விதைத்தனர்; அந்த இடத்தில் வளர்ந்த களைச் செடிகளை அகற்றியதையும் கூறுகிறான்.
வேளாண்மை நிலங்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாத்து பயிர்களைக் காப்பாற்ற இயற்கையான வேலிகளை அமைத்தனர். நிலங்களைச் சுற்றிலும் காந்தள் செடிகளை உயிர் வேலியாக அமைத்திருந்தனர் என்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலங்கள் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே இருந்திருக்கின்றன; இதைச் சிறுகுடி என்று வழங்கி வந்ததை அறியமுடிகிறது.
குறிஞ்சி நில மக்கள் வேளாண்மை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் உணவுக்காக வருந்துவதில்லை. மலைப் பகுதிகளில் வேட்டையாடிய யானையின் தந்தங்களைப் பாதுகாத்து வைத்திருந்தனர். அவற்றை விற்று அதற்கு மாற்றாகக் கிடைத்த பொருள்களைக் கொண்டு உணவுப் பண்டங்களைப் பெற்றுப் பசியாறினர். குறிஞ்சிநில மக்களிடையே பண்ட மாற்றுமுறை இருந்ததை அறிய முடிகிறது. வேளாண்மை பொய்த்த விடத்து மலைபடு பொருள்களைக் கொண்டு சிறிய அளவிலான வணிகத்தை மேற்கொண்டனர்.
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற்கு அரிய பணைப்பெருந் தோளே.
(குறுந்தொகை: 100)
அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலைகளையுடைய காட்டு மல்லிகைச் செடியையும், பசுமையான கற்றாழையையும் களைந்தெறியும், காந்தள் செடிகளையே இயற்கை வேலியாக உடைய, சிற்றூரில் உள்ளவர்கள், உணவு கிடைக்காமல் பசியால் வாடினால், அஞ்சாமையுள்ள யானையின் தந்தத்தை விற்றுப் பெற்ற பொருளால் உணவை வாங்கி உண்ணுவர். அத்தகையோர் வாழும் சிற்றூரில், வல்வில் ஓரியின் கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் உள்ள பாவையைப் போல அழகுடையவளின் மூங்கில் போன்ற பெரிய தோள்கள் இனி தழுவிக் கொள்ளுவதற்கு அருமையானவை என்கிறான்.
மேலும், இந்தப் பாடலில் குறிஞ்சி நில மன்னனாக விளங்கிய வல்வில் ஓரி பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தலைவன் தன் காதலி குறித்து கூறுமிடத்து, வலிய வில்லையுடைய ஓரி என்னும் வள்ளலின் கொல்லி மலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாவை போன்றவள் என் காதலி என்று சிறப்பித்துக் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஓரியின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடிகிறது. கபிலர், கொல்லிமலையை ஓரிக்கு உரிமையுடையதாகக் கூறுகிறார். ஓரியின் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களில் குறிஞ்சி மலை மக்கள் வாழ்ந்து வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.