

'மாதங்களில் நான் மார்கழி' என்று கண்ணன் கீதையில் கூறுகின்றான். அந்த மார்கழியின் முக்கியமான சமய விரதமாக அமைந்திருப்பது பாவையர் நோன்பு. திருவெம்பாவையும், திருப்பாவையும் பாவையர் நோன்பை ஒட்டி எழுந்த தமிழ் இலக்கிய இசைப் பூங்கொத்துகள். மார்கழி வைகறை வாசலின் இன்சொற்கோலங்கள்.
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருவண்ணாமலையிலும், ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை ஸ்ரீ வில்லிபுத்தூரிலும் மலர்ந்தன.
மாணிக்கவாசகர் திருவாதவூர் தந்த அருட்செல்வர்; பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர்; கல்வியும் ஒழுக்கமும் மிக்கவர். மன்னரால் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டமும் பெற்றவர். மன்னருக்காக குதிரைகள் வாங்கச் சென்று திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்று சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர்.
ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் தந்த அருட்செல்வி; நந்தவனத் துளசியருகே விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட அற்புதக் குழந்தை. இதயத் துடிப்பெல்லாம் கடவுள் தாகமாக வளர்ந்த சின்னஞ்சிறுமி. பெருமைமிக்க பெரியாழ்வாரிடம் வளர்ந்தமையால் ஆழ்வார் திருமகளார் என்னும் நற்பெயரும் பெற்றார். கடவுளுக்குக் கட்டிய மாலையைத் தானே சூடி அழகு பார்த்த பிறகு கோயிலுக்குத் தந்தவள். சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார்.
இருவருமே இறை ஒளியில் கலந்த பெருமையினர். இறை ஒளியைத் தம் அழகிய பாடல்களில் வழங்கிய அற்புதமான ஞான தீபங்கள். திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை. நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை.
பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மிகப் பண்பாட்டு விழிகள். பாவைப் பாட்டுகளோ அவ்விரு விழிகளின் 'பாவைகளாக' ஒளிர்பவை.
துயில் நீக்கம் என்னும் ஆன்மிக மையம் கொண்ட ஆன்மிக அலைகள் இரு பாவைகளிலும் விரிகின்றன. சிறுமியர் தம்மொத்த வயதினரை அதிகாலையில் எழுப்புகின்றனர்; நீராட அழைக்கின்றனர்; துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்களாக அமைகின்றன.
துயில் எழுப்புதல் என்னும் ஆன்ம விழிப்பூட்டல் உலக இலக்கிய அரங்கில் இத்துணை அழகியல் நலத்துடன் அமைந்துள்ளதா என்பது கேள்விக்குறி. பாவைப் பாட்டுகள் நிச்சயம் தமிழ்ப் பெருமிதங்களில் முக்கியமானது.
எழுமின்!!! விழுமின்!!! என்பதற்கேற்ப இன்னமுதப் பாவைப் பாடல்களின் நுழைவாயில் நாடகப் பாங்கினது உள்ளே துயில்வோர் வாசலில் எழுப்புவோர். நேரமோ இருள் நீங்கும் அதிகாலை; எழுப்பும் குரலிலோ நட்புரிமை. சிலபோது எள்ளல்; சிலபோது நகையாடல்; சிலபோது செல்லக் கடிந்துரைகள். ஆனால், எப்போதும் நேயமிகு நெருக்கம்.
'வன்செவியோ நின்செவிதான்?' (1-திருவெம்பாவைத் தோழி). 'ஊமையோ அன்றிச் செவிடோ?' (9-திருப்பாவைத் தோழி). 'ஒள்நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?' (4-திருவெம்பாவைக் குரல்) . 'எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?' (15-திருப்பாவைக் குரல்). 'நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றவள் நாணாமே போனதிசை பகராய்!' (6-திருவெம்பாவையின் செல்லக் கடிந்துரை). 'கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?' (10-திருப்பாவையின் செல்லக் கடிந்துரை). இவ்வழகிய உரையாடல் சித்திரங்கள் ஆன்மிக அன்பர்களுக்கு ஆன்மத் துயிலெழுப்பும் அற்புதக் குரல்கள்.
மாணிக்கவாசகரின் திருப்பாவை சிவமணமும், ஆண்டாளின் திருப்பாவை மால்மணமும் ஒன்றையொன்று வெல்லும் வண்ணம் உன்னதம் பெறுகின்றன. மத்திட்டுக் கடைந்த தயிரில் மிதக்கும் வெண்ணெய்த் திரட்சியாக இறைமுன் நின்று நெகிமும் போற்றித் துதிகளை இரு பாவைகளும் ஏந்துகின்றன.
'தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்' (2) , 'ஆரழல்போல் செய்யா. வெண்ணீறாடி - மையார் தடங்கண் மடந்தை மணவாளா' (11) . 'செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசே அடியோங்கட்கு ஆரமுதே' (11) என்று இன்னும் பலவாறாகவும் தித்திக்கும் தொடர்களில் சிவமணம் தருகிறது திருவெம்பாவை.
'ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் - கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்' (1) , 'ஆழி மழைக்கண்ணா' (4) , 'மாயன் மணிவண்ணன்' (16). 'சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' (14) என்று பலவாறு புகழ்கிறது திருப்பாவை. 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை - தூய பெருநீர் யமுனைத் துறைவனை - ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை - தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை' (5)என வேகப் படிக்கட்டுகளேறித் துரத்தித் தொட முயல்கிறது கோதைத் தமிழ்.
பாடல்களில் ஒலிக்கும் புராணச் செய்திகளில் மாணிக்கவாசகரின் ஞானச்சிறகும் ஆண்டாளின் காதல் சிறகும் விரிகிறது. 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள்தடங்கண் மாதே வளருதியோ?' (1), 'பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் - போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே' (10) என்று அடிமுடி தேடிய அண்ணாமலைப் புராணத்தின் அற்புதச் சுட்டாக உணரினும் இவ்வரிகளின் ஞான மணத்தை நன்கு உணரலாம்.
கோதைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயர்பாடி, தோழியர் ஆயர் கன்னிகையர், வடபத்ரசாயி திருக்கோயில் நந்தகோபன் மாளிகை, அங்கு எழுந்தருளியவன் ஆயர்பாடிக் கண்ணனாகின்றான். 'ஆயர்குலத்து அணிவிளக்கு' (5). 'ஓங்கி உலகளந்த உத்தமன்' (3), 'பேய்முலை நஞ்சுண்டு - கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி - வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து' (6). 'புள்ளின் வாய் கிண்டான்' (13), 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் - ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான்' (25) என்று பலவாறு புராணச் செய்திகளால் போற்றி மகிழ்கிறாள்.
இருவர்தம் பாவைப் பறவைகளும் தமிழ் இலக்கிய பக்திவெளியில் உயரங்களில் பறப்பவை. வாதவூரரும், வில்லிப்புத்தூரியும் தந்த அழகிய பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் அனைவரும் கேட்டும், படித்தும், பாடியும் இன்புறுவோம்; ஆன்மிக அமுதவளம் பெறுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.