கம்பராமாயண யுத்த காண்டத்தில், கடலரையனிடம் உரையாடி, ஆழ்ந்து விரிந்து இலங்கையைச் சூழ்ந்து கிடக்கும் பேராழியை பல காத தூரம் நீண்டு கிடக்கும் மலைகளின் கற்பாறைகளைக் கொண்டு நிரப்பி சேது அமைத்து சீதையை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது. சுக்ரீவனின் ஆணையை சிரமேற்கொண்டு வானர சேனைகள் கரிய மலைகளைப் பெயர்த்து பெருங்கற்களாக தூக்கி வந்து, அணி அணியாக குழுமியிருந்த வானரங்களின் கைகளில் பயணித்து கடலில் வீசப்பட்டன. அதனால், தெறித்த நீரானது தேவலோகத்துக்கும் சென்றது என்பதாகக் காட்சிப்படுத்துகிறார் கம்பர்.
இவ்வாறு மலையில் இருந்து கற்களைப் பெயர்த்து குரங்குகள் எடுக்கும் காட்சியை, கடலில் நிரப்பும் அணியை, குழுவாக செயலாற்றும் முறையை, கூட்டு முயற்சியை கம்பர் நயம்பட உரைத்துள்ளார்.
விரிந்து கிடந்த வானர சேனையில் ஒரு குழு திமிறிய மலைகளிலிருந்து கற்களைப் பாறைகளாகப் பெயர்த்து எடுப்பதை மும்முரமாகச் செய்தது. அந்த பெருங்கற்களை சில வானரங்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றன. சில வானரங்கள் அவற்றை தலைமேல் வைத்து தூக்கிச் சென்றன. சில வானரங்கள் கூடிநின்று அந்தப் பாறைகளை வாங்கி கடலுக்குள் போட்டு நிரப்பின. இந்தக் காட்சிகளைக் கண்டு, பணி விறுவிறுப்பாக நிறைவேறுவதை எண்ணி உற்சாகப் பெருக்கில் சில வானரங்கள் ஆனந்தக் கூத்தாடி ஆரவாரம் செய்தன. சில குரங்குகள் ஆட்டம் போட்டன, சில மந்திகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஒலியெழுப்பி பாட்டுப் பாடின.
பேர்த்தன மலை சில; பேர்க்கப்பேர்க்க நின்று
ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;
தூர்த்தன சில; சில தூர்க்கத்தூர்க்க நின்று
ஆர்த்தன சில; சில ஆடி பாடின
- கம்பராமாயணம்/யுத்த காண்டம் /
7-சேது பந்தனப் படலம்.
இந்தக் காட்சிகள் இன்றும் நமக்கு பல ஐயங்களுக்கு விடை தருகின்றன. ஓர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல குழுக்களாகப் பணியாற்றுகின்றனர்.
அவரவருக்கான பணியை செய்து முடிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். சிலருக்கு மற்றவர் பணியைப் பார்த்து கருத்து சொல்வதே வேலையாக இருக்கும். இன்னும் சிலர் வருவதும் போவதுமாக இருக்கின்றனர்; எதுகுறித்தும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக உள்ளனர்.
சிலர் எந்தப் பணியும் செய்யாமல் நிறைவு விழாவில் வந்து புகழ்பாடுகின்றனர்; இவ்வாறு எந்த வேலையும் செய்யாதவர்களும் இருக்கிறார்களே? என்றெல்லாம் பலருக்கும் மனக்குறைகள் இருக்கலாம். இவ்வாறு உள்ள குழுக்கள் இன்று, நேற்றல்ல இராமாயணக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளனவோ? என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு கம்பரின் பாடல் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.